search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi forest area"

    போடி வனப்பகுதியில் மர்மகும்பல் தீவைத்து செல்வதால் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி வனப்பகுதியில் மர்மகும்பல் தீவைத்து செல்வதால் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகிறது.

    கடந்த வருடம் மார்ச் மாதத்தில் போடி அருகே உள்ள குரங்கனி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீப்பற்றியது. இதில் அனுமதியின்றி டிரக்கிங் சென்றதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    அதனை தொடர்ந்து வனப் பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதியின்றி செல்லும் நபர்களுக்கு அபராதம் விதித்து கடும் எச்சரிக்கையும் விடுக்கின்றனர்.

    ஆனால் அதனையும் மீறி சில மர்மநபர்கள் வனப்பகுதிக்கு சென்று தீவைத்து செல்வதால் விலங்குகள் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும் விலை உயர்ந்த மரங்களும், அரியவகை மூலிகைச்செடிகள் எரிந்து நாசமாகிறது.

    போடி அருகே சிலமலை கிராமம் கழுகுமலைபீட் ஒச்சனூத்து புலத்தில் திடீரென காட்டுத்தீப்பற்றி மளமளவென பரவியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.காற்றின் வேகம் அதிகரித்துள்ளால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் தேவதானப்பட்டி அருகே முருகமலை வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிகிறது. நேற்றிரவு திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சிறிதுநேரத்தில் மழை பெய்ததால் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது.

    அனுமதியின்றி வனப்பகுதிக்கு செல்லும் மர்மநபர்கள் உணவு சமைக்க மற்றும் குளிர்காய தீ மூட்டும் போது தீப்பற்றுகிறது. மேலும் சில சமூகவிரோதிகளின் செயல்களினாலும் வனப்பகுதியில் தீப்பற்றுவது தொடர் கதையாகி வருகிறது.எனவே வனத்துறையினர் ரோந்துபணியை தீவிரப்படுத்த வேண்டும் என வனஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    ×