search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "change mood"

    • நிதானமாக நடந்தாலே போதுமானது.
    • நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான்.

    காலை வேளையில் நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். அதேபோல் இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். இரவு உணவுக்கு பிறகு 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்து வந்தாலே போதுமானது. காலை நேர பயிற்சியை போல் விறுவிறுப்பாக மேற்கொள்ள வேண்டியதில்லை. நிதானமாக நடந்தாலே போதுமானது. அப்படி இரவு உணவுக்கு பிறகு நிதானமாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

    செரிமானம் மேம்படும்:

    இரவு உணவு உட்கொண்ட பிறகு நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று செரிமானம் மேம்படுத்துவதுதான். செரிமான பாதை வழியாக உணவை சுமுகமாக நகர்த்த உதவும். வீக்கம், அஜீரணத்தை தடுக்கும். உணவு உட்கொண்ட பிறகு அடிக்கடி நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினையை அனுபவிப்பவர்களுக்கு இரவு நேர நடைப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

    எடையை நிர்வகிக்கும்:

    இரவு உணவிற்குப் பிறகு நடைப்பயிற்சி செய்வது கூடுதல் கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை சீராக நிர்வகிக்கவும் உதவி புரியும். குறிப்பாக அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக சேமித்து வைப்பதை தடுத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும்.

    மனநிலையில் மாற்றம் ஏற்படுத்தும்:

    இரவில் மனநிலையை மேம்படுத்துவதோடு, உடலில் எண்டோர்பின் ஹார்மோன்களின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும். இந்த ஹார்மோன் மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும், ஒட்டுமொத்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மன, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

    சிறந்த தூக்கத்திற்குவித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி தூக்கத்திற்கு இன்றியமையாதது. ஆழ்ந்த, நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கவும் உதவும். ஏனெனில் இந்த உடல் செயல்பாடு தூக்கமின்மை பிரச்சினையை போக்க உதவும்.

    உறவு வலுப்படும்:

    குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைவதற்கு இரவு நேர நடைப்பயிற்சி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அவர்களுடன் சேர்ந்து நடக்கலாம். அன்றைய நாளில் நடந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்தபடியே நடைப்பயிற்சியை தொடரலாம். அதன் மூலம் உறவை வலுப்படுத்தலாம்.

    சோர்வை தடுக்கும்:

    உணவு உட்கொண்ட பிறகு சிலருக்கு ஒருவித அயற்சி, சோர்வு எட்டிப்பார்க்கும். அதிகம் உணவு உட்கொள்பவர்கள் இத்தகைய பிரச்சினைக்கு ஆளாவார்கள். இரவு நேர நடைப்பயிற்சி செய்வது இத்தகைய உடல் சோர்வை போக்கும்.

    அறிவாற்றல் செயல்பாடுக்கு வித்திடும்:

    இரவு உணவிற்கு பிந்தைய நடைப்பயிற்சி அறிவாற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு உதவும். நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும். மனத் தெளிவை மேம்படுத்தும்.

    மன அழுத்தத்தை குறைக்கும்:

    இரவு நேர நடைப்பயிற்சி மனதை ரிலாக்ஸாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும் வாய்ப்பையும் வழங்கும். இரவு நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும் போது வெளிப்புற காற்றை ஆசுவாசமாக சுவாசிப்பது மனதை அமைதிப்படுத்தவும், பதற்றத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மன நலனை மேம்படுத்தவும் உதவும்.

    ×