search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "astrologer attack"

    கோவையில் ஜோதிடரை தாக்கி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி உள்பட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் தெக்குபாளையத்தை சேர்ந்தவர் குபேரன். இவரது மனைவி காயத்ரி. இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் திருபுவனம் புளியூரை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பாலமுருகன் (33) என்பவரை பார்க்க சென்றனர்.

    பாலமுருகன் நீர்ஜோதிடம் பார்த்து வருகிறார். ஜோதிடர் தம்பதியின் நிலையை ஆராய்ந்த பின்னர் நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறீர்கள். குறிப்பாக பணக்கஷ்டம் மற்றும் கடன் தொல்லையால் அவதி மற்றும் அவமானப்பட்டு வருகிறீர்கள் என்று கூறினார்.

    ஆமாம் என்று ஒப்புக்கொண்ட தம்பதி இது எப்போது சரியாகும். பரிகாரம் உள்ளதா? என்று கேட்டனர். ரூ.3 ஆயிரம் கொடுத்தால் பரிகாரம் செய்து தருகிறேன். அதற்கு பின்னர் உங்கள் பணப்பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்று கூறினார். தற்போது அவ்வளவு பணம் இல்லை என்று கூறி விட்டு கோவை திரும்பினர்.

    சிறிது நாட்கள் கழிந்து ஜோதிடரை போனில் தொடர்பு கொண்ட தம்பதி பரிகாரம் செய்ய பணம் தயாராக உள்ளது வீட்டிற்கு வந்து பரிகாரம் செய்து தரவேண்டும் என்று கூறினர்.

    இதனையடுத்து கடந்த 14-ந்தேதி ஜோதிடர் பாலமுருகன் கோவை வந்தார். காந்திபுரத்தில் காத்திருந்த அவரை தம்பதி வந்த காரில் ஏற்றிக்கொண்டனர். பரிகாரம் செய்வது அக்கம் பக்கத்தினருக்கு தெரியக்கூடாது என்று கேட்டுக்கொண்டனர். அதற்கும் ஜோதிடர் சம்மதித்தார்.

    காரில் இருந்து இறங்கிய பின்னர் வீட்டுக்குள் சென்றனர். வீட்டில் தம்பதி உறவினர்கள் போத்திராஜ், சதீஷ் உள்பட 4 பேர் இருந்தனர். கதவை சாத்திய பின்னர் குபேரன் ஜோதிடரை தாக்கினார். நாங்கள் பணகஷ்டத்தில் இருப்பது உனக்கு தெரியும். பரிகாரம் எல்லாம் வேண்டாம். நீயே ரூ.40 லட்சம் கொடு என்று மிரட்டினர்.

    பரிகாரம் செய்ய வந்த ஜோதிடர் அதிர்ச்சியடைந்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த கும்பல் ஜோதிடரை சரமாரியாக தாக்கியது. வலி தாங்கமுடியாத ஜோதிடர் ரூ.40 லட்சம் முடியாது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினார்.

    ரூ.5 லட்சத்துக்கு ஒப்புக்கொண்ட கும்பல் உனது தந்தையை மதுரை மாட்டுத்தவணியில் காத்திருக்கும் எங்கள் நண்பர் பாண்டி என்பவரிடம் கொடுக்க சொல் என்று மிரட்டினர். அதன்படி ஜோதிடர் தனது தந்தையிடம் அவசர தேவை என்று கூறி ரூ.5 லட்சத்தை மதுரை மாட்டுத்தாவணியில் காத்திருக்கும் பாண்டி என்பவரிடம் கொடுக்கும்படி கூறினார்.

    ஜோதிடர் தந்தையும் ரூ.5 லட்சத்தை எடுத்துக்கொண்டு மாட்டுத்தாவணியில் காத்திருந்த பாண்டி என்பவரிடம் கொடுத்தார். பணம் பெற்றுக்கொண்ட பாண்டி கோவை கும்பலுக்கு பணம் பெற்றுக்கொண்டாக தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து காரில் ஜோதிடரை ஏற்றி மெயின் ரோட்டில் இறக்கி விட்டனர். மேலும் இது பற்றி வெளியே கூறினால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டினர்.

    தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜோதிடர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்த பின்னர் நரசிம்மநாயக்கன்பாளையம் போலீசில் இது குறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தேவராஜ் வழக்குப்பதிவு செய்து தம்பதி உள்பட 6 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ×