search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • நான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை.
    • நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை.

    சென்னை தியாகராயர் நகரில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, எனக்கு மொழி அறிவோ, இலக்கிய அறிவோ கிடையாது. நான் முதன் முதலில் ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன். அந்த படம் பிண்ணனி இசைக்காக என்னிடம் வருகிறது. முதல் ரீல் ஓடுது கதாநாயகி அறிமுக காட்சி. அதில் ஆண்டாள் நடனத்தை கதாநாயகி பார்க்கிறாள். அதற்கு இசையமைத்தேன். அதனால் முதல் படத்திலேயே ஆண்டாள் எனக்கு அருள் புரிந்துவிட்டாள் என நினைத்துக்கொண்டேன். நான் சிவபக்தன்; ஆனால் இதற்கெல்லாம் எதிரி இல்லை.


    நான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் கரை கண்டு வந்தவன் இல்லை. இசைஞானி என்ற பேருக்கு தகுதியானவனா என்று கேட்டால் என்னைப் பொறுத்த வரையில் கேள்விக்குறிதான். ஆனால் மக்கள் அப்படி அழைக்கிறார்கள். அதற்கு நன்றி. நான் என்னை அப்படி நினைத்துக்கொள்வதில்லை. அதனால் எனக்கு ஒரு கர்வமும் கிடையாது. அதை சின்ன வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன். சின்ன வயதில் அண்ணனுடன் கச்சேரி செல்கையில், நான் ஹார்மோனியம் வாசிப்பேன். ஜனங்கள் கைதட்டுவார்கள். அதை கேட்கும் போது பெருமையாக இருந்தது. தொடர்ந்து பயிற்சி பெற்று நிறைய வாசித்தேன். கைதட்டலும் ஜாஸ்தியாகி, கர்வமும் ஜாஸ்தியாகி கொண்டே சென்றது.


    ஒரு கட்டத்தில், இந்த கைதட்டல், பாட்டுக்கா, மியூசிக்கிற்கா, இல்லை நாம் வாசிக்கிற திறமைக்கா என மனசுக்குள் ஒரு கேள்வி. அப்புறம் டியூனுக்காகத்தான் கை தட்டல் வருகிறது என உணர்ந்தேன். பாட்டு விஸ்வநாதன் சார் போட்டது. அதனால் கைதட்டல் அவருக்கு போகுது. அதன் பிறகு என் தலையில் இருந்த பாரமெல்லாம் இறங்கிப்போய் விட்டது. நமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று புரிந்து கொண்டேன். இந்த கர்வத்திலிருந்து எப்போதோ நான் விடுப்பட்டுவிட்டேன். அதனால் எந்த புகழ் மொழியும், எந்த பாராட்டுகளும் என்னை சிந்திக்க வைக்காது என்று பேசினார்.

    • சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.
    • சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை நடைபெறுகிறது.

    பொதுவாக சென்னை நகருக்குள் தான் அதிகமான கச்சேரிகள், இசை விழாக்கள் நடைபெறுகிறது. பரந்து விரிந்த சென்னை மக்கள் அனைவருக்கும், இசைக் கச்சேரிகள் போய்ச் சேரும் வகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை மக்களை மகிழ்விக்கும் விதமாகச் சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது.

    இந்த சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்வினை பற்றிய செய்தியினை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் விதமாக, நேற்று பிரபல இசைக் கலைஞர்கள் பாடகர் மஹதி, இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ், ஜீ கே மீடியா நிர்வாக இயக்குனர், விநாயகா கேட்டரிங் நிர்வாக இயக்குனர், ஆகியோர் இணைந்து பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பாடகி மஹதி பேசியதாவது, பொதுவாகச் சென்னையில் சங்கீத கச்சேரிகள், சென்னையில் உட்புறமான மயிலை, தி நகர் போன்ற இடங்களில் மட்டுமே நடக்கிறது. பரந்து விரிந்துவிட்ட சென்னை நகரின் பல பக்கங்களில் இருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில், ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும், சென்னையில் சங்கீத உற்சவம் நடைபெறவுள்ளது. இவ்விழா 6 நாட்கள், வெவ்வேறு கலைஞர்கள் கலந்துகொள்ள மிகக் கோலாகலமாக நடைபெறவுள்ளது என்று பேசினார்.

    இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா பேசியதாவது, ஜீகே மீடியா நிறுவனம் வழங்கும் சென்னையில் சங்கீத உற்சவம் சீசன் 2, பல முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெறவுள்ளது. கடந்த சீசனைப் போல, நானும் நண்பர் இசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷ் அவர்களும் கலந்துகொள்கிறோம். முதல் சீசன் பிரமாதமாக நடைபெற்றது. இரண்டாவது சீசன் இன்னும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று பேசினார்.

    ஜீகே மீடியா நிறுவனம் சார்பில் சென்னையில் சங்கீத உற்சவம் நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 27 முதல் ஜனவரி 1 வரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் நீலாங்கரையில் அமைந்துள்ள ஆர் கே கன்வென்சன் செண்டர் அரங்கத்தில், பல முன்னணி பிரபல இசைக்கலைஞர்கள் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

    • உலகின் சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.
    • தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

    உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரிடர்கள் மனித சக்தியால் கையாள முடியாத அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இதனை உண்மையாக்கும் சம்பவங்கள் மனித குலத்திற்கு தினந்தோறும் பாடம் கற்பித்துக் கொண்டே தான் இருக்கிறது. பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பணிகளில் ஈடுபட்டும், சில நாடுகள் ஈடுபட துவங்கியும் உள்ளன.

    இந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மாத துவக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி திணறிய சென்னை பொதுமக்கள், தன்னார்வளர்கள் ஆற்றிய அயராத பணியால் மீண்டெழுந்தது.

     

    தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் மிக குறுகிய காலக்கட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நான்கு மாவட்டங்களும் தனி தீவுகளாகின. இங்கும் வெள்ளத்தில் சிக்கித் திணறும் பொது மக்களை மீட்கும் பணிகளில் பொது மக்கள், தன்னார்வளர்கள், மத்திய மாநில அரசுகளின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை இயற்கை பேரிடர் ஏற்படும் போதும், பொதுமக்கள், தன்னார்வ தொண்டாளர்கள், பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்களே மீட்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். எனினும், பொது மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றும் வழக்கம் பொதுமக்கள் காணாத சம்பவமாகவே இருந்து வருகிறது.

     


    பேரிடர் சமயங்களில் களமிறங்கி சேவையாற்றுவதில் ஏதேதோ காரணங்களால் தள்ளி நிற்கும் அரசியல் கட்சிகள் அரசு இதை செய்திருக்கலாம், இந்த பணிகளை மேற்கொண்டிருக்கலாம், போதுமான முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என பெரும்பாலும் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளன.

    குற்றச்சாட்டுகளால் அரசுக்கு குறைகளை சுட்டிக்காட்ட முடியும் என்றாலும், பொது மக்களுக்கு சேவையாற்ற துவங்கப்பட்ட அரசியல் கட்சிகள் இனியாவது களத்தில் இறங்கி மக்களுக்கு சேவையாற்றும் வழக்கம் நடைறைக்கு வருமா என்பதே பேரிடரில் சிக்கித் தவிக்கும் பொது மக்கள் மற்றும் அவர்களை நினைத்து வாடுவோரின் தற்போதைய மனநிலையாக உள்ளது.  

    • தமிழக தலைநகர் சென்னை தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.
    • வளர்ச்சி அடைய தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் இயக்குநரகம் (DTCP) என்பது ஒரு மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. சட்டவிரோத கட்டிடங்களை தடுத்து நிறுத்துவது, வணிக மற்றும் குடியிருப்பு ரியல் எஸ்டேட், நகர்ப்புற திட்டமிடல் தொடர்பான விஷயங்களில் மற்ற ஏஜென்சிகளுக்கு இந்த அமைப்பு ஆலோசனைகளை வழங்குகிறது.

    அனைத்து ரியல் எஸ்டேட் டெவலப்பர்களும் எந்தவொரு பெரிய திட்டங்களையும் தொடங்குவதற்கு முன், மாநிலத்தின் DTCP-யிடம் இருந்து முறையான சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் சட்டம் 1971 மூலம் நகரம் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குனரகம் நிறுவப்பட்டது.

     

    மாநிலம் முழுவதும் அதிகார வரம்பைக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையால் (H&UD) கட்டுப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் டெக்-ஹப் "ஸ்மார்ட் சிட்டி"-யான சென்னையில், நல்ல வேலை வாய்ப்புகள், வீடுகள் மற்றும் வசதிகள் போன்ற வாய்ப்புகள் பல இருப்பினும் மாறி வரும் வானிலையின் கோர முகம் மக்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    வரலாற்றில் வெள்ளம், புயல் போன்ற பல்வேறு இயற்கை பிரச்சினைகளை கடந்து வந்த பிறகும் ஒவ்வொரு வருடமும் சென்னை மக்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கனமழை, புயல் ஏற்படும் போது இடம்ப்பெயர்வு, மற்றும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை, தீவிர வானிலைக்கு தயாராக இல்லை.

     


    இது வீடு வாங்குபவர்களுக்கு சென்னையை வாழ்வதற்கான இடமாகத் தேர்ந்தெடுப்பதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் புலம்பெயர்ந்தோரை சென்னை தொடர்ந்து அதிகளவில் வரவேற்று வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகளில் ஏற்றம் ஏற்பட்டதால், சென்னை நகரம் மக்களை வாழ செய்கிறது. மேலும் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கும் தொழில்முறை தளத்தை வழங்குகிறது.

    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தோரை கவர்ந்துவரும் சென்னை, அதன் மக்கள் தொகையை 1 கோடிக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இன்னும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மிகவும் அடர்த்தியாக நிரம்பிய வீடுகளை உடையது.

     

    வருங்காலங்களில் தீவிர வானிலை சமயங்களில் சேதங்கள் அதிகமாகவும், வாழ்க்கை முறை கடினமாகவும் இருக்கும். தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள்தொகை இருந்தபோதிலும், கடந்த 16 ஆண்டுகளில், பேரழிவுகரமான 2015 வெள்ளத்திற்கு பிறகும், சென்னையின் பெரும்பாலான பிரச்சனைகள் போதிய மற்றும் மோசமாக நிர்வகிக்கப்படும் உள்கட்டமைப்பைச் சுற்றியே உள்ளன.

    இதன் விளைவாக 2015 சென்னை வெள்ளத்தின் போது கசிவுகள், அடைக்கப்பட்ட வடிகால், நகரின் வடிகால் நிரம்பி வழிந்ததால், கழிவுநீர் அமைப்புகளை தண்ணீரில் மூழ்கடித்ததால், அது விரைவில் திறந்தவெளி சாக்கடையாக மாறியது. இது சென்னையில் பல தசாப்தங்களாக இருக்கும் பிரச்சினைகள் ஆகும். சென்னை நகரம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிளாஸ்டிக் மாசுபாடு.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.4 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. ஒரு நாளைக்கு 429 டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்து நாட்டிலேயே சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளாஸ்டிக் கழிவுநீர் வடிகால் மற்றும் சாக்கடைகளை அடைப்பதால், கனமழையின் போது வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தெருக்களில் தண்ணீர் தேங்குகிறது. பிளாஸ்டிக் மாசுபாடு, பிரச்சனைக்கு எவ்வாறு பங்களிக்கிறது, உள்ளூர் மட்டத்தில் அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றிய விழிப்புணர்வு தொடங்குவது அவசியம்.

     

    தற்போதைய நிலையில் தமிழகத்தின் சில தென் மாவட்டங்களிலும் வெள்ள நீர் நிரம்பி, மக்கள் அவதிப்படும் நிலை பார்க்க முடிகிறது. இனி வரும் காலங்களில் பதிப்புகள் குறைவாக இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    தலைநகரம் மாநிலத்தின் மத்திய இடத்தில் இருக்க வேண்டும். திருச்சி தலைமையகத்துக்கு சரியாக இருக்கும் என்றார் தி.மு.க. அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான துறைமுருகன். நகர திட்டமிடலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    • நடிகர் சிவகார்த்திகேயன் 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'எஸ்கே21' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார்.


    கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 'எஸ்கே21' படத்தின் படப்பிடிப்பு 75 நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். இந்த காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டிருந்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் அரசு, திரைப்பிரபலங்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பலர் ஈடுபட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகர் பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார்.
    • இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார்.

    சின்னத்திரையில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பாலா. 'கலக்கப்போவது யாரு' எனும் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல குழந்தைகளின் படிப்பிற்கு உதவி வருகிறார். மேலும், சமூக சேவையும் செய்து வருகிறார்.


    இந்நிலையில், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை நடிகர் பாலா வழங்கியுள்ளார். அதாவது, பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கியுள்ளார்.

    இதற்கு முன்பு நடிகர் பாலா ரூ.2 லட்சம் செலவில் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர்.
    • நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, தண்ணீர் என தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். மேலும், நடிகர்கள் பலர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், கவிஞர் வைரமுத்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "'தண்ணீர் தண்ணீர்

    எங்கணும் தண்ணீர்

    குடிக்கத்தான் இல்லை ஒருதுளி'

    எனும் ஆங்கிலக் கவிதை

    நினைவின் இடுக்கில் கசிகிறது

    வீட்டுக்குத் தண்ணீர் இல்லை

    என்பது சிறுதுயரம்

    வீட்டுக்குள்ளேயே தண்ணீர்

    என்பது பெருந்துயரம்

    விடியும் வடியும் என்று

    காத்திருந்த

    பெருமக்களின் துயரத்தில்

    பாதிக்கப்படாத நானும்

    பங்கேற்கிறேன்

    என் கடமையின் அடையாளமாக

    முதலமைச்சரின்

    பொது நிவாரண நிதிக்கு

    ஒரு லட்ச ரூபாய் வழங்குகிறேன்

    பொருள்கொண்டோர்

    அருள்கூர்க

    சக மனிதனின் துயரம்

    நம் துயரம்

    இடர் தொடராதிருக்க

    இனியொரு விதிசெய்வோம்;

    அதை எந்தநாளும் காப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக 'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


    இதைத்தொடர்ந்து, பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்களது உதவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது.


    இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவினர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். 'வெப்பன்' படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும்.
    • நான் கொஞ்சம் உயராமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் அரும்பாக்கத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதாக காரின் மேல் அமர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்," இது அரும்பாக்கம், திருக்கமலம் கோயில் மூன்றாவது தெரு. 100 மீட்டர் தொலைவில் கூவம் ஆறு உள்ளது. செம்பரம்பாக்கம் தண்ணீர் நம்ம ஏரியாவிற்கு வருவது அரிது. அணை தண்ணீர் திறந்துவிட்டால் இங்கே தண்ணீர் வந்துதான் ஆகும். கூவம் ஆறை ஒட்டியுள்ள பகுதி இது என்பதால் தண்ணீர் வரும். பலரும் தாழ்வாக கட்டிவிட்டார்கள். நான் கொஞ்சம் உயரமாக வீடு கட்டியதால் தப்பித்தேன்.


    எல்லாவற்றிற்கும் பெருநகர மாநகராட்சியை, அரசை குறை சொல்ல முடியாது. ஏனெனில், செம்பரம்பாக்கம் அணையில் நீர் அதிகமாக இருந்தால் அதை திறந்துவிட்டே ஆக வேண்டும். இல்லையெனில் அணை உடைந்துவிடும். ஏரி கரையில் உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வந்துவிட்டது. ஏனெனில், பெரும் மழை, புயல். எதுவும் செய்ய முடியாது. அரசை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நிஜத்தை பேசணும். கூவம் ஆற்றிற்கு அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள எல்லாரும் பாதிக்கப்படுவார்கள். எல்லாம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டது. ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதால் இந்த வேதனைகளையெல்லாம் தாங்க வேண்டியதாக இருக்கிறது. செம்பரம்பாக்கம் அதிக கொள்ளளவு கொண்ட ஏரி. அது நீர் நிரம்பி உடைந்துவிட்டால் சென்னையே மூழ்கிவிடும்." என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


    • பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இயக்குனர் பார்த்திபன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
    • ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாதபோது, பேஷன் ஷோ எதற்கு?

    'மிச்சாங்' புயல் காரணமாக சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் அரசு சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நடிகர்கள் மற்றும் சின்னத்திரை பாலா மற்றும் பலர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

    இவர்களை போன்று இயக்குனர் பார்த்திபன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அவர் அதுகுறித்த விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். த(க)ண்ணீர் தேசம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.



    மேலும், இயக்குனர் பார்த்திபன் இதுகுறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று மக்களின் நிலையில்லா பரிதாப நிலைக் கண்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.நான் வட்டம்-மாவட்டம் என குறுகிய அளவிலான அரசியலில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. பறவை பார்வையில் பார்க்கிறேன்.ஏன் இந்த அவல நிலை?சென்னை மட்டுமல்ல,சமீபத்தில் கண்டுங்காணா குண்டுங்குழி நிறைந்த மும்பாபையிலும்(பணக்கார முதலைகள் சாலையை கடக்கும் மாநிலம்)இதே நிலை.

    தனி மனிதனாகவும்,தமிழ்நாடாகவும்,வல்லரசு(?) நாடாகவும்,இந்தியா தன்னிறைவடையாத (தண்ணீரும் வடியாத)நாடு! தண்ணீர் இருக்கிறதா?என ஆராய,சந்திரனுக்கு சந்திரயானும்,செவ்வாய்க்கு செங்கல்வராயனும் அனுப்ப பல்லாயிரம் கோடி ஏன் செலவழிக்க வேண்டும்?ஒரு ப்ளாஸ்டிக் படகு எடுத்துக் கொண்டு (வேளச்)ஏரிக்குள் கட்டப்பட்டிருக்கும் lake view apartments-க்கு மிக அருகாமையில் நிறைமாத நீரை பார்வையிடலாமே?

    அதிவேக புல்லட் ரயில்,அதிநவீன தொழில் நுட்ப முன்னேற்றம் இப்படிப்பட்ட நாளைய இந்தியப் பெருமையில் எருமை urine போக! அடிப்படை தேவைகள்,வேலை வாய்ப்புகள்,சாலை வசதிகள்,மாசற்ற காற்று,இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளும் இடரற்ற சக்தி,ஏழை மக்களும் எதற்கும் கையேந்தாமல் கவுரவமாக வாழும் உயர்நிலை இவைகளை வழங்க,வழங்கும் வரி பணத்தையெல்லாம் பயன்படுத்திவிட்டு பின்பு வுடலாம் ராக்கெட்டு! ஒரு சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 உயிர்களை மீட்ட போது எப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம்.ஆனால் இந்தியா என்ற சுரங்கத்திற்குள் இருந்து இத்தனை கோடி உயிர்களை மீட்க முடியாத இழிநிலையில் சுதந்திர தின மூவர்ண பல்லி மிட்டாய்களும்,குடியரசுதின பைக் சாகச கொண்டாட்ட செலவினங்கள் எதற்கு?



    ரேஷன் அரிசி வாங்கவே வக்கில்லாத போது, ஃபேஷன் ஷோ எதுக்கு? இப்படி நூறாயிரம் கேள்விகளில் தூக்கம் தொலைந்தது. நானோ,kpy பாலாவோ,அறந்தாங்கி நிஷாவோ இன்னும் சிலரின் உண(ர்)வு பொட்டலங்கள் செய்திக்கு செய்தி சேர்க்குமே தவிற, அடுத்த வேளை அடுப்புக்கு நெருப்பும்,அதில் பொங்க அரிசியும் சேர்க்காது. சமீபத்தில் கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்… இன்னும் 50 ஆண்டுகளில் என் காலத்திற்கு பிறகும் இந்தியாவிலேயே பறக்கும் கார்கள்(இப்போது மிதக்கும் கார்கள்) போன்ற அதியற்புத வளர்ச்சியை காணலாமென.

    அதை விட… இந்திய வரைபடத்தில், வறுமை கோடும் அதனடியில் சில எலும்புக் கூடும் வாழும் நிலை மாற வேண்டும். (நான் குற்றஞ்சுமத்துவது அரசியல்வாதிகளை அல்ல.பொருளாதாரம் சார்ந்த அரசியலை.அதை சீர் செய்ய தொலைநோக்குள்ள தன்னலமற்றவர்கள் தகுதி பெற வேண்டும்!) இது ஒரு தனிமனித சிந்தனை எனவே தவறு இருக்கலாம்.இருப்பின் பொருட்படுத்தாதீர்கள். இன்றும் இயன்றதைச் செய்து இடர் குறைப்போம்!" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை விமர்சித்து பலரும் பதிவிட்டு வந்தனர்.

    இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் பார்த்திபன் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "தேர்ந்தெடுக்கும் உடைகளில் ஒருவரது நாகரீகமும், பயன்படுத்தும் வார்த்தைகளில் அவர்களது தரமும் விளங்கும். என் கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். அது தனிநபர் தாக்குதலோ,ஒரு கட்சி சார்ந்த சாடலோ அல்ல.சுதந்திர இந்தியாவை இதுவரை பல கட்சிகள் ஆண்டுள்ளன. இன்றைய நிலைக்கு இதுவரை யாவும் காரணம். இது மாற… இனியொரு விதி செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


    மீட்கப்பட்ட நமீதா குடும்பம்

    இந்நிலையில், சென்னை, துரைப்பாக்கத்தில் 6 அடி உயர வெள்ளத்தில் சிக்கியிருந்த நடிகை நமீதா அவரது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகள், நாய்க்குட்டிகளை படகில் சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து.
    • பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள கந்தன்சாவடி பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக பெட்ரோல் பங்க் அருகில் இருந்தவர்கள் வேகவேகமாக வெளியேற்றப்பட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவுவதை தடுத்து நிறுத்தினர். தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓ.எம்.ஆர். சாலையில் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    ×