search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ballots papers"

    தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது என்று தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    புதுடெல்லி:

    கடந்த 1-ந் தேதி தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட சுனில் அரோரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 1.76 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் மிக குறைந்த அளவு (ஒரு சதவீதத்துக்கும் குறைவான) எந்திரங்களில் மட்டுமே கோளாறு ஏற்பட்டது. இதில் எங்களுக்கு திருப்தி இல்லை. எந்திரங்களில் கோளாறு ஏற்படுவதை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவது வேறு, கோளாறு ஏற்படுவது வேறு. மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்குகளை பதிவு செய்யும் ஒரு கருவி தான். அது கம்ப்யூட்டர் போல திட்டமிடப்பட்டதோ, பண்பட்டதோ அல்ல.

    2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஒரு தேர்தல் முடிவு வந்தது. அடுத்து அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் முற்றிலும் மாறுபட்ட முடிவு வந்தது. சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களில் இப்போது ஒரு முடிவும், அங்கு முன்பு நடந்த இடைத்தேர்தல் களில் ஒரு முடிவும் வந்தது.

    ஒருவேளை தேர்தல் முடிவு ‘எக்ஸ்’ என்று வந்தால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றி யாரும் குறை கூறுவதில்லை. அதே முடிவு ‘ஒய்’ என்று வந்தால் மின்னணு எந்திரங்களில் கோளாறு என்கிறார்கள். தேர்தல் கமிஷனையோ, அதன் பாரபட்சமற்ற நடவடிக்கையையோ தேர்தலில் முக்கிய பங்கேற்பாளர்கள் என்ற முறையில் அரசியல் கட்சிகள் கேள்வி கேட்கின்றன. அது அவர்களது உரிமை.

    ஆனால் மின்னணு எந்திரங்களை கால் பந்தாட்டத்தில் ‘டாஸ்’ போடுவதுபோல பயன்படுத்துவது எங்களை காயப்படுத்துகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு அடுத்ததாக அரசியல் கட்சிகள் தான் முக்கிய பங்கேற்பாளர்கள். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைக்கு இனி திரும்ப முடியாது. இப்போதுள்ள நடை முறையே தொடரும்.

    அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது பற்றி நாங்கள் அறிவோம். அதற்கான அலுவலக ரீதியான முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏற்கனவே சில நாட்கள் முன்பு தொடங்கிவிட்டது. அனைத்து முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கவனத்துடன் தயாரிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    முக்கிய நிகழ்வான நாடாளுமன்ற பொதுத்தேர்தலை வெற்றிகரமாக நடத்த அரசியல் கட்சிகள், வாக்காளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு சுனில் அரோரா கூறினார். #SunilArora #CEC #India #Ballot
    ×