search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "badam halwa"

    சிகிச்சையில் இருந்த போது ஜெயலலிதாவுக்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டதா? என்று ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைமை நர்ஸ் பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றிய புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் அர்ச்சனா (இவர், தற்போது திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்) நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். அதேபோன்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை நர்ஸ் ரேணுகாவும் ஆஜரானார்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டில் அர்ச்சனா பல நாட்கள் பணியில் இருந்துள்ளார். இதனால், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அர்ச்சனாவுக்கு தெரிந்து இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதேபோன்று ஆணையத்தின் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை செய்தனர். நீதிபதி மற்றும் ஆணையத்தின் வக்கீல்கள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மருத்துவர் அர்ச்சனா தெரியாது என்றே பதில் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வார்டில் பணியில் இருந்தபோது ஜெயலலிதா தன்னிடம் பலமுறை பேசி உள்ளதாக அவர் கூறி உள்ளார். தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க சென்றபோது அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வித்யாசாகர்ராவை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு அர்ச்சனா, ‘கண்ணாடிக்கு வெளியே நின்று கவர்னர் பார்த்ததையும், அவர் கை அசைத்ததையும் பார்த்தேன். ஆனால், கவர்னரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா? என்பதை பார்க்கவில்லை’ என்று கூறி உள்ளார்.

    4.10.2016 அன்று ஜெயலலிதாவுக்கு இடது வென்ட்ரிக்கலில் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் அர்ச்சனா தான் பணியில் இருந்துள்ளார். இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு அர்ச்சனா சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நர்சுகளை, தலைமை நர்சான ரேணுகா தான் நியமித்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் அப்பல்லோ மருத்துவமனையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் மட்டுமே நர்சுகள் மூலம் ஒவ்வொரு முறையும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது என்று ரேணுகா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    27.11.2016 அன்று வீட்டில் இருந்து தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட பாதாம் அல்வா ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதே என்று ஆணையம் கேள்வி எழுப்பிய போது, வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப்பொருட்கள் எதுவும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்படவில்லை என்பதை ஆணித்தரமாக கூற முடியும் என்று பதில் அளித்துள்ளார்.

    சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு 21.11.2016 அன்று லட்டு, குலோப்ஜாமூன், ரசகுல்லா போன்றவை வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்கு பாதாம் அல்வாவும் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஜெயலலிதா மருத்துவமனையில் 22.9.2016 அன்று அனுமதிக்கப்பட்ட நிலையில், 25.11.2016 அன்று முதல் தான் அவருக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்த விவரம் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் எழுப்பிய கேள்விக்கு, அதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று ரேணுகா பதில் அளித்துள்ளார்.

    அப்படியென்றால் 22.9.2016 முதல் 24.11.2016 வரை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைப்படி தான் ஜெயலலிதாவுக்கு உணவு வழங்கப்பட்டதா? என்ற கேள்வி ஆணையத்துக்கு எழுந்து உள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தவும் ஆணையம் முடிவு செய்துள்ளது. 
    ×