search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "continue stirck"

    பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வலியுறுத்தி மராட்டியத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடந்தது. பால் வாகனங்களை தடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    மும்பை:

    மராட்டியத்தில் பால் கொள்முதல் விலையை ரூ.5 அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் விவசாய அமைப்புகள் போராட்டத்தை தொடங்கின. போராட்டத்தையொட்டி விவசாயிகள் மாநிலம் முழுவதும் மும்பை, புனேக்கு வரும் பால் வாகனங்களை தடுத்தி நிறுத்தி வருகின்றனர்.

    இந்த போராட்டம் சாங்கிலி, கோலாப்பூர், மரத்வாடா மற்றும் கொங்கன் மண்டலங்களில் தீவிரமாக நடந்து வருகிறது.

    போராட்டத்தின் 2-வது நாளான நேற்றும் விவசாயிகள் மற்றும் சுவாபிமனி சேத்காரி சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்பினர் பால் வாகனங்களை வழிமறித்து, அதில் இருந்த பாலை சாலையில் கொட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளை ரோட்டில் வீசி அழித்தனர். இதேபோல பல இடங்களில் விவசாயிகள் ஏழை மக்களுக்கு பாலை இலவசமாக வழங்கினர். மேலும் விவசாயிகள் பாலில் குளித்தும், மாடுகளை பாலில் குளிக்க வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்தாராவில் பால் லாரிகளை வழிமறித்து நிறுத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். புனே, உஸ்மனாபாத், புல்தானா, அகமதுநகர், நாசிக், கோலாப்பூர், சாங்கிலி, அவுரங்காபாத், சோலாப்பூர் ஆகிய இடங்களில் போராட்டக்காரர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே சுவாபிமனி சேத்காரி சங்க தலைவர் ராஜூ ஷெட்டி எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் மராட்டியம்- குஜராத் எல்லையில் பால்கர் மாவட்டம் தலசாரியில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பால் லாரிகள் மும்பைக்கு செல்கிறதா என பார்வையிட்டார்.

    பின்னர் இதுகுறித்து ராஜூ ஷெட்டி எம்.பி. கூறுகையில், ‘சாங்கிலி, கோலாப்பூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது’ என்றார்.

    இந்தநிலையில் பால் தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் நேற்று கோலாப்பூர் பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் இருந்து 18 டேங்கர் லாரிகளில் கோகுல் நிறுவன பால் மும்பைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 10 பால் டேங்கர் லாரிகள் மும்பைக்கு அனுப்பி வைக்கப்படலாம் என தெரிகிறது.

    இதற்கிடையே பால் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து பால் விவசாயிகள் கோரிக்கை குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று அனைத்து கட்சி தலைவர்களுடன் நாக்பூரில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, எம்.எல்.சி. சுனில் தத்காரே, ஹமன்த் தாக்லே, நீலம் கோரே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். 
    ×