search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Candidates failing"

    தேர்தலில் குற்றப்பின்னணி பற்றிய தகவல்களை ஊடகங்களில் வெளியிடாவிட்டால், வேட்பாளர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #ElectionCommission #PublicCriminalRecord
    புதுடெல்லி:

    அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளின் ஆதிக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் தீவிரமாக உள்ளது.

    இந்த நிலையில்தான், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டாலே எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.



    இந்த வழக்குகளை (தற்போது ஓய்வு பெற்றுவிட்ட) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் பல அதிரடி உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்திருந்தனர்.

    அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றிய எல்லா தகவல்களையும், டெலிவிஷன் சேனல்களிலும், நாளிதழ்களிலும் வெளியிட வேண்டும்; அரசியல் கட்சிகளும் தாங்கள் நிறுத்துகிற வேட்பாளர் மீதான குற்ற வழக்குகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தங்களின் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்பவை ஆகும்.

    இந்தநிலையில், தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தல்களில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக அமல்படுத்தி உள்ளது.

    இது தொடர்பான ஒரு அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 10-ந் தேதி வெளியிட்டு இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அதில் கூறி இருப்பதாவது:-

    * தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்தின்போது தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் பற்றி தகவல்களை டி.வி. சேனல் மற்றும் நாளிதழ்களில் குறைந்தபட்சம் 3 முறை வெளியிட வேண்டும்.

    * இதே போன்று அரசியல் கட்சிகளும் தாங்கள் களம் இறக்குகிற வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

    * குற்றப்பின்னணி தகவல்கள் தொடர்பாக வெளியிடுகிற விளம்பர கட்டணங்களை வேட்பாளர்களும், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் ஏற்க வேண்டும். இது தேர்தல் செலவில் வரும்.

    * இந்த விதிமுறைகளை வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் பின்பற்றாவிட்டால், தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் வழக்கு அல்லது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம். தேர்தல் வழக்கை பொறுத்தமட்டில், வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக வேட்பாளர்களில் ஒருவர் அல்லது வாக்காளர்களில் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யலாம்.

    * ஒரு வேட்பாளர் பற்றிய குற்றப்பின்னணி தொடர்பாக தவறான தகவல்களை மற்றொரு வேட்பாளர் வெளியிட்டால், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-ஜி படி நடவடிக்கை எடுக்கலாம். இந்தப் பிரிவு தேர்தல் நடைமுறை ஊழல் பற்றி வழக்கு தொடர வழி வகுத்துள்ளது. இந்த வழக்குகளில் குற்றவாளிக்கு அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×