search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coalition rule disbursing"

    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. #RanilWickremesinghe #MaithripalaSirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

    அதில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இடம் பெற்றுள்ளன.

    இந்த 2 கட்சிகளுக்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் கொள்கை உருவாக்க மத்திய கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது. அதில் தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சமீபத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சந்தித்து பேசினர். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 2020-ம் ஆண்டுக்கு முன்பே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

    இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் ஆதரித்தனர்.

    விக்ரமசிங்கேவின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள 16 மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே அதிபர் சிறிசேனாவுக்கு இதுகுறித்து கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

    இத்தகைய நெருக்கடி காரணமாக கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலகும் முடிவை சிறிசேனா மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இலங்கை சுதந்திரா கட்சியின் மந்திரிகள் சிலர் கூட்டணி அரசில் இருந்து பதவி விலகினர். பின்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ் மற்றும் முஸ்லிம் மைனாரிட்டி கட்சி எம்.பி.க்கள் உதவியுடன் ரனில் விக்ரமசிங்கே முறியடித்தார். #RanilWickremesinghe #MaithripalaSirisena

    ×