search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coalition talks"

    கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும் என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #BJP #TamilisaiSoundararajan

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் இல்லை. ஜல்லிக்கட்டுக்கு முன்கூட்டியே அரசாணை வெளியிட்டதை வரவேற்கிறோம்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக ஒரு தீர்வு காண வேண்டும். அதேபோல் போராடும் விவசாயிகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் கொடுக்கப்பட்டு நீக்கம் செய்யப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உடனே சேர்க்க வேண்டும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் மத்திய அரசை குறை கூறுகிறார். மத்திய அரசின் திட்டங்களை மறைக்கிறார். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாடு செல்வதாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

    தற்போது வெளிநாட்டுக்கு இணையாக பாம்பன் பாலம் மாற்றப்படுகிறது என்பது ஒரு உதாரணம். இதே போல் இந்தியா சீனாவை மிஞ்சும் அளவுக்கு பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்பதை இப்போதே சொல்வது சரியாக இருக்காது.

    அடுத்த (ஜனவரி) மாதம் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம். அதனால் கூட்டணி நிச்சயம் இருக்கும்.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை விட சதவீதத்திலும், சாதனைகளிலும், மக்களை அணுகுவதிலும் எங்கள் கூட்டணி ஒரு பலமான கூட்டணியாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

    முத்தலாக் குறித்து அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா கூறிய கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. சிறுபான்மையின பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan

    ×