search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayodhya Hearing"

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று மறுப்பு தெரிவித்தது. #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    புதுடெல்லி:

    அயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில், மசூதி தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், இதை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றவேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    ராமஜென்ம பூமி-பாபர் மசூதி பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.சித்திக் என்பவரின் சட்டப்படியான வாரிசு தொடர்ந்த இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற அவசியம் இல்லை என கடந்த செப்டம்பர் 27-ந் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும் இந்த வழக்கின் பிற அம்சங்கள் குறித்து அக்டோபர் 29-ந் தேதி விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

    அதன்படி இந்த வழக்கு கடந்த மாதம் 29-ந் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்ஜய் கிஷண் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அத்துடன் அயோத்தியின் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உள்ளிட்ட சுமார் 14 மனுக்களும் உடன் இணைக்கப்பட்டு விசாரணைக்கு வந்தன. இதில் விசாரணை துவங்கியதுமே இந்த வழக்குக்காக உரிய அமர்வு அமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2019) ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அல்லது அந்த அமர்வின் வசதிக்கு ஏற்ப இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்ஜய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று அகில பாரத இந்து மகாசபா தரப்பில் வக்கீல் பருன் குமார் சின்கா ஆஜராகி ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது இந்த வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதால் இதனை அவசர வழக்காக கருதி விரைவில் விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஏற்கனவே நாங்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளோம். இந்த மனுக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விரைந்து விசாரிக்கும் உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனர். #Ayodhya #SupremeCourt #HinduMahasabha
    ×