search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashtalingam"

    சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
    திருவண்ணாமலை திருத்தலத்தில் அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும். அதேபோல் சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்து சென்னை மக்களுக்கும் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.

    வேதங்கள் நான்கும் வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், ‘வேற்காடு’ என்று பெயர் பெற்ற திருவேற்காடு தலத்துக்கு, அகத்தியர் ஒரு முறை வருகை தந்தார். அப்போது, சிவபெருமானை அவர் பாடிப் பணிந்ததன் பேரில், அவருக்கு சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சியளித்தார். அகத்தியர் வேண்டிய உடன் காட்சி தந்த சிவபெருமானிடம், அன்னை உமாதேவி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

    ‘மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் கேட்ட உடன் உங்கள் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், உலக மக்களுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?’ என்றார்.

    அதன் காரணமாகவே, அனைத்து மக்களும் வழிபட்டு எளிதில் ஈசனின் அருள்பெற திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் உமாதேவியுடன் இணைந்து அஷ்ட லிங்க மேனிகளை இறைவன் வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.

    அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.

    வழிபாட்டு முறை

    பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு. அந்த லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர லிங்கம்


    அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். இது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இங்குள்ள இறைவன் ‘இந்திர சேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் கோவில் கொண்டுள்ளார். அங்கே நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

    ‘தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
    பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
    மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
    ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க’

    அக்னி லிங்கம்

    இரண்டாவதாக வழிபட வேண்டிய அக்னி லிங்கம், திருவேற்காட்டிற்கு தென்கிழக்கில் உள்ள வள்ளிக் கொல்லைமேட்டில் இருந்து சுமார் 3½ கி.மீ. தொலைவில் நூம்பல் என்ற இடத்தில் இருக்கிறது. ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால், இந்த தலத்துக்கு ‘நூம்பல்’ என்று பெயர். இங்குள்ள சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடினால் எதிரிகள் தொல்லை, வழக்குகள் மற்றும் வெப்பம் தொடர்பான பிணிகள் அகலும்.

    ‘பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
    அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
    கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
    கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே’

    எம லிங்கம்

    மூன்றாவதாக வணங்க வேண்டிய எம லிங்கம், நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ள செந்நீர்க்குப்பத்தில் இருக்கிறது. இத்தல இறைவன் மரகதாம்பிகை தேவி சமேத கயிலாசநாதர். இவருடைய சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வணங்கினால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்கு சம்பந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    ‘மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
    கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
    நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
    ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க’

    நிருதி லிங்கம்

    நான்காவதாக வணங்க வேண்டியது நிருதி லிங்கம். செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே பாலீஸ்வரர் என்ற பெயருடன், பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற நாமத்துடன் இறைவன் அருள்கிறார். சுமார் 2,300 ஆண்டுகள் முற்பட்ட இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும்.

    ‘வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
    கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
    கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
    ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்’

    வருண லிங்கம்

    ஐந்தாவது வழிபட வேண்டிய இந்த லிங்கம், செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரராக இறைவன் அருள்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட பாசுரத்தை மனம் உருக பாடி வழிபாடு செய்தால், வீடு கட்டுவதில் உள்ள தடை தாமதங்கள் விலகும்.

    ‘திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
    அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
    கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
    தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க’

    வாயு லிங்கம்

    ஆறாவது லிங்கமான வாயு லிங்கம், திருவேற்காட்டீஸ்வரர் சன்னிதிக்கு வடமேற்கு திசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது. விருத்தாம்பிகை தேவி சமேத வாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

    ‘கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
    அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
    இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
    தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க’

    குபேர லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் ஏழாவது குபேர லிங்கம். பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரங்களை பாடி வணங்கினால், பொன்னும், நவ மணிகளும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    ‘கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
    அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
    பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிறமேனியோடும்
    மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க’

    ஈசான லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இது. வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.

    ‘அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
    சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தி
    திங்களிற் றவன மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற
    எங்கள் ஈசான தேவன் இருவிசும்பெங்கும் காக்க’
    ×