search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assistant friend arrest"

    கேரளாவில் மனைவி, மகன், மகளுடன் மந்திரவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டு ஒரே குழியில் உடல்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி புதைக்கப்பட்ட வழக்கில் அவருடைய உதவியாளர் நண்பர் கைது செய்யப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். மந்திரவாதியான இவர் அந்த பகுதியில் ஒதுக்கு புறமான இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் மந்திரவாதத்துக்காக இவரது உதவியை தேடி வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மந்திரவாதி கிருஷ்ணன், அவரது மனைவி சுசீலா, மகன் அர்ஜூன், மகள் ஆர்ஷா ஆகியோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு வீடு அருகே உள்ள உரக்குழியில் புதைக்கப்பட்டு இருந்தனர்.

    இவர்களது உடல்கள் ஒருவர் மீது ஒருவர் என்று வரிசையாக அடுக்கி மூடப்பட்டிருந்தது. இந்த கொலை கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மந்திரவாதி குடும்பத்துடன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடுபுழா, அடிமாலி பகுதியைச் சேர்ந்த லிபீஷ் (வயது28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்திரவாதி கிருஷ்ணனை அவரது உதவியாளர் அனிஷ் கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலைக்கு அனிசுக்கு லிபீஷ் உடந்தையாக இருந்துள்ளார்.

    கைதான வாலிபர் லிபீஷ்.

    மந்திரவாதியை அவரது உதவியாளரே கொன்றதற்கான காரணம் பற்றி லிபீஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

    மந்திரவாதி கிருஷ்ணனிடம் கடந்த 2 வருடங்களாக அனிஷ் உதவியாளராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அவர் தனியாகச் சென்று மாந்திரீகம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். கிருஷ்ணன் அளவுக்கு அவரால் சரியாக மாந்திரீகம் செய்ய முடியவில்லை. இதனால் அவரை தேடி வந்த கூட்டமும் குறையத் தொடங்கியது.

    கிருஷ்ணன் தனக்கு முழுமையாக மாந்திரீகத்தை கற்றுதராதது தான் இதற்கு காரணம் என்று அனிஷ் நினைத்தார். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக எனது உதவியை நாடினார். முதலில் நான் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கிருஷ்ணனை தீர்த்து கட்டினால் அவரிடம் இருக்கும் மாந்திரீக சக்திகள் தனக்கு வந்து விடும். அதன் மூலம் ஏராளமான பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி என்னை சம்மதிக்க வைத்தார்.

    திட்டமிட்டபடி சம்பவத்தன்று நள்ளிரவு மந்திரவாதி கிருஷ்ணன் வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஆடுகளை கத்தியால் கீறினோம். ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணனை இரும்பு கம்பியால் அனிஷ் தாக்கினார். இவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது மனைவி சுசீலாவை நான் கத்தியால் குத்தினேன். அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததால் அவர்களை தூக்கிச் சென்று வீட்டுக்குள் போட்டோம்.

    இதற்கிடையில் குழந்தைகள் அர்ஜூன், ஆர்ஷா ஆகியோரும் விழித்துக் கொண்டனர். அவர்களையும் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு அங்கிருந்த 30 பவுன் நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி விட்டுச்சென்று விட்டோம்.

    மறுநாள் இரவு அங்கு சென்று வீட்டை திறந்து பார்த்த போது சிறுவன் அர்ஜூன் உயிரோடு மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. மந்திரவாதி கிருஷ்ணனும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது மனைவி மற்றும் மகள் பிணமாக கிடந்தனர். இதனால் அருகில் இருந்த உரக்குழியை தோண்டி மனைவி, மகள் பிணத்தை முதலில் போட்டோம்.

    பிறகு கிருஷ்ணன், அர்ஜூனை உயிரோடு அதே குழியில் போட்டு மூடி விட்டு தப்பிச் சென்று விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மந்திரவாதி குடும்பத்தினர் கொலையில் முக்கிய குற்றவாளியான அனிஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கைதான லிபீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    ×