search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "compulsory"

    புதுச்சேரியில் நாளை முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா கூறினார். #Helmet #TwoWheeler
    புதுச்சேரி:

    புதுவையில் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கட்டாய ஹெல்மெட் திட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ஹெல்மெட் அணிவது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் 648 பேர் இறந்துள்ளனர். இதில் 322 பேர் ஹெல்மெட் அணியாததாலேயே உயிரிழந்துள்ளனர். எனவே நாளை (திங்கட்கிழமை) முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கை சந்திக்க வேண்டியது இருக்கும்.

    ஹெல்மெட் அணியாதவர்களுக்கு முதலில் ரூ.100 அபராதம் விதிப்போம் அல்லது அதற்கான ரசீது கொடுப்போம். 3-வது முறை ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்படும். காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவதும் அவசியம். இதை மீறுவோருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×