search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Clean Nagaram"

    தூய்மை நகரம் பட்டியலில் மொத்தம் உள்ள 485 நகரங்களில் சென்னை மாநகராட்சி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    சென்னை:

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாட்டில் உள்ள 4 ஆயிரம் நகரங்களை தூய்மையான நகரங்களாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.

    அதன்படி நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களை தூய்மை நகரங்களாக மாற்ற மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை நகரங்களை மதிப்பிட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சிகள் சார்பில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை, பொதுமக்களின் கருத்து ஸ்வச்சத்தா செயலி மூலம் பெறப்படும் புகார்கள் மீதான தீர்வு, திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுப்பது உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டு தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மதிப்பீட்டில் மொத்தம் உள்ள 434 நகரங்களில் சென்னை மாநகராட்சிக்கு 235-வது இடம் கிடைத்திருந்தது.

    இந்தநிலையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. இந்த பட்டியலில் மொத்தம் உள்ள 485 நகரங்களில் சென்னை மாநகராட்சி 100-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், 2-வது இடத்தை போபால், 3-வது இடத்தை சண்டிகர் ஆகியவை பிடித்துள்ளன.

    கடந்த ஆண்டு 4-வது இடத்தை பிடித்திருந்த திருச்சி இந்த ஆண்டு பின்தங்கியது. திருச்சி 13 வது இடத்தையும், கோவை 16-வது இடத்தையும், ஈரோடு 51-வது இடத்தையும் பிடித்துள்ளன. 4000-க்கு 2586.07 புள்ளிகள் பெற்று சென்னை 100-வது இடத்தை பிடித்துள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக அளவில் 1 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 28 நகரங்களில் சென்னை மாநகராட்சி 24-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சென்னை 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. திருச்சி முதல் இடத்தையும், கோவை 2-வது இடத்தையும், ஈரோடு 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    கன்டோன்மென்ட் வாரியங்கள் அளவிலான போட்டியில் தூய்மையான கன்டோன்மென்ட் விருதை டெல்லி பெற்றுள்ளது. சிறந்த செயல்பாட்டுக்கான விருதுக்கு சென்னை பரங்கி மலை கன்டோன் மென்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. #tamilnews

    ×