search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Callan Mulvey"

    லியோ ஷாங் இயக்கத்தில் ஜாக்கி சான் - டெஸ் ஹூப்ரிச் நடிப்பில் வெளியாகி இருக்கும் `ப்ளீடிங் ஸ்டீல்' படத்தின் விமர்சனம்.
    போலீஸ் அதிகாரியான ஜாக்கி சானின் மகள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை பார்ப்பதற்காக ஜாக்கி சான் மருத்துவமனைக்கு செல்லும் நிலையில், விஞ்ஞானி ஒருவரை அவரது குழுவுடன் சென்று காப்பாற்றி வரும்படி ஜாக்கி சானுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

    அந்த விஞ்ஞானி, தான் உருவாக்கும் மரபணு இதயத்தை ஆண்ட்ரூ என்பவரது உடலில் பொறுத்துகிறார். அதனால் தாக்குப்பிடிக்க முடியாத அந்த நபர், கொடூர அரக்கன் தோற்றத்திற்கு மாறுகிறார். பின்னர் அதே விஞ்ஞானி உருவாக்கும் அழிவே இல்லாத மரபணு மாற்றத்தை தன்னுள் செலுத்தி தன் பழைய தோற்றத்துக்கு மாறவும், இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கவும் திட்டமிடுகிறார். 



    அதற்காக அந்த விஞ்ஞானியை கடத்தி, அவர் உருவாக்கிய மரபணுவை உபயோகப்படுத்தி அவரை கொல்லவும் திட்டமிடுகிறார். இந்த நிலையில், அவரை காப்பாற்றச் செல்லும் ஜாக்கி சானுக்கும், அவரை கடத்தி கொல்ல முயற்சிப்பவர்களுக்கும் சண்டை நடக்கிறது. இதில் அந்த விஞ்ஞானியை ஜாக்கி சான் காப்பாற்றி விடுகிறார். அதேநேரத்தில் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த ஜாக்கி சானின் மகளும் இறந்து விடுகிறாள். 

    தான் உருவாக்கிய மரபணு உருவாக்கத்தை தன்னை காப்பாற்றிய ஜாக்கி சானின் மகளின் உடலில் செலுத்தி அவளை உயிர் பெற வைக்கிறார் அந்த விஞ்ஞானி. இதனால் பழைய நியாபகங்களை இழந்த அவளை ஒரு ஆசரமத்தில் சேர்த்து பாதுகாத்து வருகிறார் ஜாக்கி சான். 



    இந்த நிலையில், ஜாக்கி சானின் மகளின் உடலில் இருக்கும் மரபணுவை எடுத்து தனது உடலில் செலுத்துவதற்காக ஜாக்கி சானின் மகளை ஆண்ட்ரூ கடத்துகிறார். 

    கடைசியில் அந்த மரபணுவை ஆண்ட்ரூ தனது உடலில் செலுத்திக் கொண்டாரா? ஜாக்கி சான் அதனை தடுத்தாரா? தனது மகளை காப்பாற்றினாரா? தனது மகளுக்கு பழைய நினைவுகள் திரும்ப வந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஜாக்கிசான் வழக்கம் போல தனது காமெடி கலந்த பேச்சு, ஆக்‌ஷன் என ரசிக்க வைத்திருக்கிறார். வயதாகிவிட்டதால் பெரிய அளவிலான சண்டைக் காட்சிகளில் ஈடுபடவில்லை என்றாலும், ரசிக்கும்படியான சண்டைக் காட்சிகளையே கொடுத்திருக்கிறார். ஷோ லோ, ஓயாங் நானா, காலன் முல்வி, டெஸ் ஹூப்ரிச் என மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    வில்லனிடம் இருந்து தனது மகளை காப்பாற்றும் வழக்கமான அப்பா கதையாக இருந்தாலும், திரைக்கதையில் மாற்றம் கொண்டுவந்து அதனை ரசிக்கும்படியாக உருவாக்கி இருக்கிறார் லியோ ஷாங். 

    ஃபெய் பெங்கின் பின்னணி இசை படத்திற்கு பலம். டோனி செங்கின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ப்ளீடிங் ஸ்டீல்' அடிதடி கலாட்டா.  

    ×