search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banking"

    • அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று வருகிறது.
    • பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. சுற்றுவட்டார கிராமங்களான குன்றக்குடி, நேமம், அரிபுரம், கே.ஆத்தங்குடி, வைரவன்பட்டி, சிறுகூடல் பட்டி, என்.புதூர், மாங்கொம்பு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வங்கி மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

    குறிப்பாக தங்களது தங்க நகைகளை இந்த வங்கிக் கிளையில் அடகு வைத்து பணம் பெற்றுச் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேமம் கிராமத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் தான் அடகு வைத்த நகையை பிள்ளையார்பட்டி வங்கிக் கிளையில் இருந்து மீட்டுச் சென்றார்.

    வீட்டிற்குச் சென்ற அவர் நகையை அணிந்து பார்த்த போது 4 கிராம் எடை குறைந்து இருப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் வங்கிக் கிளையில் சென்று கேட்ட போது, பணியில் இருந்த அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் யாரும் சரிவர பதிலை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளர் அந்த வங்கிக் கிளையின் நகைகள் அடகு வைத்த தனக்கு தெரிந்தவர்கள் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

    இதையடுத்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரும் வங்கி முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் தங்கள் அடகு வைத்த நகையை எடை சரிபார்ப்பு மற்றும் மீட்பதற்காக வந்தபோது அனைவரது நகைகளிலும் இரண்டு கிராம் முதல் 8 கிராம் வரையிலான எடை குறைந்து இருப்பது வாடிக்கையாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனால் பிள்ளையார்பட்டி வங்கிக் கிளை முன்பு தகவல் அறிந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

    தாங்கள் நகையை அடகு வைக்கும் போது வங்கியில் எழுதி தரப்பட்டிருக்கும் எடைக்கும், மீட்டுக் கொண்டு வந்த பிறகு சரிபார்க்கும் போது உள்ள எடைக்கும் எட்டு கிராம் வரையில் குறைவாக வித்தியாசம் காணப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த வங்கிக் கிளையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் வாடிக்கையாளர்கள் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நகையை அடகு வைத்து பணம் பெற்று வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த ஒரு வருட காலமாக இது போன்று அடகு நகைகளில் சுரண்டு மோசடி சம்பவம் நடைபெற்று உள்ளதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    நகைகளை வைக்கும் போது வங்கியில் தரப்படும் கணக்கு சான்று அட்டையிலும் மோசடியாக ஏற்கனவே எழுதப்பட்டிருப்பதை வெள்ளை மை கொண்டு அழித்து புதிதாக எடை எழுதி தரப்பட்டிருப்பதாக ஆதாரத்துடன் வாடிக்கையாளர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.

    வங்கிகளில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் அனைவரது நகைகளிலும் எடை குறைந்து காணப்படுவதால் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து வங்கி கிளையின் மூத்த மேலாளரிடம் கேட்ட போது, அனைத்து வாடிக்கையாளர்களின் நகை எடை குறைவது சம்பந்தமாக கணக்கீடுகள் நடைபெற்று வருவதாகவும், போலீசில் முறையாக புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், மண்டல அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறப்பு அதிகாரிகள் குழு வங்கிக்கு வருகை தர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும் வாடிக்கையாளர் களுக்கு எந்த விதமான நஷ்டமும் இன்றி அவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை வாடிக்கையாளர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    • மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.
    • சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசாபுரத்தில் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று பட்ட பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர் ஒருவர் வந்தார்.

    அவரிடம் முகமூடியை கழட்டி விட்டு உள்ளே செல்லுங்கள் என அங்கிருந்த காவலாளி தெரிவித்தார். அப்போது மர்ம நபர் தன்னுடைய முகத்தில் கொடூரமான நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அதனை மறைப்பதற்காக தான் முகமூடி அணிந்துள்ளேன். மேலும் எனக்கு குடும்ப கஷ்டம் உள்ளது. அதனால் நகை அடகு வைக்க வந்துள்ளேன் என கூறினார். இதனை நம்பிய காவலாளி அவரை வங்கிக்குள் அனுமதித்தார்.

    இதை தொடர்ந்து மர்ம நபர் கேஷியரிடம் சென்றார். நகை அடகு வைக்க வேண்டும் என கூறினார்.

    அப்போது கேஷியர் காத்திருக்கும் படி வலியுறுத்தினார். மர்ம நபர் அங்கு காத்திருந்தார். அந்த நேரத்தில் அவரது மேஜையில் ரூ.6.5 லட்சம் அடுக்கி வைத்து அதனை எந்திரம் மூலம் எண்ணிக் கொண்டிருந்தார்.

    அப்போது காத்திருந்த முகமூடி நபர் திடீரென தனது பையில் இருந்த பெரிய கத்தியை எடுத்து கேஷியரின் கழுத்தில் வைத்தார். பணம் முழுவதையும் தர வேண்டும் இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து விடுவேன் என மிரட்டினார்.

    இதனைக் கண்டு வங்கிக்கு வந்திருந்த பொதுமக்கள் ஊழியர்கள் காவலாளி அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    ஒரு கையில் கத்தியை பிடித்தபடி மற்றொரு கையில் கேஷியர் முன்பு இருந்த பணத்தை தனது பையில் அள்ளிப் போட்டுக் கொண்டார். பின்னர் கத்தியை வெட்டுவது போல ஏந்திக்கொண்டு வங்கிக்கு வெளியே சென்றார். அங்கிருந்து அவரது வாகனம் மூலம் கில்லாடி திருடன் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்தனர். வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த நபர் கத்தியை காட்டி பணத்தை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

    இதன் மூலம் திருடனை தேடி வருகின்றனர். வங்கியில் பட்டப் பகலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.

    • வங்கி கலந்துரையாடல் முகாம் நடந்தது.
    • துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.

    திருச்சுழி

    திருச்சுழியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பாக விவசாயிகளுடனான மாலைநேர கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்சுழி ஊராட்சி மன்றத்தலைவர் பஞ்சவர்ணம் குமார் முன்னிலை வகித்தார்.கிளை மேலாளர் ஹரிஹர சுந்தர் வரவேற்றார். தூத்துக்குடி மண்டல வாணிப அலுவலகத்தின் மண்டல மேலாளர் செந்தில்குமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் அரசு மானியக்கடன் திட்ட பயனாளிகளுக்கு சுமார் ரூ.1.60 கோடி வரை கடன் வழங்குவதற்கான ஒப்புகை சான்று வழங்கப்பட்டது.

    மேலும் திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இதில் முதன்மை மேலா ளர்கள் மாரியப்பன், விமல் செல்வராஜ், மேலாளர் கோவிந்தராஜ், சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் சம்பத்குமார், மேலாளர் சாமுவேல் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை மேலாளர் ராஜ கோபாலன் நன்றி கூறினார்.

    • தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.
    • அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 72).

    இவர் வேளாண்மை பொறியியல் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர்.

    இவர் தனது ஓய்வூதிய பணம் சுமார் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு வந்தார்.

    இதை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள், அவர் சென்ற இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து, வலங்கைமான் அருகே உள்ள மின்பொறியாளர் அலுவலகத்தில் முன்பு சென்ற போது பணம் கீழே கிடப்பதாக அவரின் கவனத்தை திசை திருப்பினர்.

    இதனை உண்மை என்று நம்பிய கிருஷ்ணமூர்த்தி கீழே குனிந்தார். அப்போது அவர் வைத்திருந்த பணப்பையை அந்த மர்ம நபர்கள் திருடி கொண்டு தப்பினர்.

    இது குறித்து கிருஷ்ணமூர்த்தி வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம் நடந்தது.
    • வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது- மாற்றுத்திறனாளி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் (PMEGP), வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP), சிறுதொழில் மற்றும் பெட்டி கடை வைப்பதற்கான வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டம், மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (NHFDC) மூலமாக கடன் வழங்கும் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த திட்டங்களால் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் "வங்கி கடன் முகாம் வருகின்ற 16-ந்ேததி காலை 10 மணிக்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண்.12-ல் நடைபெற உள்ளது.எனவே, வங்கி கடன் பெற்று தொழில் செய்ய விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #ATMCardChip
    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

    ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

    குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

    எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ATMCardChip
    நீலகிரி மாவட்டத்தில் 5 தபால் நிலையங்களில் வங்கிக்கிளை தொடங்கப்பட்டு உள்ளது. அரசு மானியங்களை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    இந்தியா அஞ்சல் துறையில் அனைத்து தபால் நிலையங்களும் கணினி மயமாக்கப்பட்டு, பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    தற்போது இந்திய அஞ்சல் துறை வங்கி களின் சேவைகளை அனைத்து மக்களுக்கும், குறிப்பாக கிராம மக்களுக்கும் எளிதாக வழங்குவதற்காக அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற தபால் நிலையங்கள் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

    இதையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் துணை தபால் நிலையத்தில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளை நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கு நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் தலைமை தாங்கினார். வங்கிக்கிளையை கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கி கணக்கை கணினி மூலம் தொடங்கி வைத்தார்.

    அதைத்தொடர்ந்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் பயன்கள் குறித்த நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்தது. இதில் வங்கி கணக்கு தொடங்கிய 200 பேரில் சிலருக்கு பணம் எடுக்கவும், செலுத்தவும் வசதியாக ‘கியூர்ஆர்’ அட்டைகள் வழங்கப்பட்டன.

    பின்னர் நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் குணசீலன் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி சேரிங்கிராஸ் துணை தபால் நிலையம், மசினகுடி துணை தபால் நிலையம், மாவனல்லா, மாயாறு, சிங்காரா ஆகிய 5 தபால் நிலையங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கிக்கிளைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த வங்கியில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவை மட்டும் போதுமானது. புகைப்படமோ அல்லது இருப்பிட சான்றிதழோ தேவையில்லை. பணம் செலுத்தாமலேயே வங்கி கணக்கை தொடங்கலாம். இதன் மூலம் ஓய்வூதிய பலன்கள், கியாஸ் மானியம், அரசு வழங்கும் மானியங்களை பெறலாம். மொபைல் வங்கி செயலி, குறுஞ்செய்தி போன்ற வசதிகளும் உள்ளன.

    தபால்காரர்கள் உங்களது வீட்டுக்கு வரும் போது, கியூஆர் அட்டை சொருகி தங்களது கைரேகை வைத்து தேவையான பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல தபால்காரர் மூலம் வங்கி கணக்கில் பணமும் செலுத்தலாம். இந்த பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக வரும். எதிர்காலத்தில் விவசாயத்துக்கான மானியம், மத்திய அரசின் மானியம், கடன் தள்ளுபடி போன்ற பயன்களை வங்கிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்.

    அனைத்து கிராமங்களிலும் துணை அஞ்சலகங்கள், கிளை தபால் நிலையங்கள் உள்ளதால் சாதாரண மக்கள் வங்கியை நாடி செல்ல வேண்டியது இல்லை. இருப்பு வைக்கும் பணத்துக்கு தினமும் 4 சதவீத வட்டி கணக்கிடப்பட்டு, மூன்று மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும்.

    நாட்டில் உள்ள எந்த வங்கியிலும் தங்களது பணத்தை எடுக்கவோ அல்லது செலுத்தவோ முடியும். குடிநீர், மின்சாரம், டி.டி.எச். கட்டணம், கல்லூரி கட்டணம் ஆகியவற்றை செலுத்தலாம். இந்த திட்டம் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஊட்டி தலைமை தபால் அலுவலக அதிகாரி உமாமகேஸ்வரி, குன்னூர் தபால் அதிகாரி சுப்பிரமணி மற்றும் ரவிசந்திரன், ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ×