search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "B Iyappan"

    பி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `தோனி கபடிகுழு' படத்தின் விமர்சனம். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu
    நாயகன் அபிலாஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதையே பொழுதுபோக்காக வைத்துள்ளார். கிரிக்கெட் என்றால் போதும் அனைவரும் ஒன்றுகூடும் அளவுக்கு விளையாட்டு மீது பற்றாக இருக்கிறார்கள். அதே ஊரில் டீ கடை வைத்திருக்கும் ஒருவர், கபடி விளையாட்டின் பெருமையை சொல்லி கபடி விளையாட சொல்கிறார். ஆனால் அவரது பேச்சை அவர்கள் கேட்பதாக இல்லை.

    இந்த நிலையில், அவர்கள் கிரிக்கெட் விளையாடும் இடத்திற்கு சொந்தக்காரர், தான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல், அந்த இடத்தை கடன் வாங்கியவரிடமே கொடுத்து விடுகிறார்.



    இதையடுத்து கிரிக்கெட் விளையாட இடமில்லாமல் தவிக்கும் அந்த ஊர் இளைஞர்கள், அந்த இடத்தை வாங்கியவரிடம் சென்று அந்த இடத்தை தரும்படி கேட்கின்றனர். தனக்கு வர வேண்டிய கடன் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்துவிட்டு அந்த இடத்தை வாங்கி செல்லும்படி அவர் சொல்ல, அதற்காக பணம் சேர்க்க ஆரம்பிக்கின்றனர். இதற்கிடையே தனது ஊருக்கு வரும் நாயகி லீமா பாபு மீது அபிலாஷுக்கு காதல் வருகிறது.

    நாயகன் அபிலாஷின் தந்தை சொந்த வீட்டை அடமானம் வைத்து பணம் கொடுக்கிறார். அதேபோல் ஊர் மக்களிடமும் பணம் வசூலிக்க, அவர்களுக்கு தேவையான காசு ஓரளவுக்கு சேர்த்து விடுகிறது. மீதி காசை சேர்க்க வழி தெரியாமல் தவிக்க, டீ கடைக்காரர் அவர்களை கபடி விளையாடி வென்றால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று சொல்கிறார்.



    அவர்களுக்கும் அது சரியாக பட கபடி விளையாடுவதற்கு தயாராகிறார்கள். அந்த டீக்கடைகாரர் அவர்களுக்கு கபடி பயிற்சி அளிக்கிறார். 

    கடைசியில், கபடி போட்டியில் வென்று பரிசை வென்றார்களா? கிரிக்கெட் விளையாடும் இடத்தை திரும்பப் பெற்றார்களா? கபடி விளையாட்டின் அருமை புரிந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அபிலாஷ் கல்லூரி இளைஞராக, கிரிக்கெட், கபடி விளையாட்டு வீரராக போதுமான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனினும் நடிப்பில் இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். லீமா பாபுவுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



    முதலாவதாக கபடியின் மகத்துவத்தை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் பி.ஐயப்பனுக்கு பாராட்டுக்கள். கிரிக்கெட்டையே பெரிதாக நினைக்கும் இளைஞர்களுக்கு தமிழனின் விளையாட்டான கபடியின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறார். எனினும் படத்தின் திரைக்கதையும், கதாபாத்திரங்களும் ஒன்றவில்லையோ என்றும் யோசிக்க வைக்கிறார்.

    சி.ஜே.ரோஷன் ஜோசப்பின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பாக வந்திருக்கிறது.

    மொத்தத்தில் `தோனி கபடிகுழு' வளர வேண்டும். #DhoniKabbadiKuzhuReview #Abhilash #LeemaBabu

    ×