search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Constituency Executives"

    • 2-வது கட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது.
    • திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதால் அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து பாராளு மன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் முக்கிய பொறுப்பாளர்களிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

    ஒவ்வொரு நிர்வாகிகள் கூறும் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக தொகுதி நிர்வாகி களை சந்தித்து முடித்த பிறகு தற்போது 2-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு கலந்துரையாடல் நடைபெறுகிறது.

    இன்று காலையில் திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதற்காக அவர் காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்துக்களை கூறினர்.

    திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அ.தி.மு.க.வின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பகல் 2 மணி வரை ஆலோசனை நடைபெற்றது.

    மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். நிர்வாகிகளுக்கு தன்னம்பிக்கையுடன் புத்துணர்வு அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சனி, ஞாயிறு இரு நாட்களும் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. மீண்டும் 29-ந் தேதி திங்கட்கிழமை முதல் கூட்டம் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    ×