search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "book Exhibition"

    சென்னைப் புத்தகக் கண்காட்சியினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கின்றார். #EdappadiPalaniswami

    சென்னை:

    தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமான பபாசி தலைவர் வயிரவன், செயலாளர் வெங்கடாசலம் சென்னையில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சி பற்றி கூறியதாவது:-

    உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 4-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி நிறைவு பெறுகிறது. இப்புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

    வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 வரையிலும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் கண்காட்சி நடை பெறும்.

    சென்னைப் புத்தகக் கண்காட்சி வரலாற்றில் முதன் முறையாக 17 நாட்கள் நடைபெறுகிறது. (இதற்கு முன்பு வரை 13 அல்லது 14 நாட்கள் மட்டுமே புத்தகக் காட்சி நடைபெற்றது) இந்தப் பதினேழு நாட்களில் 10 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பது கூடுதல் சிறப்பு.

    இந்த மாபெரும் 42-வது சென்னைப் புத்தகக் கண்காட்சியினை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனி சாமி 4-ந்தேதி மாலை 6 மணியளவில் தொடங்கி வைக்கின்றார்.

    முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச் செல்வன் சிறப்புரையாற்றுகிறார். விழாவுக்கு நல்லி குப்புசாமி செட்டி தலைமை ஏற்கிறார்.

    820 அரங்குகளுடன் 428 பங்கேற்பாளர்களுடன் சென்னைப் புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. இதில், சுற்றுச்சூழலுக்கெனத் தனி அரங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு வாசகர்களைக் கவரும் வண்ணம் பிரம்மாண்டமான தமிழன்னை உருவச்சிலை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நிறுவப்படுகிறது. இந்தச் சிலையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் 5-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்குத் திறந்து வைக்கிறார்.

    தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் கோ.விஜயராகவன் வாழ்த்துரை வழங்குகிறார். தமிழன்னை திருவுருவத்தைப் பிரபலப் படுத்தி வரும் பேராசிரியர் ஆறு.அழகப்பன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

    பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறப்பு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான பேச்சு மற்றும் ஓவியப் போட்டி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியும் நடத்தப்பட உள்ளன.

    வாசகர்கள்- எழுத்தாளர்கள் சந்திப்புக்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும் வாசகர்களுடன் முன்னணி எழுத்தாளர்கள் உரையாட இருக்கிறார்கள். பொங்கல் திருநாளைக் கொண்டாடும் வகையில் 16-ந்தேதி நம்முடைய பண்பாட்டைப் பறை சாற்றும் வகையில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    8-ந்தேதி அன்று கமல் ஹாசன் பங்கேற்று ‘‘வாசித் தேன் யோசித்தேன்’’ என்கிற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

    இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது முல்லை பதிப்பகம் முல்லை பழநியப்பனுக்கு வழங்கப்பட உள்ளது.

    இவ்வாண்டு முதல்முறையாகச் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்ச வேணி பெரியண்ணன் பெயராலான அவ்விருது திலகவதி ஐ.பி.எஸ்.க்கு வழங்கப்பட இருக்கிறது. தமிழக முதல்வர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

    புத்தக கண்காட்சி வளாகத்தில் இரண்டு ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஸ்வைப்பிங் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    புத்தகக் கண்காட்சியில் நூல்களுக்கு 10 சதவீதம் கழிவு வழங்கப்படும். நுழைவுக் கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #EdappadiPalaniswami

    ×