என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona"

    • பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா பரவுவதை அடுத்து இந்தியாவில் இது தொடர்பாக முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. வெளிநாட்டு விமான பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். 

    இந்நிலையில், இன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா உறுதியான மாதிரிகளை மரபணு ஆய்வகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உருமாற்றம் பெற்ற கொரோனா இருப்பது கண்டுபிடிப்பதற்கு இந்த பரிசோதனை பயன்படும்.

    சீனாவில் பிஎப் 7 கொரோனா அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தியாவில் தற்போது 10 வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பதும், மேலும் பிஎப் 7 இருப்பது கண்டறியவும் மரபணு ஆய்வு உதவும்.

    மேலும் மருத்துவமனையில் போதிய அளவு படுக்கைகள், உபகரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பண்டிகைக் காலம் என்பதால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர பொது இடங்களில் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி சர்வதேச விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு இச்சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் குறிப்பிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்திலும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் அனைத்து விமான நிலையங்களிலும் இன்று முதல் கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கியது.

    சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை விமான நிலையத்தில், சர்வதேச முனையத்தில் வருகைப் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை சுகாதாரத் துறையினர் தொடங்கியுள்ளனர்.

    இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையம் பயணிகள் வருகை பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைத்து உள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்த பரிசோதனை நடக்கிறது.

    இந்த நாடுகளில் இருந்து நேரடி விமானங்கள் இல்லாமல், இணைப்பு விமானங்களில் பயணிகள் மாறி வருவதால், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு சதவீதம் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடக்கிறது. அந்த இரண்டு சதவீதம் பயணிகள் யார்? என்பதை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்து அறிவிக்கின்றன.

    விமானங்களில் வரும்போது சோர்வாக, இருமல் சளி மற்றும் காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்றவைகளுடன் இருக்கும் பயணிகளை, இவ்வாறு இரண்டு சதவீத பரிசோதனைக்கு உட்பட்ட பயணிகளாக, தேர்வு செய்கின்றனர். குறிப்பாக வெளி நாட்டவர்களுக்கு, இந்த பரிசோதனைகள் அதிகமாக நடக்கின்றன.

    இவர்கள் தவிர மற்ற பயணிகள் விருப்பப்பட்டால் அவர்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    12 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளான பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் பரிசோதனை கிடையாது. ஆனால் அவர்களில் யாருக்காவது, இருமல், சளித்தொல்லை போன்றவைகள் அதிகமாக இருந்தால், அவர்களுக்கும் பரிசோதனை நடக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இவ்வாறு பரிசோதனைக்கு உட்படும் பயணிகள் சிறிது நேரத்தில் தங்களுடைய பரிசோதனை முடிவுகளை வாங்கிவிட்டு செல்லலாம். அந்தப் பரிசோதனை முடிவில், அவர்களுக்கு பாதிப்பு இருப்பது தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதோடு அந்த பயணிகள் மருத்துவமனைகள் அல்லது அவர்களின் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவில் உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
    • நகர்மன்ற தலைவர் சாதிர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.

    தென்காசி:

    இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடாமல் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முக கவசத்தை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் கே. என்.எல். சுப்பையா ஆகியோர் இணைந்து நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசங்களை வழங்கினர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெளிநாட்டு பயணிகளுக்கு தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
    • மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி சுகாதார துறை இணை இயக்குநர் அர்ஜுன் குமார் அறிவுறுத்தலின்படி மதுரை விமான நிலைய சுகாதார துறை மேற்பார்வையாளர் தங்கச்சாமியின் தலைமையில் சுகாதாரத் துறையினர் மதுரை வரும் விமான பயணிகளிடம் பரிசோதனை செய்கின்றனர்.

    அரசு அறிவித்துள்ள விதிகளின்படி விமான பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும். கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை வரும் வெளிநாட்டு விமான பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் கொரோனா தொற்று இருந்தால் அனைத்து பயணிகள் இருப்பிடத்திற்கு சென்று சுகாதாரத்துறை யினரால் தனிமைப்ப டுத்தப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று துபாயில் இருந்து மதுரை வந்த பயணிகள் 187 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் கொரோனா அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இன்று (25-ந்தேதி) கொழும்பில் இருந்து மதுரை வந்த விமான பயணிகள் 87 பேரில் 2 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
    • சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களுக்கு சீனா, ஜப்பான், ஹாங்காங், தைவான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    மேலும் சென்னை, கோவை , மதுரை, திருச்சி உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. என கூறினார்.

    • இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
    • அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மொத்தமாக 1,100 படுக்கைகள் உள்ளன.

    நெல்லை:

    சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பிஎப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது.

    இதனால் இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது.

    கொரோனாவால் ஏற்படும் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ள சிறப்பாக தயாராகும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நோய்த்தடுப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    அதன்படி தமிழகத்திலும் இன்று ஒத்திகை நடை பெற்று வருகிறது. நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஒத்திகை பயிற்சிகளை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதிகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

    இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் கூறுகையில், கடந்த முறை கொரோனா தொற்று பரவலின் போது அதற்கென ஒதுக்கப்பட்ட வார்டுகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. சுமார் 160 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. இதில் 20 படுக்கைகள் ஐ.சி.யூ. பிரிவுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர 2 ஆக்சிஜன் பிளான்டுகளும் ஏற்கனவே தயார் படுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து படுகைகளுக்கும் ஆக்சிஜன் இணைப்புகளும் தயாராகவே உள்ளது. கொரோனா பரவலையொட்டி தற்போது இந்த வார்டுகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

    முதல் கட்டமாக 300 நோயாளிகள் வரை சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,100 படுக்கைகள் உள்ளன. அது வரையிலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வந்தாலும் சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் உள்ளோம் என்றனர்.

    • பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க புதுக்கோட்டை கலெக்டர் அறிவுறுத்தினார்
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக அரசு உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோவிட் சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார். மேலும் கோவிட் பாதிப்பு அதிகம் தென்படும் நாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத்தரும் பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கோவிட் தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதை உறுதி செய்யவும், பரிசோதனைகள் முடிவுகள் வரும் வரை அவர்களை தொடர்ந்து கண்காணித்திடவும் கலெக்டர் கவிதா ராமு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தேவையான இடங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பரிசோதனை முடிவுகளை விரைவில் வெளியிடவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கவும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தொடர்ந்து கண்காணித்திடுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவ அலுவலர்களுடன் கலெக்டர் கவிதா ராமு ஆலோசனை நடத்தி மேற்கொண்டார். எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றவும், கைகளை சோப்புப் போட்டு கழுவவும், முகக்கவசம் அணிவதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, ஊரக நலப்பணி இணை இயக்குநர் ராமு, சுகாதாரப்பணி துணை இயக்குநர் இராம்கணேஷ், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


    • மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது.
    • கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    மதுரை

    சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை மையங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்கான முன்னேற்பாடு பணிகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

    அதன்படி மதுரை அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஒத்திகை நடந்தது.

    நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் போது அவர்களை எப்படி அணுக வேண்டும்? நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, சிகிச்சைக்கு அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஒத்திகை நடத்தப்பட்டது.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன், முழுக்கவசம் ஆகியவற்றின் இருப்பு நிலவரம் குறித்து டீன் ரத்னவேல், மருத்துவக் குழுவினருடன் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த சிகிச்சை மையத்தில் உள்ள ஆக்சிஜன் வெண்டிலேட்டர் கருவி, ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்டெரெச்சர்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் டீன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு என்பது தற்போது ஜீரோ நிலையில் உள்ளது.

    கொரோனாவை எதிர்கொள்ள தேவையான அனைத்து எற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என்றார்.

    • சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியில் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
    • நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட தப்பகுட்டை கருப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் வயது( 37 ). இவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று முந்தினம் இவர் சொந்த ஊரான தப்பகுட்டை வருவதற்காக சீனாவில் இருந்து தனது மனைவி நாக மலர்விழி(30) மற்றும் மகன், மகளுடன் புறப்பட்டு வந்தார். கோவை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    பின்னர் நேற்று அதிகாலை தப்பக்குட்டை யில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனிடையே நாகராஜுக்கு கொரோனா பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்தது. இதை தொடர்ந்து அவருக்கு எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துசாமி தலைமையில் மருத்துவக்குழுவினர் தப்பக்குட்டைக்கு விரைந்தனர். அங்கு நாகராஜ் மற்றும் அவரது வீட்டினரை தனிமையில் இருக்க அறிவுரை வழங்கினர். இதயடுத்து நாகராஜ் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவருடன் அவரது தந்தை கிருஷ்ணராஜ்(65), தாயார் சரோஜா(55) ஆகியோரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    • நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
    • புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

    புதிய உருமாறிய கொரோனாவும் பரவ தொடங்கியுள்ளது. புதுவையில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்து வந்தது. இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு கொரோனா தொற்று மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    புதுவையில் ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 9, காரைக்காலில் ஒருவர் என 10 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புதுவையில் 22, காரைக்காலில் 3, ஏனாமில் 5 பேர் என மொத்தம் 30 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

    புதுவை, காரைக்கால், ஏனாமில் தலா ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 90 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    பொது இடங்களில் பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
    • பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி வெள்ளாத்தான்கரைப்புதூர் பகுதியைச் சேர்ந்த 65 வயது பெண்ணுக்கு காய்ச்சல் ,சளி இருந்தது.உடனே அவர் வெள்ளகோவிலில் உள்ள தனியார் ரத்தப் பரிசோதனை கூட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வீட்டிலேயே அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. வேலப்பநாயக்கன் வலசு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது.
    • தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 169 ஆக இருந்தது. நேற்று 240 ஆக உயர்ந்த நிலையில், இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 86 ஆயிரத்து 879 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 53 ஆயிரத்து 668 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று 164 பேர் அடங்குவர்.

    தொற்று மீட்பு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நேற்றை விட 104 அதிகமாகும். அதாவது தற்போது 2,439 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் புதிதாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,772 ஆக நீடிக்கிறது.

    ×