search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boat Damage"

    இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சென்னை:

    ராமசாமி படையாச்சியாரின் பிறந்த தினத்தை (செப்டம்பர் 16-ந் தேதி) ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வன்னியர் சத்திரியர்கள் கூட்டு இயக்க தலைவர் சி.ஆர்.ராஜன், முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.ஆர்.ராமதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத், வன்னியர் குல சத்திரிய மகா சங்க மாநில தலைவர் வி.பலராமன், வன்னியர் வேலைவாய்ப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டெல்டா நாராயணசாமி, செயலாளர் ராஜேந்திரன், அகில பாரத சத்திரிய மகாசபை தலைவர் ஜி.சந்தானம் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    அதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக மதுரையை சேர்ந்த டாக்டர்கள் எஸ்.ஏ.பாலமுருகன், பி.கணேஷ் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து நன்றி கூறினர்.

    இதையடுத்து அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் சங்க தலைவர் என்.ஜெ.போஸ் மற்றும் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-


    ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு செல்ல ஏதுவாக ராமேசுவரத்தை அடுத்த மூக்கையூரிலும், பாம்பன் குந்துகாலிலும் மீன்பிடி துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து விரைவாக பணி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்தோம். டீசல் விலை உயர்வு மற்றும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் மீன்பிடி தொழில் அழிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அரசு 2014-ம் ஆண்டு முதல் சிறைபிடித்த 184 படகுகளை முறையாக பராமரிக்காததால் அவை முழுமையாக சேதமடைந்து விட்டன. எனவே சேதமடைந்த படகு உரிமையாளர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த வாரத்தில் 16 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்தது. இந்த மீனவர்களை மீட்பதுடன், படகுகள் சேதமடைவதற்கு முன்பாக அவற்றை மத்திய அரசு மூலம் உடனடியாக மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகனை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர். 
    ×