search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone fani alert"

    புதுவைக்கு பாணி புயல் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நாராயணசாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #narayanasamy #CycloneFani #imd

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் 2 நாட்களில் புயலாக மாறி புதுவை, தமிழக கடலோரத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த புயலுக்கு பாணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயலின் காரணமாக கடல் சீற்றமாக காணப்படும். இன்று முதல் கடலில் 40 முதல் 55 கி.மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. புயலின் காரணமாக தமிழகம், புதுவைக்கு உச்சக்கட்ட பாதிப்பு ஏற்படும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார் மற்றும் துறை செயலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 29, 30-ந்தேதி, மே 1-ந் தேதி வடகிழக்கு பகுதியில் பாணி என்ற புயல் அடிக்க ஆரம்பித்து புதுவை, தமிழக கடலோரத்தில் வடக்கு பகுதியில் 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.

    புதுவையில் 20 செ.மீ. வரை மழை பொழியும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. உச்சகட்டமான புயல் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் அறிவித்துள்ளனர்.

    ஏற்கனவே தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் அதிகாரிகளை அழைத்து பேசி புயலை எதிர்கொள்ளவது குறித்து கூட்டம் நடத்தி உள்ளனர்.

    தற்போது நானும், அமைச்சர்களும் அதிகாரிகள் எந்தெந்த நிலையில் தயாராக உள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள கூட்டம் நடத்தி உள்ளோம். புயல் அடிக்கும் சமயத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வது, அவர்களுக்கு குடிநீர், உணவுக்கு ஏற்பாடு செய்து குடிசை வீடுகள் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய ஏற்பாடுகள்,

    மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருக்க எச்சரிக்கை அறிவிப்பு செய்வது, புயல் வரும் போது மின்சாரம் தடை பட்டால் மின்கம்பிகள் அறுந்து விழாமல் தடுக்கவும், அறுந்து விழும் பகுதியில் மின்சாரத்தை தடை செய்யவும் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை தாழ்வான பகுதியில் தண்ணீரை அகற்றுவது. உள்ளாட்சித்துறை தேங்கிய நீரை வெளியேற்றுவது. வருவாய்த்துறை சார்பில் நிவாரண உதவிகளை செய்வது. உயிர் சேதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது.

    மரங்கள் பெயர்ந்து விழுந்தால் அவற்றை அகற்றுவது, விவசாயம் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

    பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று மாலை துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்த உள்ளார். பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஷாஜகான் நாளை காலை துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த உள்ளார்.

    பொதுப்பணி, உள்ளாட்சி, மின்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு அதிகாரிகள் களப்பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.

    கஜா புயல் வந்தபோது மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமையில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றினர். இதில் பெற்ற அனுபவத்தை கொண்டு புதுவையில் பாணி புயல் வரும்போது அதை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருப்பார்கள்.

    நானும், அமைச்சர்களும் களப்பணியில் இறங்கி மக்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம். அனைவரும் ஒரு அணியாக நின்று பாணி புயலை எதிர் கொள்ள புதுவை அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #narayanasamy #CycloneFani #imd

    ×