search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Atcheeshwarar Temple"

    • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர்களால் பாடல்பெற்ற தலம் ஆகும்.
    • இந்த தலத்தில் காமீகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    1. அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மிக மிக பழமையான ஆலயம் ஆகும்.

    2. இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னனால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு வந்த மற்ற அரசர்கள் ஏராளமான திருப்பணிகள் செய்துள்ளனர்.

    3. தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய 3 சிறப்புகளையும் கொண்டது இந்த ஆலயம்.

    4. தொண்டை நாட்டில் மொத்தம் 32 சிவன் முக்தி தலங்கள் இருக்கின்றன. அதில் 29வது தலமாக அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது.

    5. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர்களால் பாடல்பெற்ற தலம் ஆகும்.

    6. கண்ணுவமுனிவர், கவுதம முனிவர், அகத்தியர், உமாபதி சிவாச்சாரியார், அருணகிரிநாதர், வள்ளலார் போன்றவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பலன் பெற்றவர்கள்.

    7. திருமணத்தடை, அரசியல் வெற்றி, அரசு பதவி உயர்வு, குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம் பெற ஆட்சீஸ்வரரை வழிபட்டால் நிச்சயம் நன்மை உண்டாகும்.

    8. தினமும் இத்தலத்தில் நான்கு கால பூஜை நடக்கிறது. காலை 8.30 மணிக்கு காலசாந்தி, 11.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சம், இரவு 8.30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடத்தப்படுகின்றன.

    9. ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி, இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு சனிபெயர்ச்சி போன்றவையும் இந்த தலத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது.

    10. மாதந்தோறும் இத்தலத்தில் பிரதோஷ வழிபாடும் சிறப்பு பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் அன்றைய தினம் நந்தியை வழிபட்டு பலன் பெறுகிறார்கள்.

    11. அமாவாசை, பவுர்ணமி, சங்கட சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    12. சித்திரை மாதம் இந்த தலத்தில் பிரமோற்சவ விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வை பின்னணியாக கொண்டு பிரமோற்சவம் நடக்கிறது. 11வது நாள் பெரும்பேறு கண்டிகை என்ற கிராமத்துக்கு சிவப்பெருமான் எழுந்தருளி அகத்தியருக்கு காட்சி கொடுப்பார். அதன் பிறகு கிரிவலம் நடைபெறுகிறது.

    13. இந்த தலத்தில் காமீகம் அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன.

    14. பல தடவை தொல்லியல் வல்லுனர்கள் இந்த தலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். அப்போது ஒரு தடவை 6ம் நூற்றாண்டுக்குரிய பாத்திரங்கள் கிடைத்தன.

    15. கருவறை கோஷ்டத்தில் பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. காரைக்கால் அம்மையார் தலைகீழாக நடப்பது போன்ற சிற்பம் அமைந்துள்ளது. அந்த சிற்பத்துக்கு நேராக 63 நாயன்மார்கள் கற்சிலை வரிசையில் காரைக்கால் அம்மையார் சிலையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    16. கோஷ்டத்தில் சோமாஸ்கந்தருக்கு கீழே நாகம் ஒன்று சிவலிங்கத்தை வழிபடுவது, கண்ணப்பர் கண்ணை இமைக்கும் போது இறைவன் வெளிப்பட்டு தடுப்பது, ஒருதலையுடன் இரண்டு மான்கள் இருப்பது போன்ற சிற்பங்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் உள்ளன.

    17. கருவறை சுவர் முழுவதும் கல்வெட்டுகள் உள்ளன. மொத்தம் 67 கல்வெட்டுகள் இடம் பெற்றிருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    18. ஒரு கல்வெட்டில் அச்சரப்பாக்கத்தின் பெயர், "மதுராந்தக சதுர்வேதி மங்கலத்து தென்பால் தனியூர் அச்சிறுப்பாக்கம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    19. அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் சிறந்த பிரார்த்தனை தலம் மட்டுமல்ல மிக சிறந்த பரிகார தலமாகவும் திகழ்கிறது. எனவே பிரார்த்தனையும், பரிகாரமும் செய்யலாம்.

    20. இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்து இருக்கும்.

    21. ஆட்சீஸ்வரரை மனம் உருக வழிபட்டு நெய் தீபம் ஏற்றினால் பதவி உயர்வு தேடி வரும். அதோடு ஆட்சி செய்யக்கூடிய பதவிகள் கிடைக்கும்.

    22. பாண்டிய மன்னன் படை வீரர்களின் ஆயுதங்கள் பட்டு ஆட்சீஸ்வரர் தன்னை வெளிப்படுத்தினார். இதை பிரதிபலிப்பது போல ஆட்சீஸ்வரர் லிங்கத்தின் பின்புறத்தில் இன்னமும் வெட்டுத் தழும்பு காணப்படுகிறது.

    23. இந்த தலத்து 5 நிலை ராஜகோபுரம் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. அது வெள்ளை நிறத்தில் இருந்து வந்தது. சமீபத்தில் நடந்த கும்பாபிஷேக திருப்பணியின் போது ராஜகோபுர சிற்பங்களுக்கு வர்ணம் பூசியுள்ளனர். இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயமே புதுப்பொலிவு பெற்று விட்டது போல காட்சி அளிக்கிறது.

    24. இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. ஆலயத்தை சுற்றி வரும் வெளிப்பிரகாரம் நன்கு விஸ்தாரமாக இருக்கிறது. இதனால் இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் அங்கு அமர்ந்து ஓய்வு எடுக்கவும், அன்னதானம் சாப்பிடவும் நல்ல வசதி உள்ளது.

    25. சப்தமாதர்கள் சன்னதி முன்பு ஆலயத்தின் உள்பக்க பிரகாரத்தில் இருந்தது. தற்போது சப்தமாதர்கள் சன்னதி ஆலய அலுவலகம் அருகே இடம் மாற்றி கட்டப்பட்டுள்ளது.

    26. சித்திரை மாத பிரமோற்சவத்தின் போது சுவாமி&அம்பாள் திருக்கல்யாணம் நடத்த தனி மண்டபம் உள்ளது. அந்த இடத்தில் திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

    27. வெளிப்பிரகாரத்தில் சில சன்னதிகள் கட்ட ஏற்பாடு செய்து பணிகளை தொடங்கி உள்ளனர். ஆகம விதிகள் இடம் கொடுக்கவில்லையோ, என்னவோ பிறகு அதை பாதியில் கை விட்டுள்ளனர்.

    28. தல விருட்சமான சரக்கொன்றை மரத்தின் அடியில் மிகவும் அழகான பரமசிவன் பார்வதி சிற்பம் உள்ளது. ஆலயத்துக்கு வருபவர்களில் பலர் தங்கள் குழந்தையை அந்த சிற்பம் அருகில் நிறுத்தி புகைப்படம் எடுத்து செல்கிறார்கள்.

    29. சிவனுக்கு எதிரில் நந்தி இருப்பது போல இந்த தலத்தில் பெருமாளுக்கு எதிரில் ஆஞ்சநேயர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். முக்கிய நாட்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    30. சிவபெருமானின் கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில்தான் ருத்ராட்ச மரம் தோன்றியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் ஒரு துளி இந்த தலத்தில் விழுந்து ருத்ராட்ச மரம் உருவானதாம். எனவே ருத்ராட்சம் தோன்றிய தலங்களில் ஒன்றாக அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது.

    • இந்த தலத்தில் உள்ள அச்சுமுறி விநாயகரிடம் தேங்காய் உடைத்து சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.
    • இந்த அச்சுமுறி விநாயகரை சதுர்த்தி தினங்களில் வழிபாடு செய்வது நல்லது.

    புதிதாக ஏதேனும் தொழில் தொடங்க இருப்பவர்கள் அந்த தொழிலில் எந்த இடையூறும் வராதபடி இருப்பதற்காக அச்சரப்பாக்கம் வந்து வழிபாடு செய்வது நல்லது என்ற கருத்து உள்ளது.

    இந்த தலத்தில் உள்ள அச்சுமுறி விநாயகரிடம் தேங்காய் உடைத்து சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    ஒரு தேங்காய் அல்லது 11 தேங்காய் உடைக்க வேண்டும். வசதி இருப்பவர்கள் 108 சிதறு தேங்காய் உடைக்கலாம்.

    இந்த வழிபாடு மூலம் அச்சுமுறி விநாயகர் ஆசி பெற்று தொடங்கும் தொழில்கள் வெற்றிகரமாக நடக்கும் என்பது பக்தர்களிடம் நம்பிக்கையாக உள்ளது.

    ஒருதடவை காஞ்சி மகா பெரியவர் இந்த வழியாக செல்லும் போது இடையூறு ஏற்பட்டது.

    அப்போதுதான் அவருக்கு இந்த தலத்தில் அச்சுமுறி விநாயகர் இருக்கும் தகவல் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் தேங்காய் உடைத்து அந்த விநாயகரை வழிபட்டார்.

    அதுமட்டுமின்றி தொழில் தொடங்க ஆசி வேண்டி வரும் அனைவரிடமும் அவர் அச்சரப்பாக்கம் சென்று அச்சுமுறி விநாயகரை வழிபட வேண்டும் என்று சொல்லி அனுப்ப தவறியதே இல்லை.

    இந்த அச்சுமுறி விநாயகரை சதுர்த்தி தினங்களில் வழிபாடு செய்வது நல்லது.

    இதனால் அனைத்துவித சங்கடங்களும் விலகும்.

    இல்லையெனில் சோமவார நாட்களில் இந்த விநாயகரை வழிபடலாம்.

    இவரிடம் தடையை நீக்கும் வழிபாடுகளை செய்து முடித்த பிறகு ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் சென்று பலன்களை பெறலாம்.

    • சித்திரை - பிரம்மோற்சவம் (சித்திரை நட்சத்திரம்), அப்பர் சுவாமி உற்சவம்.
    • ஐப்பசி - அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா.

    1. சித்திரை- பிரம்மோற்சவம் (சித்திரை நட்சத்திரம்), அப்பர் சுவாமி உற்சவம்.

    2. வைகாசி- திருஞானசம்பந்தர் உற்சவம், வைகாசி விசாகம்.

    3. ஆனி- ஆனி திருமஞ்சனம்

    4. ஆடி- ஆடிப்பூரம் இளங்கிளியம்மன் வளைகாப்பு, ஆடி கிருத்திகை காவடி உற்சவம்.

    5. ஆவணி- விநயாகர் சதுர்த்தி

    6. புரட்டாசி- நவராத்திரி, ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு நான்கு சனிக்கிழமை அபிஷேகம்.

    7. ஐப்பசி- அன்னாபிஷேகம், கந்தர் சஷ்டி விழா.

    8. கார்த்திகை- கார்த்திகை தீபம் பஞ்சமூர்த்தி வீதி உலா, 4-வது சோமவாரம் ருத்ராபிஷேகம்.

    9. மார்கழி- ஆருத்ரா தரிசனம், மாணிக்கவாசகர் உற்சவம்.

    10. தை- தைப்பூச தெப்பம், தைக்கிருத்திகை உற்சவம்.

    11. மாசி- மகாசிவராத்திரி.

    12. பங்குனி- உத்திரம் திருக்கல்யாணம்.

    காணும் பொங்கல், பிரம்மோற்சம் பதினோராம் நாள் ஆகிய இரண்டு விழா நாட்களிலும் ஆட்சீஸ்வரர் தென்பாலுள்ள பெரும்பேர் கண்டிகைக்கு சென்று வருதல் உண்டு.

    • சிவ என்ற சொல்லுக்கு சிவந்த ஒளி என்று பொருள்.
    • சிவபெருமானை காலையில் தரிசித்தால் பிணிகள் நீங்கும்.

    சிவ என்ற சொல்லுக்கு சிவந்த ஒளி என்று பொருள்.

    சிவராத்திரி அன்று சிவனைத் துதிப்பவர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மல இருளும் நீங்கி, பேரானந்தம் என்னும் அருட்பேரொளி பெற முடியும்.

    மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அர்த்த ராத்திரியே மகா சிவராத்திரி தினமாகும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின்போது முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும்.

    சிவராத்திரி தினத்தன்று நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை வழிபட வேண்டும்.

    வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையில் உள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள்.

    சிவனுக்குரிய மலர்களான தாமரை, கொன்றை, ஆத்தி, மல்லிகை, ரோஜா, வில்வம், தர்ப்பை, அருகம்புல், கருவூமத்தை, துளசி போன்றவைகளைக் கொண்டு சிவமந்திரங்களை உச்சரித்தபடியே அர்ச்சனை செய்ய வேண்டும்.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி பூஜையை மிக, மிக விமரிசையாக நடத்தி வருகிறார்கள்.

    சிவராத்திரி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில் திரண்டு சிவராத்திரி விரதம் மேற்கொள்வார்கள்.

    இதையொட்டி பக்தர்களுக்காக ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்குள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்துவார்கள்.

    சிவபெருமானை காலையில் தரிசித்தால் பிணிகள் நீங்கும். நண்பகல் தரிசனம் செய்தால் செல்வம் பெருகும்.

    மாலையில் தரிசனம் செய்தால் பாவம் போகும். அர்த்த சாமத்தில் தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும்.

    • நம் முன்னோர்கள் சிவபெருமானை வழிபடும் முறையை நான்காக கூறியுள்ளனர்.
    • இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது சிவராத்திரி விரதமும் வழிபாடும்.

    நம் முன்னோர்கள் சிவபெருமானை வழிபடும் முறையை நான்காக கூறியுள்ளனர்.

    அவை

    1. சிவார்ச்சனை,

    2. ருத்திர பாராயணம்,

    3. சோமவாரம்,

    4. பிரதோஷம்.

    இவை எல்லாவற்றையும் விடச் சிறந்தது சிவராத்திரி விரதமும் வழிபாடும்.

    • திருநாவுக்கரசர் இத்தல ஈசனை தமது “ஷேத்திரக்கோவையில்” பாடி மகிழ்ந்துள்ளார்.
    • அகத்திய மகரிஷிக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலத்தில் காட்சி தந்துள்ளார்.

    அச்சிறுபாக்கத்தில் அருளும் ஆட்சீஸ்வரப் பெருமானை ஞானசம்பந்தர் "தேனினும் இனியவர்" என்றும் "ஊன் நயந்து உருக உவகைகள் தருபவர்" என்றும் அகமகிழ்ந்து பாடிப் பரவசப்பட்டுள்ளார்.

    இத்தல ஈசன் தேனை விட இனிமையானவன் என்றும், இப்பெருமானைப் பணிந்து வணங்கினால்

    நம் மெய் சிலிர்க்கும்படியான நன்மைகளை நமக்கு அளிப்பவர் என்றும் நெகிழ்ந்துள்ளார் சம்பந்தர்.

    திருநாவுக்கரசர் இத்தல ஈசனை தமது "ஷேத்திரக்கோவையில்" பாடி மகிழ்ந்துள்ளார்.

    அகத்திய மகரிஷிக்கு ஈசன் இத்தலத்திலும் திருமணக் கோலத்தில் காட்சி தந்துள்ளார்.

    • கி.பி.1068--ல் வீர ராஜேந்திரன் வரிவிலக்களித்து அமுதுபடைக்க நெல் வழங்கி உள்ளான்.
    • விக்கிரமச்சோழன் காலத்தில் விளக்கெரிப்பதற்காக கொடைகள் வழங்கியுள்ளான்.

    கி.பி.630-ம் ஆண்டில் நரசிம்ம பல்லவனால் நிர்மாணிக்கப்பட்ட இத்திருக்கோவிலில் 29 கல்வெட்டுகள் உள்ளன. முதலாம் ராஜேந்திரன் கி.பி.1015-ல் இத் திருக்கோவிலைப் புதுப்பித்து விளக்கெரிக்க ஏற்பாடு செய்துள்ளான்.

    கி.பி.1068--ல் வீர ராஜேந்திரன் வரிவிலக்களித்து அமுதுபடைக்க நெல் வழங்கி உள்ளான்.

    கி.பி.1073 -ல் முதலாம் குலோத்துங்க சோழன் பல கிராமங்களை ஒருங்கிணைத்து "சாத்தனூர்" எனப் பெயரிட்டு வழிபாட்டிற்கு தானமாக வழங்கியுள்ளான்.

    மேலும் இம் மன்னன் கி.பி. 1075-ம் ஆண்டில் திருக்கோவிலை புனரமைத்து மண்டபம் நிர்மாணம் செய்தான்.

    மேலும் குலோத்துங்க சோழீஸ்வரர் திருவுருவச் சிலையை அமைத்து பூஜைகள் நடத்த நிவந்தங்கள் அளித்துள்ளான்.

    விக்கிரமச்சோழன் காலத்தில் விளக்கெரிப்பதற்காக கொடைகள் வழங்கியுள்ளான்.

    இரண்டாம் ராஜேந்திரன் காலத்தில் கி.பி.1168-ல் வரிகளை மாற்றம் செய்து வழிபாடு தொடர ஆணையிட்டுள்ளான்.

    மூன்றாம் குலோத்துங்கனுடன் இணைந்து பாண்டியரை வென்ற அம்மையப்பன் கி.பி.1190-ல் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலுக்கு ஆபரணங்கள் செய்து அளித்துள்ளான்.

    கி.பி.1193-ல் ஆட்கொண்ட சேடிராயன் என்பவர் திருமேனி களை அமைத்து வழிபாட்டுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளான்.

    மூன்றாம் ராஜராஜன் கி.பி.1219-ல் வழிபாடு தொடர தானம் வழங்கியுள்ளான்.

    பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் விக்ரம பாண்டியன், வீரபாண்டியன் மற்றும் சுந்தர பாண்டியன் ஆகியோர் கி.பி.1260 முதல் கி.பி. 1313 வரை பல நிவந்தங்களை அளித்து திருக்கோவிலில் வழிபாடுகள் தடையின்றி நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    "இராஜநாராயண சம்புவராயன்" 3.7.1356 அன்று இத்திருக்கோவி லுக்கு உற்சவம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

    விஜய நகர வேந்தன் "கம்பண்ணன்" கி.பி.1361-ல் காஞ்சி சங்கர மடத்திற்கு தானமளித்துள்ளதை இத்தலத்து கல்வெட்டுகளில் குறித்துள்ளார்.

    வீரபுக்கன் கி.பி.1376-ல் வழிபாடு தொடர நிலம் வழங்கியுள்ளான்.

    விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயரின் சிறந்த ஆட்சிக்காக கி.பி.1528-ல் சிறப்பு வழிபாடுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட விபரம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

    • அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை.
    • சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவதலம் உள்ளது.

    அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் சென்னை எழும்பூர் - விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது.

    அச்சிறுபாக்கம் சிறிய ரயில் நிலையம் ஆனதால் அநேக ரயில்கள் இங்கு நிற்பதில்லை.

    ஆகையால் அச்சிறுபாக்கத்திறகு முந்தைய ரயில் நிலையமான மேல்மருவத்தூரில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில சுமார் 4 கி.மீ. பயணம் செய்தால் அச்சிறுபாக்கம் கோவிலை அடையலாம்.

    சென்னையில் இருந்து செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்து வரும் நிறுத்தம் அச்சிறுபாக்கம்.

    அங்கு இறங்கி இடப்பக்கம் பிரியும் ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ. சென்றால் கோவிலை அடையலாம்.

    சென்னையில் இருந்து சுமார் 96 கி.மீ. தொலைவில் இந்த சிவதலம் உள்ளது.

    • கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது.
    • இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர்.

    அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயம் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.

    கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் நேரே உள் வாயில் உள்ளது.

    கோபுர வாயிலைக் கடந்தவுடன் நேராக இல்லாமல் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை சற்று விலகி அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்தின் சிறப்பம்சம் இங்குள்ள இரண்டு மூலவர்கள் சந்நிதியாகும்.

    கோபுர வாயிலுக்கு நேரே உள்ள உள் வாயில் வழியாகச் சென்றால் நேர் எதிரே உமையாட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    உள் வாயில் நுழைந்தவுடன் சற்று வலதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றிற்கு எதிரே ஆட்சீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    இந்த ஆட்சீஸ்வரர் தான் இவ்வாலயத்தின் பிரதான மூலவர்.

    சுயம்பு மூர்த்தியான இவர் லிங்க வடிவில் குட்டையான பாணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

    இவர் குடியிருக்கும் கருவறை வாயிலில் இருபுறமும் துவாரபாலகர்களாக சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் காணப்படுகின்றனர்.

    தாரகனுக்கு அருகில் விநாயகரும், வித்யுன்மாலிக்கு அருகில் வள்ளி தெய்வானையுடன் முருகரும் உள்ளனர்.

    கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

    ஆட்சீஸ்வரர் சந்நிதியை சுற்றி வலம் வர வசதி உள்ளது.

    உள் வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் உள்ள ஆட்சீஸ்வரரை தரிசித்துவிட்டு சற்று நேரே மேலும் சென்றால் நாம் உமையாட்சீஸ்வரர் சந்நிதியை அடையலாம்.

    உமையாட்சீஸ்வரர் கருவறை வாயிலில் இருபுறமும் அலர்மேலுமங்கை, ஸ்ரீனிவாச பெருமாள், பழனிஆண்டவர், உற்சவ மூர்த்திகள், லட்சுமி துர்க்கை சரஸ்வதி, ஆறுமுகசாமி ஆகியோரின் சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன.

    கருவறைக்குள் உமையாட்சீஸ்வரர் கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார்.

    லிங்க உருவின் பின்புறம் பார்வதியுடன் சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

    அகத்தியருக்கு தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்று.

    அருகில் தனி சிறு சன்னதியில் தெற்கு நோக்கிய உமையாம்பிகை திருஉருவச் சிலையும் உள்ளது.

    ஆலயத்தின் வடக்கு வெளிப் பிரகாரத்தில் தலவிருட்சமான சரக்கொன்றை மரம் உள்ளது. சரக்கொன்றை மரத்தின் அடியில் கொன்றையடி ஈஸ்வரர் சந்நிதி உள்ளது.

    அருகில் நந்திகேஸ்வரரும், சிவனை வணங்கியபடி திரிநேத்ரதாரி முனிவரும் உள்ளனர்.

    பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இத் தலத்தில் சரக்கொன்றை மரத்தடியில் காட்சியளித்த சிவபெருமான், தனக்கு இவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பச் சொல்ல, மன்னன் அப்போது அங்கு வந்த திரிநேத்ரதாரி முனிவரிடம் ஆலயம் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தான்.

    திரிநேத்ரதாரி முனிவரும், தன்னையும், மன்னனையும் ஆட்கொண்ட இறைவனுக்கு, இரு கருவறைகள் கொண்ட இக்கோவிலைக் கட்டினார்.

    கோவிலைக் கண்ட மன்னன் இரு சந்நிதிகள் அமைந்திருப்பது கண்டு முனிவரை விபரம் கேட்டான்.

    முனிவரும் "அரசரை ஆட்கொண்ட இறைவனுக்காக உமையாட்சீஸ்வரர் சந்நிதியும், தன்னை ஆட்கொண்ட இறைவனுக்கு ஆட்சீஸ்வரர் சந்நிதியும் அமைத்தேன்" என்று மறுமொழி தந்ததாக வரலாறு கூறுகின்றது.

    வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் இத்தலத்தின் பிரதான அம்பாள் இளங்கிளி அம்மை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள்.

    ×