search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Farmers marching"

    டெல்லியில் இன்று பாராளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தினர். எனினும், அவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது. #Farmersmarch #marchingtoParliament #Delhifarmersmarch
    புதுடெல்லி:

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும், பாராளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லவும் விவசாயிகள் முடிவு செய்தனர். இதையடுத்து 29 மாநிலங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து, “அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு” உருவாக்கப்பட்டது.

    கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதிலும் இருந்து இந்த அமைப்பு மூலம் டெல்லி நோக்கி விவசாயிகள் அழைக்கப்பட்டனர். டெல்லிக்கு அருகே உள்ள மாநிலங்களின் விவசாயிகள் பஸ் மற்றும் கார்களில் டெல்லியில் குவிந்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட 24 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ரெயில்கள் மூலம் டெல்லி வந்து சேர்ந்தனர்.

    நேற்று பிற்பகல் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் திரண்டனர். டெல்லியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு பேரணியாக சென்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டப்படி சென்றதால் டெல்லி குலுங்கியது. அவர்களுடன் டெல்லி பல்கலைக்கழக மாணவ- மாணவிகளும் சேர்ந்து கொண்டு கோ‌ஷமிட்டனர்.

    டெல்லி புறநகரின் நாலாபுறத்தில் இருந்தும் வந்த விவசாயிகள் ராம்லீலா மைதானத்தில் ஒன்று திரண்டனர். அங்கு அவர்கள் “கடன் இல்லாத விவசாயி - தற்கொலை இல்லாத இந்தியா” என்று குரல் எழுப்பினார்கள். சில விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள், “அயோத்தி வேண்டாம், விவசாயி வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.



    ராம்லீலா மைதானத்தில் இருந்து பாராளுமன்றம் நோக்கி இன்று பேரணியாக செல்லப் போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன. ஆனால், பாராளுமன்றம் நோக்கி பேரணியாக வரக்கூடாது என்று போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி  செல்ல முயன்றால் கைது செய்யப்படுவார்கள் என்று டெல்லி போலீசார் அறிவித்தனர்.

    ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜந்தர் மந்தர் பகுதிவரை பேரணி செல்ல டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். பேரணி செல்லும் பாதையில் சுமார் 3,500 போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 11 மணியளவில் ராம்லீலா மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

    தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் படங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் பேரணியாக சென்றதால் டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக டாக்டர்கள், வழக்கறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களாக சுமார் ஆயிரம் பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    பாராளுமன்ற சாலை காவல் நிலையத்தை நெருங்கியதும் பாராளுமன்றத்தை நோக்கி முன்னேறி செல்லாதவாறு இந்த பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்தவாறு தங்களது கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டவாறு விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடையே விவசாய சங்க தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். #Farmersmarch #marchingtoParliament #Delhifarmersmarch
    ×