search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bengal Sea"

    ‘கஜா’ புயலை தொடர்ந்து தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #GajaCyclone
    சென்னை:

    வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்தது. பல்வேறு கட்ட கண்ணாமூச்சி போராட்டத்துக்கு இடையே நேற்று அதிகாலை நாகை-வேதாரண்யம் இடையே ‘கஜா’ புயல் கரையை கடந்தது.

    ‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

    ‘கஜா’ புயல் இன்று (நேற்று) காலை 11.30 மணி வரையிலான நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, திண்டுக்கல்லை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    இந்த பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். தற்போதைய நிலவரப்படி தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வருகிற 18-ந்தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 19 மற்றும் 20-ந்தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். இதன் பாதிப்பு குறித்து கணித்து சொல்லப்படும்.

    ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்ததை தொடர்ந்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். 18-ந்தேதி தெற்கு வங்க கடல் மத்திய பகுதியிலும், 19-ந்தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம்.

    கடந்த 1-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலான நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் 22 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.

    இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 29 செ.மீ. ஆகும். எனவே தற்போது பெய்திருக்கும் மழை இயல்பை விடவும் 23 சதவீதம் குறைவு ஆகும். ஆனால் நேற்று (நேற்று முன்தினம்) வரை 29 சதவீதம் வரை மழை அளவு இயல்பை விடவும் குறைவாக இருந்தது. இன்று (நேற்று) 6 சதவீத மழை நமக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் சராசரி மழை அளவை விடவும் 23 சதவீதம் குறைவு என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone
    ×