search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur murder"

    கள்ளக்காதல் பிரச்சனையில் மகள் தற்கொலைக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொன்றார்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல், அரசு பஸ் டிரைவர். விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 2 மகள்கள் உள்ளனர்.

    மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18.9.18 அன்று குமரவேலும் ஆனந்த வள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சனையில் ஆனந்தவள்ளி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மகள் தற்கொலைக்கு காரணமான குமரவேல் மீது ஏழுமலைக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்றிரவு விருத்தாசலத்தில் குமரவேலுவை சந்தித்த ஏழுமலை, அவருடன் நைசாக பேச்சு கொடுத்து மது அருந்த அழைத்து சென்றார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அங்கு இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

    குமரவேலுக்கு போதை தலைக்கேறியதும், ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் கொண்டு வந்த கத்தியால் குமரவேல் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

    பின்னர் உடலை ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சிக்கு சென்றார். அங்கு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான சுரங்கத்திற்கு எதிரே உடலை போட்டு விட்டு ஊர் திரும்பினார். விருத்தாசலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்த போது ஆட்டோவில் உள்ள ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஏழுமலையிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் செந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கொலை தொடர்பாக ஏழுமலையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×