search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arranged for students to study"

    • நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்.
    • மாணவிகள் முதன் முதலாக கால் பதித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையின் மிகப் பழமையான கலை அறிவியல் கல்லூரி என்ற பெருமையை நந்தனம் அரசு கல்லூரியை சாரும். இந்த கல்லூரி 1969-ம் ஆண்டு மாணவர்களுக்காக மட்டும் தொடங்கப்பட்டது.

    அண்ணாசாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1901-ல மதராஸ் பள்ளி தொடங்கப்பட்டது. 1918-ல் காயிதே மில்லத் கல்லூரியும் அதே வளாகத்தில் ஆரம்பிக்கப் பட்டது. 1969-ல் ஆற்காடு நவாப் பெண்களுக்கு தனியாக மகளிர் கல்லூரி தொடங்கினார். அப்போது தான் நந்தனத்தில் ஆண்களுக்கு தனியாக கல்லூரி உருவானது.

    இக்கல்லூரியில் படித்தவர்கள் பலர் முக்கிய தலைவர்களாக உருவாகி சாதனை படைத்து இருக்கிறார்கள். பெருமை சேர்த்த இக்கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் போராட்டம், மோதல், பஸ்சின் கூரையின் மீது ஆட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன சம்பவங்கள் நடந்தன. இதனை கல்லூரி நிர்வாகமும், போலீசாரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகள் இந்த ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்டனர். அரசின் அனுமதி பெற்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நேற்று ஒரே நாளில் 200 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். அதில் 130 பேருக்கு கல்லூரியில் சேர கடிதம் கொடுக்கப்பட்டது.

    மாணவர்கள் மட்டும் படித்து பந்த கல்லூரியில் மாணவிகள் முதன் முதலாக கால் பதித்துள்ளனர். பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி, பி.பி.ஏ. உள்ளிட்ட அனைத்து பாடப் பிரிவுகளிலும் ஆர்வத்துடன் மாணவிகள் சேர்ந்தனர்.

    இதுகுறித்து நந்தனம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசன் கூறியதாவது:-

    இக் கல்லூரியில் மொத்தம் 1192 இடங்கள் உள்ளன. 20 சதவீதம் இடங்களை அதிகரிக்க அரசு அனுமதி கொடுத்ததின் பேரின் 1480 இடங்கள் உள்ளன. குன்றத்தூர், நெமிலி, பெரும்பாக்கம் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவர்கள் அதிகளவில் வருவார்கள்.

    முதலில் இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்கள், பின்னர் தங்கள் பகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் சேர்ந்து விடுவதால் இங்கு இடங்கள் காலியாகி விடுகிறது.

    வருடத்திற்கு 200 முதல் 300 இடங்கள் காலியாக கிடக்கின்றன. அதனை சரி செய்வதற்காக மாணவிகளை சேர்க்க முடிவு செய்தோம்.

    குயின்மேரீஸ், காயிதே மிலலத் பெண்கள் கல்லூரிகளை தொடர்ந்து இந்த பகுதியில் மகளிர் கல்லூரி இல்லை. அதனால் அரசிடம் அனுமதி பெற்று தொடங்கி உள்ளோம்.

    முதல் ஷிப்டில் மட்டும் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி வேதியியல், தாவரவியல் பாடப்பிரிவுகள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    மாணவிகள் உற்சாகமாக வகுப்பிற்கு வருகிறார்கள்.

    கல்லூரி வளாகத்தில் எவ்வித ஒழுங்கீனத்தையும் அனுமதிக்க மாட்டோம். பேராசிரியர்கள் தலைமையில் கல்லூரி ஒழுங்கு நடவடிக்கைக் குழு மாணவ- மாணவிகளை கண்காணிக்கும். ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் முதல்வருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த வருடம் எந்த பிரச்சனையும் கல்லூரியில் ஏற்படவில்லை. இக்கல்லூரியின் அடையாளம் மாறிவிட்டது. இனிவரும் காலங்களில் மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். அதற்கான அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கல்லூரி நிர்வாகம் கவனித்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×