search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "community shower"

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    கரூர்:

    கரூர் பசுபதீஸ்வரர் கோவில் அருகேயுள்ள ஒரு மண்டபத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை சார்பில் 160 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையாக வழங்கும் புடவை, வளையல், மஞ்சள்- குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் தாம்பூலத்தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட் டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணிகளுக்கு வழங்கி வாழ்த்து கூறினார். பின்னர் வழக்கமாக வளைகாப்பு விழாக்களில் நடத்தப்படும் சம்பிரதாய சடங்குகள் அந்த கர்ப்பிணிகளுக்கு செய்யப்பட்டு, குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-

    கர்ப்ப காலத்தில் சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். மேலும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், இனிமையான இசைகளை கேட்பது, நல்ல புத்தகங்களை படிப்பது போன்றவைகளை செய்வதன் வாயிலாக நம் மனம் அமைதிபடுவதோடு அதன் பிரதிபலன் குழந்தைகளுக்கும் கிடைக்கும். எந்த ஒரு தாய்க்கும் தன் குழந்தை பேர் சொல்லும் பிள்ளையாக சமூகத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே ஆசை. எனவே அதற்கேற்ற வகையில் குழந்தைகளுக்கு அறிவார்ந்த கதைகளை எடுத்துக்கூறி சமூக அக்கறையுடையவராக வளர்க்க வேண்டும். கர்ப்பிணிகள் மன அமைதி கொண்டு கோபப்படாமல் இருக்க வேண்டும். கோபப்படுவதன் மூலம் வயிற்றில் வளரும் சிசுவிற்கும் அந்த உணர்வு பாதிக்கும். நீங்கள் உங்களுக்காக சேர்த்து வைக்கும் ஒரே சொத்து நீங்கள் பெற்றெக்கக்கூடிய பிள்ளை. அந்த சொத்தை உருவாக்கக்கூடிய சிற்பி நீங்கள். நீங்கள் கொடுக்கக்கூடிய உணவு, மன அமைதி, கேட்கக்கூடிய சொல், செயல் இவை அத்தனையும் சார்ந்ததுதான் உங்கள் குழந்தையின் வளர்ச்சி. உங்கள் குழந்தையை சிறந்த குழந்தையாக வளர்க்க வேண்டுமென்றால் மனம் மற்றும் உடல் இரண்டையும் வலிமையாக வைத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பரிமளாதேவி, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனர் நிர்மல்சன், வட்டாட்சியர் ஈஸ்வரன், குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி சபிதா மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் சிவசாமி, சாகுல்ஹமீது, மார்க்கண்டேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×