search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant commissioner muthalagu"

    ரவுடியிடம் ரூ.5 லட்சம் கேட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் சென்னை அண்ணாநகரில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டை உதவி கமி‌ஷனராக கடந்த ஆண்டு பணிபுரிந்தவர் முத்தழகு. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு பணியில் சேர்ந்த அவர் கடந்த ஆண்டு மே மாதம் வரையில் உதவி கமி‌ஷனராக பணியாற்றினார்.

    தேனாம்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராமபுரம் சமஸ்தான வாரிசான கார்த்திக் சேதுபதி என்பவரை கடத்தி சொத்தை அபகரிக்க ரவுடிகள் சிலர் முயற்சி செய்தனர்.

    இதுதொடர்பான குற்றச்சாட்டை உதவி கமி‌ஷனர் முத்தழகு விசாரித்தார். அப்போது ரவுடிகள் ஒருவனை கைது செய்யாமல் இருக்க அவர் ரூ.5 லட்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக ரவுடியின் சகோதரரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இறுதியில் ரூ.3½ லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

    உதவிகமி‌ஷனர் முத்தழகு பேசியதாக கூறப்படும் ஆடியோ வாட்ஸ்அப்- பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதனை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட முத்தழகு பின்னர் ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படையில் பணி அமர்த்தப்பட்டார்.

    அங்கு உதவி கமாண்டராக பணியில் உள்ளார். ஆடியோ வெளியானதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்தழகு மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்தனர். ஆடியோவில் இருப்பது முத்தழகுவின் குரல்தானா? என்பதை கண்டுபிடிப்பதற்காக அவருக்கு குரல் பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணாநகர் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குடியிருப்பில் உதவி கமி‌ஷனர் முத்தழகு வசித்து வருகிறார். அவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உதவிகமி‌ஷனர் முத்தழகு 1987-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார்.

    பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி கமி‌ஷனர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். சென்னை போலீஸ் வட்டாரத்தில் நன்கு பரிட்சயமான அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவது சக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    ×