search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai CBI Officer"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. அதிகாரி சரவணன் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். #Thoothukudifiring
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள நாகேஸ்வரராவ் நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளார்.

    முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 20 உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னையில் சி.பி.ஐ. உயர் அதிகாரிகளில் ஒருவராக சரவணன் இருந்தார். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் மும்பை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளார். மும்பையில் வங்கி முறைகேடுகள் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டு இருக்கிறார்.

    நிரவ்மோடி செய்துள்ள வங்கி மோசடியை விசாரிக்கும் பிரிவுக்கு தற்போது அவர் சென்றுள்ளார்.

    சரவணன் மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரத்தை தொடர்ந்து விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் உள்ள பணிகளை பார்த்துக்கொண்டே அவர் கூடுதலாக இந்த பணியையும் செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    2ஜி ஊழல் வழக்கை விசாரித்து வந்த டெல்லி சி.பி.ஐ. அதிகாரி விவேக் பிரியதர்சி சண்டிகருக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு சி.பி.ஐ. அதிகாரி கவுதமிடம் உள்ள பொறுப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே நாகேஸ்வர ராவ் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரபல வக்கீல் பிரசாந்த் பூ‌ஷன் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்கும் பொறுப்பில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார்.

    இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி சிக்ரி தலைமையிலான பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை அந்த பெஞ்சில் நாகேஸ்வர ராவுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. #Thoothukudifiring
     
    ×