search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Armstrong"

    • தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா?
    • பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூரிலுள்ள அவரது வீட்டின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத்தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்?

    ஏற்கனவே சேலம் மற்றும் கடலூரில் அதிமுக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

    திமுக ஆட்சியில் நேர்மையான அரசு அதிகாரிகள் முதல் அரசியல் தலைவர்கள், அப்பாவி பொதுமக்கள் வரை நாள்தோறும் நிகழும் படுகொலைகள் தமிழ்நாட்டில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயத்தை எழுப்புகிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பட்டப்பகலில் நடைபெறும் படுகொலைகளை தடுக்க முடியவில்லை. மக்கள் சாலைகளில் நிம்மதியாக நடமாடக்கூட முடியவில்லை. இதெற்கெல்லாம் காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களை படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் முதல் அப்பாவி பொதுமக்கள் வரை படுகொலை செய்யப்படும் கொடூரங்கள் தொடராது தடுத்திட, இனியாவது காவல்துறையை முடுக்கிவிட்டு கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை விரைந்து சீர்செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன்.

    சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
    • திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பாஜக மாநில முன்னாள் தலைவரும் இணையமைச்சருமான எல்.முருகன் இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சமூகவிரோத கும்பல்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன்..

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள், பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தபோது சமூக விரோத கூலிப்படை கும்பல் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் போலி திராவிட மாடல் ஆட்சியில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கும் மற்றும் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவருக்கும் பாதுகாப்பில்லை. அதுவும் சென்னை பெரம்பூர் போன்ற முக்கிய நகர்ப்புறத்தில் சமூக விரோத கும்பல் படுகொலை செய்து தப்பி ஓடுவது போலி திராவிட மாடல் திமுக அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பில் இருக்கும் காவல் துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதையே இந்த படுகொலை நிரூபித்துள்ளது.

    வேங்கை வயல், கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணம் ஆகிய சம்பவத்தில் ஒடுக்கப்பட்ட மக்களே அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில், செயலற்று நடவடிக்கை எடுக்காமல் நின்ற திமுக அரசின் மெத்தனத்தின் தொடர்ச்சியே சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் வந்து நிற்கிறது.

    போலி திராவிட மாடல் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார். 

    • அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு கடும் கண்டனம்.

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்மநபர்கள் வெட்டியதில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இவரது படுகொலை சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கலும், தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருமுற்றேன்."

    "திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி. மாயாவதி அவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களுக்கும், மறைந்த அன்னாரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்."

    "ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது? கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது? காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்கு சட்டம் ஒழுங்கைத் தள்ளிய விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம்."

    "திரு. ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அன்னாரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு திரு.

    முக ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மர்மநபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரிணை.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இன்று தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

    இதை சற்றும் எதிர்பாராத ஆம்ஸ்ட்ராங் நிலைதடுமாறி அங்கேயே கீழே விழுந்தார். இதை பார்த்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மர்ம நபர்கள் தப்பி ஓடியதை அடுத்து துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனை செல்வதற்குள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், தப்பி சென்ற கொலையாளிகளை தேடும் பணிகளை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ×