search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Assembly rule 10"

    நொய்யல் ஆற்றை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் ரூ.150 கோடியில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் சின்னாறு மற்றும் காஞ்சிமாநதி இணைந்து நொய்யல் ஆறாக உருப்பெற்று, மேற்கு கிழக்காக, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக சென்று, கரூர் மாவட்டத்தின் நொய்யல் என்ற கிராமத்தின் அருகில் காவிரியில் கலக்கின்றது.

    திருப்பூர் மாநகராட்சி மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளை நொய்யல் ஆறு கடக்கும் போது, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினால் மாசடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைத்து, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைத்தல், தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், நடை பாதை அமைத்தல், கரையோர பூங்கா மற்றும் அலங்கார விளக்குகள் அமைத்தல், அணைக்கட்டு பகுதியினை மேம்படுத்துதல் மற்றும் நதியினை தூர்வாரி சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, வரும் காலத்தில் நொய்யல் ஆறு மாசடையாமல் இருப்பதற்கான பணிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நெடுஞ்சாலைகளில் அதிகமாக சாலை விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, அவ்விடங்களில் சோதனை அடிப்படையில், வாகனப் பதிவெண் பலகையினை படிக்கும் தானியங்கி புகைப்படக் கருவிகள் மற்றும் வாகன கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 25 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பாதுகாப்பு நிதியிலிருந்து அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #TNCM #EdappadiPalanisamy
    ×