search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone hit areas"

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். #GajaCyclone #EdappadiPalaniswami #CentralTeam
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழு, இன்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    அப்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எப்போது ஆய்வு செய்வது? அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.   இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு அதிகாரிகளுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.



    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடலாம் என தெரிகிறது.

    கஜா புயல் ஏற்படுத்திய சேத  விவரங்களை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.   #GajaCyclone #EdappadiPalaniswami  #CentralTeam
    ×