search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Black sea conflict"

    • கருங்கடலில் கப்பல் போக்குவரத்தை ரஷியா விரும்பவில்லை
    • ரஷியா தடையால் உக்ரைன தானிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

    ரஷிய- உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன் நாட்டின் 3 துறைமுகங்களை ரஷியா கைப்பற்றியிருந்தது. இதனால் அங்கிருந்து நடைபெற்று வந்த தானிய ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டது.

    கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது.

    அந்த தானிய ஏற்றுமதி கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் இருக்கவும் ரஷியா ஒப்புக்கொண்டது. போர் நடந்து வந்தாலும் இதன்மூலம் உலகின் பல நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி தடையில்லாமல் நடந்து வந்தது.

    இந்த ஒப்பந்தம் இருதினங்களுக்கு முன் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    இதனை அலட்சியப்படுத்தும் விதமாக, ஒரு தற்காலிக கப்பல் பாதையை அமைக்க போவதாக உக்ரைன் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் உக்ரைனின் கருங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்கள் ராணுவ தளவாடங்களையும், ஆயுதங்களையும் ஏற்றிச்செல்லும் போர் இலக்காக கருதப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது. எந்தெந்த நாடுகளின் கொடிகளை அந்த கப்பல்கள் தாங்கி வருகின்றனவோ அந்த நாடுகளும் உக்ரைன் உடனான சிக்கலில் எங்களுக்கு எதிராக பங்குபெறும் நாடுகளாக ரஷியா கருதும் என்றும் மேலும் கருங்கடலின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை கப்பல் போக்குவரத்திற்கு ஆபத்தான பகுதியாகவும் அறிவித்திருக்கிறது.

    ஆனால், அத்தகைய கப்பல்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு ராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.

    இதனிடையே கப்பல்களையும், அதிலுள்ள சரக்குகளையும் காப்பீடு செய்யும் நிறுவனங்கள், கருங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு காப்பீட்டை வழங்குவதை மறுபரிசீலனை செய்து வருகின்றன. அண்டர்ரைட்டர் (Underwriter) எனப்படும் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் ரஷியாவால் ஏற்படக்கூடிய தாக்குதல் ஆபத்தை காரணம் காட்டி மிக அதிக தொகையை கட்டணமாக கேட்கலாம், இல்லை காப்பீட்டையே முழுவதுமாக மறுக்கலாம் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

    இதனால் தானிய ஏற்றுமதி முடங்கி, பெரும் உணவு தானிய நெருக்கடி உலகளாவிய அளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக ஏழை நாடுகளும், வளரும் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கிறார்கள்.

    இதற்கிடையே ரஷியாவின் ஆக்ரமிப்பை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ($1.3 பில்லியன்) ராணுவ உதவி தொகையாக வழங்குகிறது.

    ×