search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "August-22"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்டு 22-ந்தேதி மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுகிறார்.
    • பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் 4-வது வாரம் அவர் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.

    இப்போது வருகிற சுதந்திர தினத்தன்று 15-ந்தேதி கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்டு 22-ந்தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.

    மாநில முதல்-அமைச்சர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு மத்திய அரசி டம் அனுமதி கோரப்பட்டது. அதன்படி 15 நாட்கள் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இதைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. அவருக்காக அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்-அமைச்சரின் செயலாளர் என ஒரு குழு அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது.

    அமெரிக்கா செல்லும்போது கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை துணை முதல்-அமைச்சர் ஆகி விடுவார் என்று மீண்டும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளது.

    சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு நாளில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடி அவரே தமிழக நிர்வாகங்களை கவனிப்பார் என்றும் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரியவந்து உள்ளது.

    ×