search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "college student death"

    அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சிலம்பரசன் (வயது 24).
    இவர் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை காரணமாக சொந்த ஊரான மொரப்பூருக்கு சிலம்பரசன் வந்தார். சிலம்பரசன் அதே பகுதியில் உள்ள அவரது நண்பர் அரவிந்தனுடன்  இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார்.

    இந்த நிலையில் மொரப்பூரில் இருந்து அரூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவகள் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் அரவிந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிலம்பரசன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோட்டக்குப்பத்தில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    கோட்டக்குப்பம்:

    கோட்டக்குப்பம் இந்திரா நகரை சேர்ந்தவர் வீரக்குமார். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 45). நேற்றுக் காலை 6 மணி அளவில் மகேஸ்வரி கோட்டக்குப்பம் சறுக்குபாலம் அருகே சென்று பால் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அங்கு சாலையை கடக்க முயன்றபோது காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மகேஸ்வரி மீது மோதியது. தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கார் மீதும் மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற தனியார் மருத்துவக்கல்லூரி பஸ் மீது மோதி அப்பளம்போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மகேஸ்வரி, மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பிள்ளைச்சாவடியை சேர்ந்த சிவக்குமார் (19), தமிழ்செல்வன் (23) மற்றும் காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஹேமனன் ரெட்டி (21) மற்றும் காரில் வந்த இவருடைய நண்பர் கிருஷ்ணன் (25) ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹேமனன் ரெட்டி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் பலியான ஹேமனன் ரெட்டி சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    மேலும் சாலையோரம் நின்ற தனியார் மருத்துவக்கல்லூரி பஸ்சில் அமர்ந்திருந்த ஊழியர்கள் சிலர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் வேலைபார்த்து வரும் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குடியாத்தம் அருகே தந்தை கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இன்று காலை அதே போல் சங்கர் பார்கவியை பைக்கில் அழைத்து சென்றார். பள்ளிகொண்டா அருகே உள்ள ஐதர்புரம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது நிலை தடுமாறிய பார்கவி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி பார்கவி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    நாகர்கோவிலில் பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள தடிக்காரன்கோணம் வில்ஸ் நகரை சேர்ந்தவர் டைட்டஸ். கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தில் காவலாளி. இவருடைய மகன் ஜினோ (வயது 19). இவர் பிள்ளையார்புரம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவருடன் அதே கல்லூரியில் படிக்கும் மேலபுத்தேரி பகுதியை சேர்ந்த விஷ்ணுவும் (18) சென்றார். ஜினோ மோட்டார் சைக்கிளை ஓட்டினார். விஷ்ணு பின்னால் அமர்ந்து இருந்தார்.

    இவர்கள் நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை ஜினோ முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் பஸ் மீது உரசியதாக தெரிகிறது.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் ரோட்டில் விழுந்தனர். அப்போது பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி ஜினோ படுகாயம் அடைந்தார். அவருடைய நண்பர் விஷ்ணுவும் காயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 2 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜினோவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜினோ பரிதாபமாக இறந்தார். விஷ்ணுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பஸ் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவன் பலியான சம்பவம் சக மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    கே.வி.குப்பம் மேல்மாயிலில் காளை விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் கிராமத்தில் காளை விடும் விழா நடைபெற்றது. இதில் கே.வி.குப்பம், குடியாத்தம், பரதராமி, ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்து அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

    போட்டியில் கலந்துகொண்ட காளை ஒன்று அருகே உள்ள நிலத்தின் வழியாக ஓடி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த காளை நிலத்தில் இருந்த தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தது. இதனைக்கண்ட இளைஞர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். '

    குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் சுமார் 1 மணி நேரம் போராடி கிணற்றில் இருந்து காளையை உயிருடன் மீட்டனர்.

    கிணற்றுக்குள் விழுந்ததில் காளையின் கால் முறிந்தது. உடனடியாக மீட்கப்பட்ட காளைக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக வேலூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டியதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும் பலத்த காயம் அடைந்த 8 பேர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் குடியாத்தத்தை அடுத்த தாழையாத்தம் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் தினேஷ்குமார் (வயது 20) என்பவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான தினேஷ்குமார் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    காளைவிடும் திருவிழாவில் உதவி கலெக்டர் மெகராஜ், காட்பாடி தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, இருதயராஜ் உள்பட 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளை பள்ளம் ஆவுடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மணிகண்டன் (வயது 19) தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு அவர் அதே பகுதி பாரதியார் 1-வது தெருவைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலகணேசுடன் (15) அருகில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    எம்.ஜி.ஆர். நகர், அண்ணா மெயின் ரோடு அழகிரிசாமி சாலை சந்திப்பில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

    இதில் தலையில் படுகாய மடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பாலகணேஷ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். #caraccident

    ஆம்பூர்:

    பேர்ணாம்பட்டு மளிகை தெருவை சேர்ந்தவர் முகமதுசபான் (வயது22). வாணியம்பாடியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்கள் முகமது இம்ரான் (22). உசேன் (21). முசமில் (22). சல்மான் (22). துபால் (21). மற்றொரு சல்மான் (21). ஆகியோருடன் நேற்று மாலை குடியாத்தம் மேல்ஆலத்தூரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு காரில் சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து ஏலகிரி மலைக்கு சென்றனர். அங்கிருந்து நள்ளிரவு வீட்டிற்கு காரில் திரும்பினர். ஆம்பூர் அருகே அய்தம்பட்டு சின்னவரிக்கம் கூட்ரோடு அருகே வந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே முகமதுசபான், முகமது இம்ரான், உசேன் ஆகிய 3 பேர் பலியாகினர். இறந்த 3 பேரும் கல்லூரி மாணவர்கள்.

    இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை இடிபாடுகளில் இருந்து மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழிலேயே முசமில் உயிரிழந்தார். துபால், சல்மான் மற்றொரு சல்மான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த 4 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  #caraccident

    ஊத்தங்கரை அருகே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே புதூர்பூகுனை பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    அந்த மாணவியின் தாயார் கணவரை பிரிந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில் பணியாற்றி வருகிறார்.

    இதனால் மாணவி தனது தாத்தா- பாட்டியுடன் புதூர் பூகுனை பகுதியில் வசித்து வந்தார். இங்கிருந்து தான் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் அவதியடைந்தார்.

    இதுகுறித்து அவரது தாத்தா கோவையில் உள்ள மாணவியின் தாயாருக்கு தகவல் கொடுத்தார். அவர் தனது மகளை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு கல்லூரி மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், மாணவியின் வயிற்றில் 7 மாத குழந்தை இறந்து கிடப்பதாகவும் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஆபரேசன் மூலம் இறந்த குழந்தையை வெளியே எடுத்தனர்.

    கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து அந்த மாணவியை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

    இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி மாணவி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாயார் ஏற்கனவே ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், அதில் மாணவி கர்ப்பம் அடைந்ததும் அந்த தகவலை மாணவியும், தமிழரசனும் மறைத்தது தெரியவந்தது.


    இதைத்தொடர்ந்து தமிழரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தற்போது மாணவி இறந்துவிட்டதால் தமிழரசன் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட உள்ளது. 

    சேலம் அருகே, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தர்மபுரியை சேர்ந்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஈச்சம்பட்டி வெள்ளையன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் மதியழகன் (வயது 20). இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23-ந் தேதி சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் ஒரு ஓட்டலின் பின்புறத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மதியழகனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    தொடர்ந்து அவர் மயங்கிய நிலையில் இருந்ததால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரிக்க முடியவில்லை. இருப்பினும் ஆஸ்பத்திரியில் நாளுக்கு நாள் அவரது நிலைமை மோசமானது. தன்னை தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது அவரது கழுத்தை வேறு நபர்கள் அறுத்தார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இந்த நிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் மதியழகன் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார்.  இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மாணவர் மதியழகனுக்கு அவரது பெற்றோர் ஆசை, ஆசையாய் விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த செல்போனையும், மடிக்கணினியும் தொலைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். தாங்கள் வாங்கி கொடுத்த செல்போனை பாதுகாப்பாக வைக்க முடியவில்லை. நீ எப்படி படிக்கப்போகிறாய்? என்று எங்களுக்கு தெரியவில்லை என கண்டித்து சத்தம் போட்டுள்ளனர். இதனால் மனம் உடைந்த மதியழகன் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சேலத்திற்கு வந்துள்ளார்.

    பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றி விவரம் பெற்றோருக்கு தெரியவில்லை. இதனால் அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 23-ந் தேதி பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து மதியழகனை தேடி வந்தனர். ஆனால் அதேநாளில் சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் கழுத்து, இடது கை அறுக்கப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டார். ஆனால் மயக்க நிலையில் இருந்ததால் அவரிடம் எங்களால் வாக்குமூலம் பெறமுடியவில்லை.

    இவ்வாறு போலீசார் கூறினர்.

    இது ஒருபுறம் இருக்க, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையில் அவரை மர்ம ஆசாமிகள் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை அருகே விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 22). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வந்தார். தினமும் அதிகாலையில் புறப்பட்டு பீளமேடு காந்திமாநகரில் உள்ள 2 மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். பின்னர் கல்லூரிக்கு செல்வது வழக்கம். இன்று அதிகாலை காங்கயம்பாளையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    சூலூர் பெரியகுளம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே அப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுரேஷ் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட கல்லூரி மாணவர் சதீஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சுரேஷ் லேசாக காயத்துடன் தப்பினர்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நிலக்கோட்டை அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் திருப்பதி ராஜா (வயது 20). திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சகோதரி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் திரும்பினார். செம்பட்டி வந்த சகோதரியை அழைப்பதற்காக நிலக்கோட்டையில் இருந்து பைக்கில் திருப்பதி ராஜா சென்றுள்ளார்.

    செங்கோட்டை பிரிவு பகுதியில் வந்த போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரியின் அடியில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த திருப்பதி ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து நிலக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரித்து வருகிறார்.

    மன்னார்குடி அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    சுந்தரக்கோட்டை:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் மாதேஷ்குமார் (வயது17). இவர் நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பர்களுடன் மன்னார்குடி அருகே உள்ள அம்மா குளத்தில் குளிக்க சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மாதேஷ்குமார் குளத்தில் மூழ்கி மாயமானார். இதனால் பதற்றம் அடைந்த அவருடைய நண்பர்கள் கூச்சல் போட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதுபற்றி மன்னார்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கி மாயமான மாதேஷ் குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவர் குளத்தில் மூழ்கி பலியாகி விட்டது தெரியவந்தது. குளத்தின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இதைத் தொடர்ந்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×