search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "comparisons"

    அந்த காலத்து பேட்ஸ்மேன்களையும், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களையும் ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றது என தெண்டுல்கர் கூறியுள்ளார். #SachinTendulkar #ViratKohli
    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து, தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் கோலி (38 சதம்) தகர்த்து விடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இருவரது சாதனைகளையும் ஒப்பிட்டு நிறைய விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-



    ஒரு வீரராக விராட் கோலியின் வளர்ச்சியை பார்த்தால், மிக பிரமாண்டமாக உள்ளது. அவரது ஆட்டத்தில் எப்போதுமே அனல் பறக்கும். உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக அவர் வருவார் என்று நான் எப்போதும் நினைப்பது உண்டு. இந்த தலைமுறையில் மட்டுமல்ல, அனைத்து காலத்திலும் சிறந்த வீரர்களில் ஒருவராக அவர் இருப்பார். என்னையும், அவரையும் அடிக்கடி ஒப்பிட்டு பேசுகிறார்கள். அப்படி நீங்கள் ஒப்பிட்டு பேசினால், அதற்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை கிடையாது. ஏனெனில் 1960, 70, 80, 90-களில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் விதவிதமான பவுலர்கள் அந்த காலக் கிரிக்கெட்டுக்கு ஏற்றபடி இருந்தார்கள். தற்போது எந்த மாதிரியான பவுலர்கள் இருக்கிறார்கள், அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பாருங்கள்.

    கிரிக்கெட் தொடங்கிய முதல் நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து அந்த விளையாட்டில் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையினர் விளையாடும் போதும் வித்தியாசமான விதிமுறைகள், கட்டுப்பாடுகள், வெவ்வேறான ஆடுகளங்கள், மாறுதல் செய்யப்பட்ட பந்துகள் என்று எத்தனையோ மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மைதான எல்லையும் மாறி விட்டது. முந்தைய காலக்கட்டத்தில் எல்லைக்கோடு விரிவாக இருந்ததால், பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதே கடினமாக இருந்தது. எனவே அந்த காலத்து பேட்ஸ்மேன்களையும், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களையும் ஒப்பிட்டு பார்ப்பது தேவையற்றது. அதை நான் நம்புவதும் இல்லை.

    இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.
    ×