search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman rajiv sexena"

    ரூ.3,600 கோடி மதிப்புள்ள விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல் தொடர்பாக துபாயில் கைதான இடைத்தரகர் ராஜீவ் சக்சேனாவை ஜாமினில் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. #AgustaWestlandcase #RajeevSaxena #RajeevSaxenabail #VVIPChopper
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

    இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

    இதில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-7-2018 அன்று துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

    இந்த குற்றபத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.  மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட வெளிநாட்டினர் கிறிஸ்டியன் மைக்கேல், கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய்வாழ் இந்திய தொழிலதிபரான ராஜீவ் சக்சேனா ஆகியோருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    இவர்களில் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தலைமறைவாக இருந்த மற்றொரு இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா 31-1-2019 அன்று துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில், தன்னை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள பொருளாதார அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் ராஜீவ் சக்சேனா முன்னர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

    இந்நிலையில், ராஜீவ் சக்சேனாவுக்கு ஜாமின் அளித்து நீதிபதி இன்று உத்தரவிட்டார். 

    ஜாமினில் செல்லும் ராஜீவ் சக்சேனாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிபதியிடம் வலியுறுத்தியதால் ராஜீவ் சக்சேனாவுக்கு ஆயுதமேந்திய மூன்று பாதுகாவலர்கள் 24 மணிநேரமும் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்க நீதிபதி அனுமதி அளித்தார். #AgustaWestlandcase #RajeevSaxena #RajeevSaxenabail #VVIPChopper
    ×