search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ByElection"

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.#ThiruvarurByElection
    தமிழகத்தில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. #ByElection #HCMaduraiBench
    மதுரை:

    தமிழகத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைக்கக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், 18 தொகுதிகளிலும் கடந்த முறை தேர்தல் நடத்துவதற்கு செலவான தொகையை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரிடமும் வசூலிக்க வேண்டும் என்றும், அதுவரை இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.



    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அத்துடன், இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #ByElection #HCMaduraiBench

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram
    மதுரை:

    தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது இடைத்தேர்தல் நடத்தாத தேர்தல் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினர்.



    மேலும் தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? என்று கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர். #HCMaduraiBench #Byelection #Thiruvarur #Thiruparankundram 
    20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். #DMK #ADMK

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இடைத்தேர்தலுக்கான பணிகளில் இறங்கி உள்ளனர்.

    இந்த இடைத்தேர்தலுக்கான பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இப்போதே தீவிரமாக இறங்கிவிட்டனர். தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை சேகரித்து வைத்துள்ளனர்.

    தொகுதியில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க., தி.மு.க. வினர் போட்டி போட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

    சென்னையில் பெரம்பூர் தொகுதியில் உள்ள திரு.வி.க. நகர் பஸ்நிலையம் அருகே உள்ள சுவர்களில் தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னம் வரைந்து வருகிறார்கள். இதேபோல் அ.தி.மு.க.வினர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே சுவர்களில் இரட்டை இலை சின்னம் வரைந்து வருகிறார்கள்.

    தினகரன் கட்சியினரும் சின்னம் வரைவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதுபோல் 20 தொகுதிகளிலும் இடைத் தேர்தலுக்கான வேலைகளில் அ.தி.மு.க.-தி.மு.க. தொண்டர்கள் இறங்கி உள்ளனர். #DMK #ADMK

    இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் ஈசுவரப்பா கூறியுள்ளார். #Eshwarappa #BJP
    பெங்களூரு :

    சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. சிவமொக்கா, மண்டியா, ராமநகர் ஆகிய தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட்டுள்ளன.

    இந்த இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பல்லாரியில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தாவை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஈசுவரப்பா நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு முன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் சித்தராமையா, முதல்-மந்திரியை போல் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவரை கேள்வி கேட்க யாரும் இல்லை. அவருக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது. வேட்பாளர்களை தேர்வு செய்ததில் காங்கிரசார் கவனம் செலுத்தவில்லை. கர்நாடக காங்கிரஸ் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவ், காகித புலியை போன்றவர். அவரை பார்த்தால் யாருக்கும் பயம் இல்லை.



    அவரை காங்கிரசார் கண்டுகொள்வது இல்லை. கர்நாடக அரசியலில் ஒரு தொங்குநிலை நிலவுகிறது. இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு இந்த நிலைக்கு முடிவு வரும். கடந்த சட்டமன்ற தேர்தல் வரை, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பாம்பும், கீரியுமாக இருந்தனர். குமாரசாமி அவரது தந்தை மீது ஆணையாக முதல்-மந்திரியாக முடியாது என்று சித்தராமையா சொன்னார்.

    சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான முதல்-மந்திரியை நான் பார்த்ததே இல்லை. இப்போது அந்த கட்சியினர் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். இடைத்தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். மனதுக்கு வந்தபடி பேசும் சித்தராமையாவை போன்ற ஒரு மோசமான அரசியல்வாதியை நான் பார்த்தது இல்லை.

    தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டோம் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கூறினர். ஆனால் காங்கிரசுடன் அந்த கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. காங்கிரசுக்கு வந்துள்ள மோசமான நிலை வேறு எந்த கட்சிக்கும் வரக்கூடாது. இந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈசுவரப்பா கூறினார். #Eshwarappa #BJP
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். #OPRawat #18MLACase
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்து இருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும், இடைத்தேர்தலை நடத்த தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், காலியாக உள்ள தொகுதிகளில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற விதி இருப்பதால், 6 மாதங்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என தெரிவித்துள்ளார்.

    இதன்மூலம், விரைவில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. #OPRawat #18MLACase
    தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் தொகுதிகள் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை கழகம் வந்தார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இறைவன் அருளால் இன்றைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

    கேள்வி:- தீர்ப்பினால் 18 தொகுதியும் காலியாக இருப்பதால் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- இரண்டு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைமுறை சிக்கலால் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது, அப்பொழுதே தயாராக இருந்தோம். இப்பொழுது 18 சட்டமன்ற உறுப்பினர்களுடைய தேர்தல் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த இடம் காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடன், சட்டப்படி, அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்திக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கேள்வி:- 18 தொகுதியிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்தை நீங்கள் வலியுறுத்துவீர்களா?

    பதில்:- இது எல்லாமே சட்டப் பிரச்சனை, தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும், அதில் நாங்கள் எந்தக் கருத்தும் சொல்ல இயலாது. ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கிற்கு இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தலாம், அ.தி.மு.க. அதிலே போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    கேள்வி:- தேர்தலுக்கு இந்தத் தீர்ப்பு எந்த அளவிற்கு உதவும்?

    பதில்:- இந்தத் தீர்ப்பு வேறு, பாராளுமன்றத் தேர்தல் வேறு. பாராளுமன்றத் தேர்தல் எப்பொழுது வந்தாலும் எம்.ஜி.ஆர், அம்மா இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு, அந்த இருபெரும் தலைவர்கள் கொண்டு வந்த அந்த திட்டத்தை முழுமையாக நாங்கள் நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கின்றோம். இன்றைக்கு மக்களிடத்திலே அபரிமிதமான செல்வாக்கை அம்மாவினுடைய அரசு பெற்றிருக்கிறது.


    ஆகவே, அம்மா இருக்கின்றபொழுது பாண்டிச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலே 37 இடங்களை வென்று இந்தியாவிலேயே பாராளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சி அ.தி.மு.க. என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதே நிலை இப்பொழுதும் பாராளுமன்றத்தில் தொடரும்.

    கேள்வி:- நீங்கள் கேவியட் மனு தாக்கல் செய்வீர்களா?

    பதில்: கற்பனையான கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. மேல்முறையீடு செய்தால்தான் அதைப் பற்றி சிந்திக்க முடியும்.

    கேள்வி:- இந்த தீர்ப்பு பின்னடைவு இல்லை, இது ஒரு அனுபவம் தான் என்று டி.டி.வி.தினகரன் சொல்கிறாரே?

    பதில்:- என்ன அனுபவம் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா இருக்கின்றபொழுது அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். அண்ணா திமுக உறுப்பினரே இல்லை, அவருடைய கருத்து எப்படி அ.தி.மு.க.விற்குப் பொருந்தும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict #ByElection
    தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேதி இப்போது அறிவிக்க இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. #ElectionCommission #OmPrakashRawat
    புதுடெல்லி:

    தமிழகத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் உள்ளிட்ட 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அரசும், திமுக, டிடிவி தினகரனின் அ.ம.மு.க மற்றும் மு.க. அழகிரி உள்ளிட்ட பலரும் தங்களது அரசியல் பலத்தை சோதிப்பதற்காக இந்த இடைத்தேர்தல்களை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

    இந்நிலையில், இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராஜஸ்தான் உள்ளிட்ட5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். தொடர்ந்து தமிழகத்தின் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    ஆனால், மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தேர்தல் ஆணையர் கடிதம் எழுதியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். #ElectionCommission #OmPrakashRawat
    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே அமமுக வெற்றி பெற்று விடும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். #ADMK #OPS #EPS #AMMK #Pugalenthi
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. .

    கூட்டத்தில் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் கொள்கைகளை நிறைவேற்றியவர் ஜெயலலிதா. தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்கள் கூட மு.க.ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டம் இல்லை, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் டி.டி.வி.தினகரன் தான் என்று சொல்கிறார்கள்.

    நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தலாக இருந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். துரோகிகள் விலகுவார்கள். இரட்டை இலையையும், கழக கொடியையும் மீட்டெடுப்போம்.

    தமிழகத்தில் பா.ஜ.னதா ஆட்சி தான் நடக்கிறது. மத்தியில் பா.ஜ.னதா ஆட்சிக்கு தினகரன் தான் முடிவு கட்டுவார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் நமக்கு எதிராக பிரசாரம் செய்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முடிவில் கோட்டை பகுதி செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். #ADMK #OPS #EPS #Pugalenthi
    இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அதிகத்தூர் கிராமத்தை தத்து எடுத்ததில் இருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. மழைபெய்து உள்ளதால் தண்ணீர் தொடர்பான பணிகள் செய்ய முடியவில்லை. கழிப்பறைகள் கட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கான பணிகள் செய்ய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு உள்ளோம்.

    100 கழிப்பிடங்கள் கட்ட எவ்வளவு நாள் தேவைப்படுமோ அதற்குள் கட்டப்படும். அதற்கு மேல் ஆகாது. அரசு அனுமதி தந்து பணிகள் தொடங்கியதும்தான் எப்போது முடிக்கப்படும் என்று கூறமுடியும்.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை. எங்களுக்கு என்ன சரி என்று படுகிறதோ அதை செய்வோம். கட்சியின் கட்டமைப்பு பற்றி நாங்கள் சொல்லவில்லை. ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக கூறுவது உங்களுடைய யூகம். கட்சியில் நிர்வாகிகள் தேர்தல் நடத்த தற்போது வாய்ப்பு இல்லை. நிர்வாகிகள் நேர்காணல் நடத்தப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. ஆனால் நான் வேறு நிகழ்வுகள் இருப்பதால் அதில் பங்கேற்கவில்லை.

    நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் தனிப்பாதை அமைப்பது பற்றி சட்டவல்லுனர்களுடன் கேட்டுதான் கருத்து சொல்ல முடியும்.

    இந்தியா முழுவதும் காவிமயம் ஆக்க முயற்சிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு பாடம் புகுட்டுவோம் என்று கூறுவது மு.க.ஸ்டாலினின் கருத்தாகும். எங்களுடைய கருத்தை நேரம் வரும்போது தெரிவிப்போம். மத்திய அரசு காவி மயத்தை பரப்புகிறதா? என்பதைப்பற்றி நான் பலமுறை பேசியிருக்கிறேன். அதுபற்றி திரும்ப திரும்ப பேசுவது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது-
    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவர் கடந்த 7-ந் தேதி மரணம் அடைந்தார்.

    கருணாநிதியின் மறைவு குறித்த தகவல் சட்டசபை செயலகத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று (10-ந் தேதி) அறிவிப்பாணை வெளியிட்டார். அந்த அறிவிப்பாணை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    எனவே அந்தத் தேதியில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் திருவாரூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் இனி மேற்கொள்ளும். எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியானதாக சமீபத்தில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது, நினைவுகூரத்தக்கது.
    ×