search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boy confession"

    கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதால் சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்தோம் என்று 2 சிறுவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை சூளைமேடு ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவர் வசித்து வந்த பகுதியில் உள்ள வீடுகள் காலி செய்யப்பட்டன.

    இதனை தொடர்ந்து இவர் தனது குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து சூளைமேடு நெடுஞ்சாலையில் நடைபாதையில் வசித்து வந்தார்.

    பழைய புத்தகங்களை நடைபாதையில் போட்டு பெருமாள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (17). படிப்பை பாதியில் நிறுத்திய இவன் ஊர் சுற்றி வந்தான்.

    இவன் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று காணாமல் போனான். இது தொடர்பாக தந்தை பெருமாள் சூளைமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேசை தேடி வந்தனர். ஆனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதனால் ராஜேஷ் வீட்டில் சொல்லாமல் வெளியூருக்கு எங்காவது சென்று தங்கி இருந்து வேலை செய்து வரலாம் என்று கருதப்பட்டது. இதனால் போலீசாரும் ராஜேஷ் காணாமல் போன வி‌ஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படியே விட்டுவிட்டனர்.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டி முன்பு நேற்று மாலை 2 சிறுவர்களும் பரத்குமார் என்ற 19 வயது இளைஞரும் ஆஜரானார்கள். சூளைமேடு கிழக்கு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த இவர்கள் 3 பேரும், காணாமல் போன ராஜேசை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி ஆணையாளர் முத்துவேல் பாண்டி சிறுவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார். அப்போது 3 பேரும் ராஜேசை கொலை செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் புதைத்தது தெரிய வந்தது. இது பற்றி அவர்கள் அளித்த திடுக்கிடும் வாக்கு மூலம் வருமாறு:-

    ராஜேஷ் எப்போதும் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பான் இது எங்களுக்கு மிகவும் தொல்லையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி நாங்கள் 3 பேரும் நுங்கம்பாக்கம் சுடுகாட்டின் உள்ளே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.

    அப்போது அங்கு வந்த ராஜேஷ் எங்களிடம் கத்தியை காட்டி மிரட்டினான். பணம் தராவிட்டால் கொன்று விடுவேன் என்று கூறி கத்தியாலும் குத்த வந்தான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ராஜேசை கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர் நுங்கம்பாக்கம் சுடுகாட்டிலேயே குழி தோண்டி ராஜேசின் உடலை புதைத்தோம். இவ்வாறு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    ராஜேஷ் கொலை செய்யப்பட்டு 6 மாதம் ஆகிறது. நுங்கம்பக்கம் சுடுகாட்டில் ராஜேசின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை 3 பேரும் அடையாளம் காட்டினர். அந்த இடத்தை தோண்டி ராஜேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    கொலையுண்டு 6 மாதமாகி விட்டதால் ராஜேசின் உடல் எலும்புக் கூடாகி இருக்கும் என்பதால் சுடுகாட்டில் தோண்டி எடுத்தவுடன் அங்கு வைத்தே பிரேத பரிசோதனை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ராஜேசின் உடல் இன்று அல்லது நாளை தோண்டி எடுக்கப்பட உள்ளது.

    ராஜேசை கொலை செய்து புதைத்தவர்களில் 2 சிறுவர்கள் சுடுகாட்டில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டு வெட்டியான் வேலை செய்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கச்சிதமாக குழிதோண்டி ராஜேசின் உடலை புதைக்க முடிந்துள்ளது. சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போல சத்தமில்லாமல் ராஜேசின் உடலையும் புதைத்து விட்டு எதுவும் தெரியாதது போல சுற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கில் இன்னொரு சிறுவனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவன் தலைமறைவாக உள்ளான். சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் சுடுகாட்டில் அந்த சிறுவனும் இறந்துள்ளான். அவனை கொலையுண்ட ராஜேஷ் கத்தியால் குத்தி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ×