என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "canal"

    • அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது.
    • அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டதால் பிரதான கால்வாயில் 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. 90 அடி உயரமுள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா், கரூா் மாவட்டங்களில் சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை நல்ல முறையில் பெய்து வருவதால் பாசனத்துக்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு வருகிறது.

    மேலும் திருப்பூா், கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக் கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கருக்கு செப்டம்பா் 25ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீா்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் நவம்பா் முதல் வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம், காந்தலூா், மறையூா், கோவில்கடவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. இதனால் பாம்பாறு, சின்னாறு, தேனாறு ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் அமராவதி அணைக்கு நீா் வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீா்மட்டம் மளமளவென அதிகரித்து வந்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை அணையின் நீா்மட்டம் 87 அடியை கடந்தது. பொதுவாக அணையின் நீா்மட்டம் 88 அடியை எட்டும் நிலை ஏற்பட்டால் உபரி நீா் திறந்து விடப்படும். ஆனாலும் அணையின் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாய் மூலம் 440 கனஅடி தண்ணீா் புதன்கிழமை மாலை திறந்து விடப்பட்டது. இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் கூறியதாவது:-

    அணையின் நீா்மட்டம் 87 அடியை எட்டியுள்ளதால் விதிப்படி முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக அணை 88 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீா் திறந்து விடப்படும். இதற்கிடையில் பிரதான கால்வாயில் பாசனத்துக்காக 440 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுப் பணித் துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனா். 90 அடி உயரமுள்ள அணையில் புதன்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 87.08 அடி நீா் இருப்பு கானப்பட்டது. 4035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3886 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 950 அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. 525 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

    • பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கால்வாயை கிராம மக்கள் தூர்வாரினர்.
    • குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    தென் மாவட்ட நதிகளில் கடலில் கலக்கும் நதிகளில் ஒன்றாக குண்டாறு திகழ்கிறது. திருமங்கலம், வடகரை, மைக்குடி, தூம்பக்குளம் வழியாக காரியாபட்டி, கமுதி வரை குண்டாறு சென்று ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு செல்லும் பகுதிகளில் உள்ள கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து அடுத்தடுத்த கிராமங்களுக்கு செல்கிறது.

    குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் குண்டாறு தூர்வாரப்படாததால் முட்புதர்கள் செடி, கொடிகள் அடைத்து தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் இந்த பகுதி மக்கள் மழைக்காலத்திற்கு முன்பே குண்டாற்றை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். தற்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வடகரை வழியாக மைக்குடி, தூம்பகுளம் சென்று அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள் நிரம்பும். தற்போது வரை நடவடிக்கை எடுக்காததால் தூம்பக்குளம் கிராம மக்கள் திரண்டு தங்கள் பகுதி கண்மாய்க்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக குண்டாற்றை தூர் வாரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பொதுப்பணி அதிகாரிகளின் அலட்சியத்தால் தூம்பக்குளம் கிராம மக்கள் கால்வாயை தூர்வாரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • நீரோட்டம் முழுவதுமாக தடைபட்டு காணப்படுகிறது.
    • பாசனத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனபகுதி களில் வேளாண் பணிகளுக்காக மேட்டூர் அணை மே மாதத்தில் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிக பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்று, மகசூலும் அதிக அளவில் கிடைக்கப்பெற்றது.

    பூதலூர் ஒன்றிய பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யக் கொண்டான்நீட்டிப்பு கால்வாய் மூலம் ஏரிகளில் நீர் நிரப்பி அதன் மூலம் ஒருபோக சாகுபடி நடைபெறும்.

    நடப்பாண்டு உய்யக் கொண்டான் நீட்டிப்பு கால்வாயின் தண்ணீர் 16க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி அதன் மூலம் 3500 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடைபெற்றது.

    உய்யக் கொண்டான் நீட்டிப்புக் கால்வாயில் தலைப்பு உள்ள பகுதியில் வாழவந்தான் கோட்டை ஏரியிலிருந்து நீர் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்டாலும், அப்போது தொடர்ந்து பெய்த பெருமழை காரணமாக இந்த நீட்டிப்பு கால்வாய் பாசன பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி சாகுபடி நடைபெற்று உள்ளது.

    இதற்கிடையில் உய்யக்கொண்டாயின் நீட்டிப்பு கால்வாய் தண்ணீர் செல்லும் கீழ்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டது, அதிலிருந்து தண்ணீர் அதன் மேலே உள்ள காட்டு வாரி மூலம் வெளியேறிய கொண்டுள்ளது.

    இதனால் நீரோட்டம் முழுவது மாக தடைபட்டு போய் காணப்படு கிறதுகீழ்ப்பால உடைப்பை தற்போதுசீரமைக்க இயலாது என்று பொதுப்ப ணித்துறை வட்டாரங்கள் தெரிவித்து, மாற்று ஏற்பாடாக கட்டளை மேட்டு கால்வாய் மூலம் உய்யக் கொண்டான்கால்வாய் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதி அளித்துள்ளது.

    தலைப்பில் இருந்து 10 கிலோமீட்டர் தொலை விற்கு பாசன நீரோட்டத்திற்கு தடை ஏற்படும் ஆகாயத்தாமரை மற்றும் வள்ளி செடிகளை அகற்றி தலைப்பின் அருகில் கீழ்ப்பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்து அந்த இடத்தில் ஒரு மாற்று ஏற்பாடாக தண்ணீரை குழாய் மூலம் சிறு தொலைவுக்கு கொண்டு வந்து பூதலூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

    ஒருபோக நெல் சாகுபடி செய்துள்ள இந்த பகுதி விவசாயிகள் இன்னும் மூன்று மாதங்களுக்கு ஏரிகளில் நீர் நிரம்பி இருக்க வேண்டும் என்ற நிலையில், அதற்கு ஏற்ற வகையில் பொதுப்பணித்துறை விரைந்து செயல்பட்டு கால்வாயில் படர்ந்துள்ள செடிகளை அகற்றி விவசாயம் செய்துள்ள பயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை தாசில்தார் சுவாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    • இப்பணிகள் மூலம் சுமார் 50 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரப்படுகிறது.

    குரும்பூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள், புது வாழ்வு சங்கம் சார்பில் ஆத்தூர் கீழக்குளம் பாசன வாய்க்கால் துார்வாரும் பணிகளை திருச்செந்தார் தாசில்தார் சுவாமிநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாதவன், லெசிஸ்டன், வெள்ளச்சாமி, ஆவுடையப்பன், சிவ சுப்பிரமணியன், சின்னத்துரை, பெருமாள், பாலமுருகன், கொடியன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பணிகள் மூலம் சேர்ந்த மங்கலம், குமாரபன்னையூர், செல்வன் புதியனூர், புதுநகர், தலைப்பன்னையூர், ஆவரையூர் தலைவன் வடலி, கீரனூர் ஆகிய கிராமங்களில் சுமார் 50 கி.மீ நீளம் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. 1500 ஏக்கர் பாசன பகுதிகள் பயன்பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் விவசாயப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எண்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடை கால்வாயாக மாறியுள்ளது.
    • டெங்கு முதலிய கொசு தொல்லைகளும் சுகாதார கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    திருவையாறு:

    திருவையாறில் அருகே கும்பகோணம் மெயின்ரோடில் அமைந்துள்ளது காருகுடி கிராமம். காருகுடி மெயின்ரோடிலிருந்து வடபுறமாக பிரிந்து செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காவேரி பாசன மேல வாய்க்கால் சாலை பராமரிக்கப்படாமல் சிதைவுற்று குண்டும் குழியுமாக இருக்கிறது.மேலும், இந்த சாலையோரத்தில் உள்ள பாழடைந்த சுகாதார வளாகம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமலும், பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் உலவும் இடமாகவும் உள்ளது.

    மேலும், மெயின் ரோடின் தென்புறத்தில் உள்ள காவிரி ஆற்றின் தலைமதகிலிருந்து காருகுடிபிரிவுச் சாலையின் மேல்புறத்திலேயே சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரையில் சென்று காருகுடி, ராயம்பேட்டை, அம்மாள்கிராம் மற்றும் பருத்திகுடி ஆகிய கிராமங்களிலுள்ள சுமார் 800 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் ஆதாரமாக உள்ள காருகுடி மேல வாய்க்கால் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி, சாக்கடைக் கால்வாயாக மாறியுள்ளது.

    இதனால், மேலவாய்க்காலின் ஓரத்தில் குடியிருப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதோடு, டெங்கு முதலிய கொசுத் தொல்லைகளும் சுகாதாரக் கேடு மிகுந்ததாகவும் இருக்கிறது.

    எனவே, காருகுடி கிராம மேல வாய்க்கால் சாலையை குண்டும் குழியும் இல்லாமல் புதுப்பிப்பதோடு,தண்ணீர் வசதியுடன் கூடிய புதிய சுகாதார வளாகம் கட்டிடவும், பாசன மேல வாய்க்காலை முழுமையாக தூர்வாரி பாசனத்திற்கும் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும்படி பராமரிப்பு செய்திடவும் ஆவன செய்யுமாறு சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்களிடம் காருகுடி கிராம பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைநீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
    • வாய்க்காலின் வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் திருநகரி வாடிகால் வாய்க்கால் உள்ளது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த வாய்க்கால் வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதியின் முக்கிய வடிகாலாக உள்ளது. வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விளக்கதெரு, தெற்குவெளி, கலைஞர் காலனி, ரெயில்வே ரோடு, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரில் கொசு உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

    இந்த வாய்க்காலில் ஆகாயத்தமாரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளதால் இந்த குளத்தை பொதுமக்கள் பயன்படுத்துவதில்லை.

    எனவே திருநகரி வடிகால் வாய்க்காலில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி முழுமையாக தூர்வார வேண்டும், வலுவிழந்த கரைகளை வலுப்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வள்ளியூர் அருகே உள்ள வடமலையான் கால்வாயில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.
    • இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது ஆ.திருமலாபுரம். இந்த ஊருக்கு வெளிப்புறத்தில் வடமலையான் கால்வாய் உள்ளது. இதில் நேற்று பல்வேறு இடங்களில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து கிடந்தது.

    இந்த கோழிகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் இழுத்துச்சென்று சாலைகளில் போட்டு செல்கிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் வீசி, அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, கால்வாயில் இறந்த கோழிகளை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இந்த கோழிகள் நோய்கள் தாக்கி இறந்ததால் அதனை இங்கு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்.

    இறந்த கோழிகளால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடனடியாக சுகாதார துறையினர் கோழிகளை அகற்றி அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றனர்.

    • கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் 25-வது வார்டு ராஜாஜி நகரில் அய்யப்பன் கோவில் எதிர்புறம் ஜாக் பள்ளிவாசல் செல்லும் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், படிக்கட்டு ஆகியவை 20 ஆண்டுகளுக்கு மேலாக உடைந்து இருந்தது.

    அங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் பழுதடைந்து உள்ள படிக்கட்டுகளை சரிசெய்யும் பணி தொடங்கப்பட்டது.

    எஸ்.ஏ.டி.பி. திட்டத்தின் கீழ் 33 லட்சம் ரூபாயும், கலைஞர் மேம்பாடு நிதியில் சுமார் 16.80 லட்சம் ரூபாயுடன் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் ஷீலா கேத்திரின், நகர மன்ற ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், மற்றும் ஒப்பந்தர் ஜெயராம், தி.மு.க நிர்வாகிகள் அபி பேன்சி, ரஷீத் பாய், சாதிக் ஜிம், சாதிக், இஸ்மாயில் பாய், தர்மா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனை நிறைவேற்றி தருவதாக தேர்தலின் போது தி.மு.க. கவுன்சிலர் ஜாகீர் உசேன் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதனை தற்போது நிறைவேற்றி கொடுத்துள்ளார். அவரை பொதுமக்கள் பாராட்டினார்.

    • மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.
    • சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சி.டி.சி., டிப்போ -2ல் சென்று வர காங்கயம் ரோட்டில் இருந்து கோவில் வீதி வழியாக வழி உள்ளது. மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் கட்டும் பணி காங்கயம் சாலையில் நடக்கிறது.இதனால் பஸ் நிலையம் மற்றும் பிற பகுதியில் இருந்து இரவு நேர நிறுத்தி வைப்புக்கு வரும் பஸ்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.பஸ்கள் வளம்பாலம் சாலை வழியாக சென்று விநாயகர் கோவில் வீதி வழியாக பணிமனை வந்தடைகிறது.காலையில் பஸ் டிரிப் துவங்கும் போது மேற்கண்ட வழியில் ஒரே நேரத்தில் பணிமனையில் நிற்கும் அனைத்து பஸ்கள் வெளியே வர முயல்வதால் நெரிசல் அதிகமாகிறது.

    எனவே பணிமனை செல்லும் வழித்தடத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.
    • குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து விட்டது.

    குடிமங்கலம் : 

    பி.ஏ.பி., வாய்க்கால் ஓரங்களில் திருட்டுத்தனமாக மது, போதை வஸ்து விற்பது, மரங்களை தீ வைத்து எரிப்பது, வெட்டி கடத்து வது, வெள்ளை வேளாண் மரத்தில் பட்டை உரிப்பது, தண்ணீர் திருட்டு, கொலை செய்துவாய்க்காலில் வீசுவது, தற்கொலை செய்து கொள்வது என பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்துவருகின்றன.வாய்க்காலில்இருந்து மீட்கப்படும்உடல்கள் அழுகி விடுவதால்இறப்பு க்கானமுழுமையான காரணத்தையும் கண்டறிய முடிவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. வாய்க்கால் முழுக்க உடைந்த மதுபாட்டில்கள், குப்பைகள், கோழி கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர்மாசடைந்து விட்டது. கால்நடைகள் கூட குடிக்க தகுதியற்றதாக மாறி வருகிறது.பல இடங்களில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீர் நேரடியாக வாய்க்காலில் கலக்கப்படுகிறது. சிலர் வீடு, காம்பவுண்ட் சுவர் கட்டி குடியிருந்து வருகின்றனர். செப்டிக் டேங்க் கூட வாய்க்காலில் கட்டப்பட்டு ள்ளது. சில இட ங்களில் வாய்க்காலையே காணவில்லை.பாசனத்தை முறைப்படுத்தவும், வா ய்க்காலை கண்காணிக்கவும் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள், 134 பாசன சபை தலைவர்கள், 876 ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பாசன சபை தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது பகிர்மான குழு தலைவர்கள், ஒரு திட்ட குழு தலைவர் உள்ளனர். ஆனாலும் வாய்க்காலை கண்காணிக்கவும் சட்டவிரோத செயல்களை தடுக்கவோ யாரும் குரல் கொடுப்பதில்லை என்ற மனக்குறை விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி நொச்சிப்பாளையம் பிரிவு திருவள்ளுவர் நகர் சாலையில் வசிக்கும் செல்வகுமார் என்பவர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்,திருவள்ளுவர் நகரில் உள்ள சத்துணவு அங்கன்வாடி மையத்தின் பின் நீண்ட நெடுங்காலமாக பி.ஏ.பி., வாய்க்கால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.இக்கால்வாய் மேற்புறமுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர், கால்வாயை ஆக்கிரமித்து கட்டடம் கட்ட 2, 3 முறை முயற்சி மேற்கொண்டனர். மக்களின் ஆட்சேபனையை தொடர்ந்து அவர்களது முயற்சி கைவிடப்பட்டது.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து கட்டுமான பணி செய்கின்றனர். இது குறித்து கலெக்டர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது.
    • பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகே பொள்ளாச்சி - பழனி- உடுமலை- பொள்ளாச்சி நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்கே கழிவு நீர்கால்வாய்க்காக கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்ததுடன் கழிவுநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தரைமட்ட பாலத்தை புதுப்பித்து தருமாறு கோ ரிக்கை விடுக்கப்பட்டி ருந்தது. அதன் பேரில் பணி தொடங்க ப்பட்டது. ஆனால் அதன் பின்பு பணி தொ டர்ந்து நடைபெ றவில்லை. இதனால் கால்வாயை இணைக்கும் வகையில் சிலாப்கற்கள் வைத்து தற்காலிக பாதை அமைக்க ப்பட்டு உள்ளது. அதில் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்துடன் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தவறி உள்ளே கால்வாயில் விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மீட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:-

    நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்வதற்கு இந்த சாலை பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதில் கட்டப்பட்டிருந்த தரைமட்ட பாலம் சேதம் அடைந்த தையொட்டி புதுப்பிக்கும் பணி கடந்த 8 மாதத்துக்கு முன்பு தொடங்க ப்பட்டது.அதன் பின்பு இன்று வரையிலும் பணிகள் நடைபெறவில்லை.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கால்வாயின் மீது தற்காலிகமாக சிமெண்ட் ஸ்லாப்புகள்மூலம் அமைக்கப்பட்ட பாதை வழியாக சென்று மறுப குதியை அடைந்து வருகி ன்றனர்.இதனால் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை கால்வாயை கடக்க முற்பட்ட வாகன ஓட்டி நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டுஅங்கிருந்த பொதுமக்கள் அவரை பத்திரமாக மீட்டனர். பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. தக்க தருணத்தில் பாலம் பராமரிப்பு பணி மேற்கொ ள்ளப்பட்டு இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது. கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தி அதி கரித்து பொதுமக்களுக்கு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தி வருகிறது.எனவே தரைமட்ட பாலம் கட்டுமான பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன
    • கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    கடலூர்:

    சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் தட சாலை திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு அங்கமாக விருத்தாசலம் நகரப் பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெறுகின்றன. விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதலே சாலை பணிகள் தரமற்ற முறையில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வந்தனர். சாலைப்பணிகள் தொடங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்

    இந்நிலையில் சாலை விரிவாக்க பணிகளில் ஒரு பகுதியாக சாலையின் இரு புறங்களிலும் கால்வாய் ஆழமாக தோண்டப்பட்டு அதனை கான்கிரீட் பலகை மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கால்வாயை மூடும் கான்கிரீட் மெலிதாக இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் இருக்கும் கியாஸ்குடோன், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்களுக்கு லோடு வாகனங்கள் செல்லும்போது, விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் ஒப்பந்ததாரர் மற்றும் பொது ப்பணித்து றையினரிடம் தெரிவித்து வந்தனர். அதனால் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மெலிதான கான்கிரீட் பலகை மூலம் கால்வாயை மூடும்பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கான்கிரீட் கற்களை ஏற்றி வந்த லாரி அந்த பகுதியில் சாலையை கடக்கும் போது, பெரும் சப்தத்துடன் திடீரென கான்கிரீட் மூடி உடைந்து லாரி டயர் கால்வாயில் சிக்கிக்கொண்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை பள்ளத்திலிருந்து வெளியேற்ற முயற்சி செய்தார். ஆனால் 1 மணி நேரம் போராடியும் லாரியை வெளிய எடுக்க முடியவில்லை. பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறையினர் கிரேன் மூலம் லாரியை எடுத்து சாலையில் விட்டனர். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், நள்ளிரவில் இந்த சம்பவம் ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது .இதுவே காலை நேரத்திலோ அல்லது சிலிண்டர்கள் ஏற்றி ச்செல்லும் லாரி விபத்தில் சிக்கி கொண்டிருந்தால் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்கும் என வேதனை தெரிவித்தனர்.

    இனியாவது தரமான வகையில் சாலை பணிகள் நடக்குமா என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது.

    ×