search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case reduce"

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை குறைக்க கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை பட்டாபிராமை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தூரம் உள்ள திரிசூலத்துக்கு ரூ.5 என்றும், 27 கி.மீ. தூரம் உள்ள தாம்பரத்துக்கு ரூ.10 என்றும் மின்சார ரெயிலில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.



    ஆனால் மெட்ரோ ரெயிலில் இதற்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது மின்சார ரெயில் கட்டணத்தைவிட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இதையடுத்து மத்திய ரெயில்வே துறையின் செயலாளர், தமிழக தலைமை செயலாளர், மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். அதில், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். மின்சார ரெயில் கட்டணத்தை போல, ரூ.5 மற்றும் ரூ.10 என்று கட்டணமாக குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.

    இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் விஸ்வநாதன் ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் தன்னை அனைத்து உலக எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் என கூறிக்கொண்டு, மெட்ரோ ரெயில் கட்டணம் அதிகம் என்று இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

    ஆனால், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது?, நில ஆர்ஜிதம் மற்றும் மெட்ரோ ரெயில்கள் வாங்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது? என்ற புள்ளி விவரம் எதுவும் மனுதாரரிடம் இல்லை.

    மேலும், மெட்ரோ ரெயில் இயக்க ஆகும் செலவின் அடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு நீதிபதிகள், மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரியாகவோ அல்லது செலவு தணிக்கையாளராகவோ உட்கார்ந்து கொண்டு கட்டணத்தை நிர்ணயம் செய்ய முடியாது.

    கட்டணம் நிர்ணயம் செய்வது மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதில், தலையிட ஐகோர்ட்டுக்கு குறைந்தபட்ச அதிகாரம் மட்டுமே உள்ளது.

    மேலும், மின்சார ரெயிலை விட, மெட்ரோ ரெயில் நிர்வாகம் பெரும் தொகையை கட்டணமாக வசூலிப்பதால், எந்த வகையில் தன்னுடைய அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்று மனுதாரரால் கூற முடியவில்லை.

    மெட்ரோ ரெயில் கட்டணத்தை சரிசெய்யும் வேலை இந்த ஐகோர்ட்டுக்கு கிடையாது. அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    ×