search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Birth defect in a child"

    பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினாறு செல்வங்களில் மக்கட்பேறு என்பது பெரும் செல்வம். அத்தகைய மக்கட்பேறு எனும் குழந்தை செல்வம் கிடைக்கப்பெறாதவர்களிடம் கேட்டால் தான் அதன் அருமை தெரியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற குழந்தை பாக்கியம் கிடைத்தும், அவ்வாறு கிடைத்த குழந்தை ஏதோ ஒருவித பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்தால் அது வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் விக்னேஷ் கூறியதாவது:-

    குழந்தையின் வளர்ச்சி

    குழந்தை பிறந்தநாளில் இருந்து 2 வயதுக்குள் அதன் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அதாவது குழந்தை பிறந்தநாளில் இருந்து 3 மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவும், 5 முதல் 6 மாதத்தில் அதன் தலை நிற்கவும் வேண்டும். 7 மாதத்துக்குள் குழந்தை குப்புற விழ வேண்டும். 9-வது மாதத்தில் எதையாவது பிடித்து உட்கார வேண்டும். 1 வயதில் தானாக எழுந்து நிற்க வேண்டும். 1½ வயதில் நடக்க வேண்டும். 2 வயதில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க வேண்டும்.

    அதேபோல் குழந்தை பிறந்த 6 மாதத்தில் பேச முயற்சிக்க வேண்டும். அதற்கான அடையாளமாக அது சத்தம் எழுப்ப ஆரம்பிக்கும். 9-வது மாதத்தில் அம்மா, தாத்தா, மாமா என சொல்ல முயற்சிக்கும். 2 வருடத்தில் ஒரு சொல் வார்த்தைகளை பேசும். 3 வருடத்தில் இரண்டு சொல் வார்த்தைகளை பேச வேண்டும்.

    இதுதான் குழந்தையின் சராசரி வளர்ச்சி ஆகும். மேற்குறிப்பிட்ட கால அளவுகளில் ஒன்றிரண்டு மாதங்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அதன் வளர்ச்சியில் இவை அனைத்தும் நடந்திருக்க வேண்டும். இதுவே குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான அடையாளம் ஆகும்.

    இருதய வளர்ச்சி

    பொதுவாக குழந்தை வயிற்றில் உருவாகும் போதே, அதன் பிறவிக்குறைபாடுகளும் உருவாகி விடுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இருதயம் 4 பகுதிகளாக வளர்ந்து அதன்பிறகு ஒன்றாக சேரும். அதன்பிறகுதான் முழு இருதயம் தோன்றும். அவ்வாறு தோன்றும் இருதயத்தில், அது உருவாகும் போதே அதில் ஓட்டை விழ வாய்ப்பு உண்டு.

    அவ்வாறு தானாக விழும் ஓட்டையில் 2 வகை உள்ளது. முதல் வகை ஓட்டை குழந்தை பிறந்த 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் தானாகவே அடைத்துவிடும். 2-வது வகை ஓட்டை என்பது, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தோன்றுவது. இது எவ்வளவு நாள் குறைவாக பிறந்ததோ அவ்வளவு நாட்களோ அல்லது அதற்கு மேலும் சில நாட்களோ இருதயம் வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும்.

    பிறவிக்குறைபாடு

    பிறவிக்குறைபாட்டால், இருதயத்தில் ஓட்டை விழுதல், உதடுபிளவு ஏற்படுதல், வாய்க்குள் மூக்கின் அடியில் ஓட்டை தோன்றுதல், (அவ்வாறு மூக்கிற்குள் ஓட்டை விழுந்த குழந்தை பால் குடித்தால், பால் மூக்கின் வழியாக வெளியே வந்து விடும்.) காது கேளாமை, கண்புரை, இடுப்பு மூட்டு விலகுதல், கால் நேராக இல்லாமல் வளைந்து இருத்தல், முதுகு தண்டில் ஓட்டை விழுதல் அல்லது முதுகு தண்டில் பிளவு ஏற்படுதல், கட்டி தோன்றுதல் போன்றவை பிறவிக்குறைபாடுகள் ஆகும்.

    இதில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டு. மேற்கூறிய பல பிரச்சினைகளில் பெரும்பாலானவை சரி செய்யக்கூடியது.

    சிகிச்சைகள்


    கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் 100 சதவீதம் அதனை சரி செய்து பார்வையை பெறலாம். காது கேளாமை பிரச்சினையை 3 மாதத்திலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதனையும் சரி செய்யலாம். இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஒரு வருடம் தொடர்ந்து கட்டு போடுவதன் மூலம் சரி செய்யலாம்.



    அதேபோல் முதுகுதண்டு பிரச்சினை மற்றும் முதுகுதண்டில் கட்டி போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம். இதுபோன்ற முதுகுதண்டுவட பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு சிறுநீரை அடக்கும் சக்தி இருக்காது. சொட்டு, சொட்டாக சிறுநீர் விழுந்து கொண்டே இருக்கும். இதுதவிர கால் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த முதல் 3 மாதத்துக்குள் இந்த பிரச்சினையை கண்டறிந்து விட்டால் முற்றிலும் இதனை சரி செய்யலாம்.

    பேச்சு, மூச்சின்றி...

    சில குழந்தைகள் பிறக்கும்போது அழாமல் இருக்கும். அதற்கு பேச்சு, மூச்சு இருக்காது. அதுபோன்று இருந்தால் அந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை நோய் தாக்க வாய்ப்புண்டு. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே வலிப்பு வந்து விடும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தை எடை குறை யாமல் இருக்க வேண்டும். பிறக்கும் போதே குழந்தை 2½ கிலோவுக்கு மேல் 3 கிலோ 900 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். 4 கிலோவும் அதற்கு மேலும் குழந்தையின் எடை இருப்பது நல்லதல்ல.

    அதிக எடை உள்ள குழந்தை

    அவ்வாறு 4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள குழந்தைகளை எல்.ஜி.ஏ. குழந்தை என்று மருத்துவம் கூறுகிறது. தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் இதுபோன்ற உடல் பருமனுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு இருதய கோளாறு, முதுகுதண்டில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு.

    அதேபோல் கர்ப்ப காலத்தில் தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் தைராய்டு கோளாறு வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்ற தைராய்டு பிரச்சினை குழந்தைக்கு உள்ளதா? என கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்.

    பெற்றோர்களுக்கு...

    பொதுவாக பிறவிக்குறைபாடுகளை கண்டறிய பெற்றோர்களுக்கு அதற்குரிய பக்குவம் அவசியம் வேண்டும். பெற்றோர்களில் பலர் குழந்தையின் வளர்ச்சிநிலை குறைகளை கண்டறியும் பக்குவம் இன்றி உள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவில்லையென்றால் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

    அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் மேற்கூறிய 2 வருடத்துக்குள் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஏதேனும் மாறுபாடு தோன்றினாலும் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் சிலர் எங்களது பரம்பரையில் பிறந்த குழந்தைகள், தாமதமாகத்தான் குப்புற விழும், எழுந்து நிற்கும், நடக்கும், பேசும் என்று பெருமையாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறு. குழந்தையின் வளர்ச்சி நிலையில் அந்தந்த மாதத்தில் அது சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும்.

    இல்லையெனில் வளர்ச்சி நிலையில் ஏதேனும் பிறவிக்குறைபாடு கூட இருக்கலாம். அதனால் டாக்டரிடம் சென்று குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    ×