search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conditional budget"

    3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது.

    பட்ஜெட் கூட்டத்தை 27-ந்தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களான பா.ஜனதாவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை சபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 19-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் சபையை ஒரு வாரம் முன்னதாக 19-ந்தேதியே முடித்தனர்.

    அதேநாளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்பிற்கு தடையில்லை என்பதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என உத்தரவிட்டது.

    இதற்கிடையே யூனியன் பிரதேசமான புதுவையில் பட்ஜெட்டிற்கு கவர்னரின் ஒப்புதல் பெற்று சபையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் கவர்னர் பட்ஜெட் நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாமலேயே சபையை சபாநாயகர் வைத்திலிங்கம் ஒத்திவைத்தார்.

    பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு பென்‌ஷன் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. அரசே முடங்கும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் பட்ஜெட்டிற்கு நிபந்தனையுடன் ஒப்புதல் அளித்துள்ளதாக கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    இன்று மின்துறை அலுவலகத்திற்கு ஆய்வு செய்ய வந்த கவர்னர் கிரண்பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-


    புதுவையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டமன்றத்தில் செயல்படவும் கலந்து கொள்ளவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை சட்டமன்றத்தில் நிறைவேற்ற நிபந்தனை விதித்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளித்துள்ளேன்.

    இதற்கான கோப்பு கையெழுத்திட்டு அனுப்பப்பட்டுள்ளது. 26-ந்தேதி வரை சட்டமன்றத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் விரைவில் சட்டமன்றத்தை கூட்டி நிதி மசோதாவிற்கு அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PuducherryAssembly #Kiranbedi
    ×