search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation Budget"

    • சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
    • புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 2024-25-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக் குழு தலைவர் சர்பஜெயாதாஸ் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை படித்தார். அதன் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் வசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். கவுன்சிலர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.45 லட்சமாக உயர்த்தப்படும்.

    வார்டுகளில் உள்ள பணிகளை மேம்படுத்தவும், காகிதமில்லா நடைமுறையினை கொண்டு வருவதற்கும் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 கவுன்சிலர்களுக்கும் டேப் வழங்கப்படும்.

    வருவாய் துறையில் வழங்கப்படும் மதிப்பீட்டு ஆணைகளான புதிய மற்றும் கூடுதல் சொத்துவரி, மதிப்பீடு சொத்துவரி பெயர் மாற்றும், திருத்தம், புதுப்பிக்கும் தொழில் உரிமங்கள் கியூ ஆர் கோடு தொழில்நுட்பத்தில் வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்கள், திறந்த வெளிகள், பூங்காக்களில் 2.50 லட்சம் மரக்கன்றுகளை தன்னார்வர்கள் மூலம் நடப்பட்டு அவைகளை முறையாக பராமரித்து பேணி காக்கப்படும். இதன் மூலம் நகரின் மாசு கட்டுப்படுத்தப்படும்.

    பக்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் நாவலர் நகர்-லாக்நகர், வாலாஜா காலணியில் இருந்து பாரதி சாலை, பாலாண்டியம்மன் கோவில் தெரு, சிங்காரவேலர் பாலத்தில் இருந்து-கைலாசபுரம் பாலம், பக்கிங்காம் கால்வாய் தெரு முண்டகக் கண்ணியம்மன் பாலம், பேங்க்ரோடு மயிலாப்பூர் பாலம், மந்தைவெளி பாலம் (இரண்டு பக்கமும்), சாலையோர பூங்காக்களை அழகுப்படுத்தும் பணி ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னையில் ஆண்களுக்கு உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டில் இருப்பது போல பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் எதுவும் இல்லை என்ற குறையை போக்க ஒரு வார்டுக்கு ஒன்று வீதம் பெண்களுக்கான உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    சென்னை மாநகரில் உள்ள 8 நீர்நிலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். மாத்தூர் எம்.எம்.டி.ஏ. காலனியில் உள்ள குளத்தினை பரிச்சார்ந்த முறையில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஸ்பான்ச் பார்க் வடிவமைக்கப்படும்.

    மேலும் மாநகராட்சி பூங்காக்களில் ஸ்பான்ச் பார்க் அமைக்க ஆய்வு செய்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநகராட்சியால் 192 மயான பூமிகள் பராமரிக்கப்படுகிறது. இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளும் உற்றார் உறவினர்கள் மன அமைதியுடன் இருக்கைகளில் அமர்ந்து மன நிறைவுடன் இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் மயான பூமிகள் ரூ.10 கோடி செலவில் நவீனப்படுத்தப்படும்.

    255 சென்னை பள்ளிகளுக்கு தலா 4 கேமராக்கள் வீதம் ரூ.7.64 கோடி மதிப் பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு படிக்கும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ மற்றும் 2 செட் சாக்ஸ் முதல் முறையாக வழங்கப்படும்.

    சென்னை பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் 11-ம் வகுப்பில் சேரும் 50 மாணவர்களை இஸ்ரோ மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையம், கூடங்குளம் அணுமின் நிலையம் போன்ற இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படும்.

    மழலையர் வகுப்புகளில் இரண்டாம் ஆண்டு (யு.கே.ஜி.) பயின்று வரும் 5,944 மாணவ-மாணவிகளுக்கு மழலையர் வகுப்பை நிறைவு செய்வதற்கான பட்டமளிப்பு விழா நடத்தப்படும்.


    புதிதாக 7 நாய் பிடிக்கும் வாகனம் கூடுதலாக கொள்முதல் செய்து நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தெரு நாய்களுக்கு ஏற்படும் வெறி நாய் கடி நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்க 3 வட்டாரங்களில் கால்நடை தடுப்பூசி மருந்து செலுத்தும் வாகனங்கள் ரூ.60 லட்சத்தில் வாங்கப்படும்.

    மாடுகளை முறைப்படுத்த மாட்டு தொழுவங்களுக்கு உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் கூடுதலாக 2 நாய் இனக் கட்டுப்பாட்டு மையங்கள் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்பது உள்ளிட்ட 82 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேதம் அடைந்த சாலைகளில் ஓட்டுப்பணிகள் மேற்கொள்ள ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கி ஒப்பந்ததாரர் மூலம் பணி மேற்கொள்ளப்படும். மேலும் 4750 சாலைகள் மற்றும் நடைப்பாதைகள் மேம்படுத்தும் பணி ரூ.404 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    2024-2025-ம் நிதியாண்டின் வருவாய் ரூ.4464.60 கோடியாகவும் வருவாய் செலவினம் ரூ.4727.12 கோடியாகவும் இருக்கும். பற்றாக்குறை ரூ.252.52 கோடியாக உள்ளது.

    பட்ஜெட் மீதான விவாதம் நாளை நடைபெறுகிறது.

    • 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.
    • சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை :

    சென்னை மாநகராட்சியின் 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 64,022 மாணவர்களுக்கு ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்க ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு.

    * 24,700 மாணவர்களை பள்ளிச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47.25 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    * 255 பள்ளிகளுக்கு 7.64 கோடி ரூபாயில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

    * சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும், தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

    * சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி வழங்கப்படும்.

    * சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    • மாணவர்கள் நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேளையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும்.
    • மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வருடத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களை விடுமுறை நாட்களில் கல்வி சுற்றுலாவாக சென்னை ஐ.ஐ.டி., பெங்களூர் ஐ.ஐ.எம், டெல்லி பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும், இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல 12-ம் வகுப்பில் 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் ஒரு பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெறும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. அது ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

    மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வரவும், நாள் முழுவதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கவும், முதல் பாட வேளையின் போது 10 நிமிடம் தினமும் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி பண்புகள் கற்பிக்கப்படும்.

    மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வருடத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்படும்.

    10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அவர்களின் எதிர்கால கல்வி, வேலைவாய்ப்பினை பற்றி வழிகாட்டும் விதமாக துறை சார்ந்த வல்லுனர்கள், முன்னாள் மாணவர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.

    சென்னை பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் டியூசன் செல்லாமல் அவர்களுக்கு புகழ்பெற்ற ஆசிரியர்கள் மூலம் இணையதளம் வழியாக நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கற்றல் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும்.
    • சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியின் 2023-2024-ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது.

    சென்னை மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலை வகித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது.

    மேயர் பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மழை கவச உடையும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ரூ.35 லட்சம் செலவில் தரமான விக்டர் கண்ட்ரோல் உபகரணம் வழங்கப்படும். சென்னை மாநகரில் நாய்களை பிடிப்பதற்கு 6 புதிய வாகனங்கள் ரூ.60 லட்சம் செலவிலும், மாடுகளை பிடிப்பதற்கு 5 புதிய வாகனங்கள் ரூ.1.35 கோடி மதிப்பிலும் வழங்கப்படும்.

    ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மீதான தடை அமலாக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி சோதனை அடிப்படையில் மஞ்சப்பை வழங்கும் திட்டம் சுய உதவிக்குழுவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்.

    பொதுமக்களின் வரவேற்பு மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.

    மண்டலங்கள் 4,5,6,7,8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 தூய்மை பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் ஆண்டிற்கு 2 வழங்கப்படும். இதற்காக ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னையில் காலிமனைகளில் குப்பைகள், கட்டிட கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. இதனை தடுக்கும் வகையில் காலிமனை உரிமையாளர்களை பொறுப்பாக்கி அவற்றை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிக்காக கொள்கை அளவிலான திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும்.

    ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் குப்பை இல்லா நகரத்தை 3 சிறந்த வார்டுகளை தேர்ந்தெடுத்து மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டு வெகுமதி வழங்கப்படும்.

    சென்னை மாநகர மக்களின் குறைகாண கண்டறிந்து அவற்றின் மீது தீர்வுகாண 'மக்களை தேடி மேயர்' என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1913 அமைப்பு மையம் மூலமாக பொதுமக்களிடம் புகார்கள் பெறப்பட்டு கூட்டமைப்புகளுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    'நம்ம சென்னை செயலி' மூலமாக பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம், வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களி லும் பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தபால் மூலம் ஆணையர் அலுவலகம் வட்டார அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள பொதுமக்கள் மேயரிடம் வழங்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு மேயர் மாதத்திற்கு ஒருமுறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர் திட்டம்' வருகிற நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.

    வாகன நிறுத்த நடைமுறை அமைப்பில் உள்ள சிக்கலை தீர்க்க ஒரு பிரத்தியேகமான வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மை குழுமம் என்ற பிரிவு ஏற்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி உறுப்பினர்களின் வளர்ச்சி மேம்பாட்டு நிதியானது ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.

    இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

    • மழை நீர், கால்வாய் கழிவுநீர் கால்வாய், சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளிவருகிறது.
    • கல்வி, சுகாதாரம், பூங்கா மேம்பாடு, விளையாட்டு திடல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த ஒருமாதமாக தயார் செய்யப்பட்டு வந்தது.

    கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தலின் பேரில் அனைத்து துறை அதிகாரிகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தி பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

    புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் வரி விதிப்பு மற்றும் நிதிநிலைக் குழு தலைவர் சர்பஜெய தஸ் நரேந்திரன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகிறார். மேயர் பிரியா புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

    சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை தொடர்ந்து மேலும் பல அறிவிப்புகள் அது தொடர்பாக இடம்பெறலாம்.

    மழை நீர், கால்வாய் கழிவுநீர் கால்வாய், சீரமைத்தல், மேம்பாலம் கட்டுதல், சுகாதாரப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளிவருகிறது. கல்வி, சுகாதாரம், பூங்கா மேம்பாடு, விளையாட்டு திடல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மேயர் 67 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    இந்த பட்ஜெட்டில் கவுன்சிலருக்கான வார்டு வளர்ச்சி நிதி உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.35 லட்சத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதனால் கவுன்சிலர் வார்டு வளர்ச்சி நிதி உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய கூட்டம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடுவதோடு நிறைவுபெறும். மறுநாள் 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. கட்சி வாரியாக கவுன்சிலர்கள் விவாதத்தின் மீது பேசுவார்கள்.

    நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள் பேச இறுதியில் மேயர் பதில் உரை நிகழ்த்துவார்.

    ×