search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cavalry force"

    காலமுறை ஊதியம் வழங்கி ஊர்க்காவல் படையினரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #AnbumaniRamadoss

    சென்னை:

    பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஊர்க் காவல்படை 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து கடந்த 55 ஆண்டுகளாக காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்கு படுத்துதல், திருவிழாக்களின் போது பாதுகாப்புப் பணி, அஞ்சல் பணி, காவல் வாகனங்கள் ஓட்டும் பணி உள்ளிட்டவற்றை ஊர்க் காவல் படையினர் சிரத்தையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊர்க்காவல் படையினருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.152 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.2800 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஊர்க்காவல் படையினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது.

    இதன்மூலம் ஊர்க் காவல் படை வீரர்கள் அனுபவித்து வந்த பொருளாதார நெருக்கடிகள் அகலும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்திய தமிழக அரசு, அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் பணி நாட்களின் எண்ணிக்கையை 25-லிருந்து 5 ஆக குறைந்து விட்டது.

    இதனால் அவர்களுக்கான தினக்கூலி 3 மடங்குக்கும் மேல் அதிகரித்தாலும் கூட மாத ஊதியம் ரூ.2800 என்ற அளவைத் தாண்டவில்லை. ஊர்க்காவல் படையினருக்கு அதிகாரப்பூர்வ பணி நாட்கள் 5 தான் என்றாலும் மாதத்தின் அனைத்து நாட்களும் பணிக்கு வரும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

    கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.18,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதில் ஆறில் ஒரு பங்கு கூட ஊதியமாக வழங்கப்படுவதில்லை.

    ஊர்க்காவல்படையை தமிழக காவல்துறையின் ஓர் அங்கமாக அறிவித்து, அதில் பணியாற்றும் அனைவரையும் காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு செய்ய வேண்டும். அவர்களின் பணி அனுபவத்தைப் பொறுத்து பதவி உயர்வும் வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையைச் சேர்ந்தவர்கள் படிப்படியாக காவல்துறையில் சேர்க்கப்படுவதைப் போல ஊர்க் காவல்படை வீரர்களையும் குறிப்பிட்ட விகிதத்தில் காவல்துறையில் சேர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இது குறித்த அறிவிப்புகளை இம்மாதம் 26-ந்தேதி நடைபெறவுள்ள காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது முதல்- அமைச்சர் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×