search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building fire"

    பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டதில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் பலியாகினர். #ParisBuildingFire
    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள எர்லாங்கர் வீதியில் பழமை வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 1970-ம் ஆண்டு கட்டப்பட்ட 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, சற்று நேரத்தில் மேல் தளத்துக்கும் பரவியது.

    2 தளங்களிலும் உள்ள வீடுகளில் தீ பற்றி எரிந்தது. வீடுகளில் இருந்த அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தீ பற்றி எரிவதை அவர்களால் உணரமுடியவில்லை. ஒரு கட்டத்தில் வீடு முழுவதையும் தீ சூழ்ந்து கொண்டதை அடுத்து அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர்.

    நாலாபுறமும் பற்றி எரியும் தீயின் மத்தியில் தாங்கள் இருப்பதை உணர்ந்து அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு குடியிருப்பின் கீழ் தளங்களில் இருந்த மக்கள் பதறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    தங்களது குடியிருப்பின் மேல் தளங்களில் தீ எரிந்துகொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    அவர்கள் முதலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் வேகம் கட்டுக்குள் அடங்காத வகையில் இருந்ததால் தீயை அணைப்பது சவாலாக இருந்தது. இதற்கிடையில் மேல் தளங்களில் தீயில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தவர்களை மீட்கும் முயற்சியும் ஒரு புறம் நடந்தது.

    எனினும் ஒரு குழந்தை உள்பட 10 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. அவர்கள் தீயில் கருகி கரிக்கட்டைகளாகி இருந்தனர். அதே சமயம் பலர் தீயில் இருந்து தப்பிக்க அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு ஏறி தஞ்சம் அடைந்தனர்.

    அவர்களை ராட்சத ஏணிகள் மூலம் மீட்டனர். இப்படி 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த தீக்காயமும், 23 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டிருந்தது. அதே போல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 வீரர்களும் காயம் அடைந்தனர்.

    இதற்கிடையில் அடுக்குமாடி குடியிருப்பில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணி விடியவிடிய நடந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதும் அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சியான தகவல் வெளியானது. அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்படவில்லை என்பதும், வேண்டுமென்றே தீவைக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இது தொடர்பாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #ParisBuildingFire
    பாரிஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரிசின் எர்லாங்கர் வீதியில் உள்ள 8 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளங்கள் தீப்பற்றி எரிந்தன. இதனால் அந்த தளங்களில் வசித்தவர்கள் பதறியடித்து வெளியேறினர். இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மற்ற தளங்களுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மேலும் தீப்பிடித்த தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். சிலர், அருகில் உள்ள கட்டிடத்தின் கூரைகளில் தஞ்சம் அடைந்தனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    தீயை அணைத்த பின்னர் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது, 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் கூறியுள்ளனர். சுமார் 30 பேர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #ParisBuildingFire
    ×