என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bird flu"
- விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
- எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
தெற்கு வியட்நாமில் உள்ள உயிரியல் பூங்காவில் நாற்பத்தேழு புலிகள், மூன்று சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தை ஆகியவை எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் மை குயுஹ்ன் சஃபாரி பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள வியோன் சோய் மிருகக்காட்சிசாலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ வியட்நாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விலங்கு சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, விலங்குகள் "H5N1" வகை A வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளன.
இருப்பினும், விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எந்த மிருகக்காட்சிசாலை ஊழியர்களுக்கும் சுவாச அறிகுறிகள் எதுவும் இல்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு 2022 முதல், எச்5என்1 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் பாலூட்டிகளிடையே பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறது.
எச்5என்1 நோய்த்தொற்றுகள் மனிதர்களுக்கு லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம், மேலும் சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
- சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
புவனேஸ்வர்:
ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்கியது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் உஷார் நிலையும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் நடந்தது.
இந்த பணிகளுக்காக 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. மேலும் சில பண்ணைகளில் உரிமையாளர்களே இந்த பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கிய இந்த பணிகள் நேற்று மாலையில் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக அருகில் உள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் இன்று நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.
- பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது.
- கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும், விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மக்களை அச்சுறுத்தி வரும் நோய்களில் ஒன்று பறவை காய்ச்சல். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கேரளாவில் தான் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. வாத்து, கோழி ஆகியவற்றின் மூலமாக தான் பறவை காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கேரளாவில் வாத்து, கோழிகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மாநிலத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் மனிதர்களை தாக்காது என கருதப்பட்டு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 59 வயது நபர் மெக்சிகோ நாட்டில் பறவைக் காய்ச்சல் தாக்கி இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
இதனால் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை கேரளாவில் தீவிரப்படுத்தப்பட்டது. பறவைக் காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது. கால்நடை மருத்துவ நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் விலங்கு நோய்களுக்கான மாநில நிறுவனம் மற்றும் பறவை நோய் கண்டறியும் ஆய்வகத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய இந்த குழு பறவை காய்ச்சல் பரவுவது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் மாநிலத்தில் முதன்முறையாக காகங்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் முகம்மா கிராமத்தில் தான் இது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு காகங்கள் மொத்தமாக இறந்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த காகங்களின் உடல் மாதிரியை பரிசோதனைக்காக போபால் அனுப்பியதாகவும், அங்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முகம்மா கிராம பஞ்சாயத்து தலைவர் ஸ்வப்னா பாபு தெரிவித்துள்ளார்.
ஆலப்புழா மாவட்டத்தின் தென் பகுதிகளில் வாத்துகளுக்கு மட்டுமே பரவி வந்த பறவைக் காய்ச்சல், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு கோழி, காகங்களுக்கு பரவி இருப்பதாகவும், மாவட்டத்தின் வடக்கு பகுதிகளுக்கும் இது பரவி வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜமுனா வர்கீஸ் கூறுகையில், பறவைக் காய்ச்சலின் தோற்றம் தற்போது வரை தெரியவில்லை. இது புலம்பெயர்ந்த பறவைகளால் வருகிறதா? அல்லது பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்த பறவைகளால் வந்ததா? என்று தெரியவில்லை. இருப்பினும் இது மனிதர்களுக்கு பரவவில்லை.
கால்நடைத்துறை அதிகாரிகள் தரும் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பொதுமக்களும், விவசாயிகளும் பின்பற்ற வேண்டும் என்றார்.
- கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமடைந்து உள்ளது. ஆலப்புழா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்துக்கும் தற்போது பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10 கி.மீட்டர் தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோட்டயம் அருகே உள்ள மணற்காட்டில் அரசு கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
- கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.
ஈரோடு:
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோழிகளை தாக்கும் பறவை காய்ச்சல் உறுதியானதால் தமிழகத்தில் தொற்று பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநில எல்லைப் பகுதிகளில் கால்நடை மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் கேரளாவில் இருந்து கோழிகளை ஏற்றி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி மருந்து தெளித்து தமிழகத்தில் அனுமதிக்கின்றனர்.
தொற்று பரவக்கூடியது என்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-
பறவை காய்ச்சல் நோய், கோழி, வாத்து, வான்கோழி, நீர்ப்பறவைகள், வனப் பறவைகளை தாக்கும்.
பறவைக் காய்ச்சல் வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், எச்5என்1 என்ற வகை வைரஸ் கிருமி அதிக வீரியம் வாய்ந்தது. நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழி கழிவுகள், பண்ணை உபகரணங்கள், கோழி தீவனம் மூலம் இந்நோய் பரவும். இந்நோய்க்கு சிகிச்சை இல்லை.
நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகள், உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 65 முட்டை கோழி பண்ணைகளில் 32.38 லட்சம் முட்டை கோழிகள், 568 கறிக்கோழி பண்ணைகளில், 27.57 லட்சம் கறிக்கோழிகள், 56 நாட்டுக்கோழி பண்ணைகளில் 2.31 லட்சம் நாட்டுக்கோழிகள் உள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழி பண்ணைகள் புறக்கடை கோழிகளை நேரில் ஆய்வு செய்து மாதிரிகள் சேகரித்து கண்காணிக்கிறோம். வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தை தினமும் பார்வையிட்டு, பறவைகளின் நோய் அறிகுறியை கண்காணிக்கிறோம்.
நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 50 அதிவிரைவு செயலாக்க குழு அமைத்து தயார் நிலையில் வைத்துள்ளோம். கோழி பண்ணையாளர்களுக்கு பறவை காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
- கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
களியக்காவிளை:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் வாத்துகள், கோழிகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன.
இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையில் அவைகளுக்கு பறவை காய்ச்சல் தொற்று பரவி இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து பறவை காய்ச்சலை தடுக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தொற்று கண்டறியப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவு வரை வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடை போன்ற பறவைகளை அழிக்கும் பணி தொடங்கி உள்ளது.
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திற்கும் பரவலாம் என்பதால், இதனை தடுக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. கேரளாவையொட்டியுள்ள உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் படந்தா லுமூடு சோதனை சாவடியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வாத்து, கோழி, கோழி முட்டை மற்றும் கோழி தீவணங்களுடன் வரும் வாகனங்களை கண்காணித்து அவற்றை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மேலும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருள்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
- கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதனையடுத்து இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வளர்க்கப்படும் வாத்துகள், கோழிகள் மற்றும் காடை போன்ற பறவையினங்களை அழிக்கும் பணியில் கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் இருந்து வாத்து மற்றும் கோழிகளை வெளியே எடுத்துச்செல்லவும், அவற்றின் இறைச்சி மற்றும் முட்டைகளை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிக அளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர்கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கோழி பண்ணையில் உயிர் பாதுகாப்பு (பயோ செக்யூரிட்டி) முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளியில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுனர் குழு தெரிவித்து இருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதளா கிராமங்களில் உள்ள சில கோழி பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்தது. இறந்த வாத்துகளை ஆய்வு செய்ததில் எச்5என்1 என்ற பறவை காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதையடுத்து கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தமிழக கேரள எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்ப கவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன் காளியாபுரம், வடக்காடு உள்ளிட்ட 12 சோதனை சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்புத்துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களில் கோழி தொடர்பான பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா? என்பதை கண்காணித்து வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக, கேரள எல்லையான வாளையார் உள்பட 12 சோதனை சாவடிகளிலும் சிறப்பு கால்நடை குழுவினர் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்த குழுவில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், 2 கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் உள்ளனர்.
கேரளாவில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்படும் கறிக்கோழிகள், கோழிகளின் எரு, கோழி முட்டைகள், கோழிக்குஞ்சுகள், வாத்துகள், வாத்து முட்டைகள் உள்ளிட்ட பறவைகள் தொடர்பாக பொருட்களை கொண்டு வரும் வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி கேரளாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர மாவட்டத்தில் 1252 கோழிப்பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு தொடர்பாக கண்காணித்து வருகிறோம்.
மேலும் பண்ணைகளில் திடீர் கோழி உயிரிழப்புகள், பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் நிலைகளில் உள்ள பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தவிர கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறிய 432 மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் தென்படவில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுகிறது.
கோடை மழை பெய்து வரும் நிலையில் கேரளாவில் டெங்கு, அம்மை உள்ளிட்ட நோய்களும் பருவ தொடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆலப்புழாவில் உள்ள எடத்துவா மற்றும் மேலும் ஒரு பஞ்சாயத்தில் விவசாய நிலத்தில் வளர்க்கப்பட்ட வாத்துக்கள் அடுத்தடுத்து இறந்தபடி இருந்தன. இதனால் இறந்த வாத்துக்களில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் இறந்த வாத்துக்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் உடனடியாக சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பறவை காய்ச்சலில் இறந்த வாத்துக்கள் இருந்த பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் செயல்பட்டு வரும் பண்ணையில் வளர்க்கப்படும் பறவைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டத்தை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றனர். பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டபோதிலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றுநோயை விட பறவைக் காய்ச்சல் ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
அன்டார்டிகாவில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 500-க்கும் மேற்பட்ட பென்குயின்கள் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் ஃபெடரேஷன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பென்குயின்களின் இறப்புக்கு பறவைக் காய்ச்சல் வைரஸ் காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு சில ஆண்டாகவே இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து அறிய அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் மிக தீவிரமானது. இது கொரோனா தொற்று நோயை விட 100 மடங்கு மோசமாக பரவுகிறது என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
2003 முதல் பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 100 நோயாளிகளில் 52 பேர் இறந்துள்ளனர். இதனால் இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் 4 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் மனிதர் ஒருவர் இந்தத் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
- சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
சென்னை:
சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை, வர்ண நாரை, கூழைக்கடா, கடல் பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணாமலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தொலைவில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன.
இதையடுத்து பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் வனத்துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவைகளை சேகரித்தனர். பின்னர் இறந்த பறவைகளை கால்நடை மருத்துவ குழுவினர் நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோ தனைக்கு அனுப்பினர்.
இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக்கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. பழவேற்காடு ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.
- பறவை காய்ச்சலால் பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
- ஆந்திராவில் பறவை காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன.
திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்