search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cell Phone கொள்ளை"

    மதுரையில் 7 கொள்ளையர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13 செல்போன்கள், 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    அவனியாபுரம்:

    மதுரை தெற்குவாசல், அவனியாபுரம், வில்லாபுரம் மற்றும் மாநகரப்பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, செல்போன்கள் பறிப்பு போன்றவை தொடர் சம்பவங்களாக நடைபெற்று வந்தன.

    இது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தர விட்டார்.

    அதன் பேரில் திருப்பரங்குன்றம் உதவி போலீஸ் கமி‌ஷனர் பீர் முகமது, அவனியாபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன், ஏட்டுகள் முனியாண்டி, ராஜபாண்டி, இளங்கோ, மகாலட்சுமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    தனிப்படையினர் மாநகரின் பல பகுதிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

    அப்போது அவன் செல்போன்-மோட்டார் சைக்கிள் பறிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் என்பதும், அவனியாபுரம் வெள்ளபிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (வயது 19) என்பதும் தெரியவந்தது.

    இவனுடன் வேறு சிலரும் சேர்ந்து கொண்டு மாநகரின் பல பகுதிகளில் சாலையில் செல்போன் பேசிக் கொண்டு செல்பவர்களிடம் இருந்து செல்போன்களை பறிப்பது, மோட்டார் சைக்கிள்கள் திருடுவது போன்றவற்றில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    சரவணன் கொடுத்த தகவலின் பேரில் எம்.எம்.சி. காலனி மருதுபாண்டி மகன் செந்தில்குமார் (19), அவனியாபுரம் அம்மாசி மகன் அஜித்குமார் (19), காளிமுத்து மகன் ஜெயக்குமார் (19), சோலையழகுபுரம் திருநாவுக்கரசு மகன் தினேஷ் (19), ஜீவாநகர் தங்கப்பாண்டி மகன் கார்த்திக் குமார் (19), ஜெய்ஹிந்துபுரம் கணேஷ் மகன் அய்யப்பன் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதானவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள், 13 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சரவணன் போலீசாரிடம் கூறுகையில், வீட்டு முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி வெளி மாவட்டங்களில் விற்பதும், அங்கு திருடி வரும் மோட்டார் சைக்கிள்களில் மதுரையில் வலம் வருவதும் வாடிக்கை என்றான்.

    அப்படி வரும்போது தனியாக யாராவது செல் போனில் பேசிக்செல்வதை கண்டால் அவர்களிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விடுவோம் என்றும் தெரிவித்துள்ளான்.

    கைதான 7 பேரும் மதுரையில் எந்தப்பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளனர். எத்தனை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×